திங்கள், 8 ஏப்ரல், 2013

தென் கொரிய அன்பருக்கு நன்றி









Kallery.net என்ற தளத்தின் வாயிலாக தென் கொரிய நாட்டிலிருந்து அன்பர் ஒருவர் தொடர்ந்து எம் வலைப்பூவிற்கு வருகை தருகிறார்.

அந்த நண்பர் பணி  நிமித்தமாக தமிழகத்திலிருந்து தென்கொரியா சென்று குடியேறியவராக இருக்கலாம்.அல்லது அந்நாட்டின் குடிமகனாகக் கூட இருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அன்பரின் தொடர்ந்த வருகைக்கு எமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.




அவர் மென்மேலும் வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

எம்.ஜி.ஆரின் கடிகாரம் ஓடுகிறது












இங்கே நீங்கள் பார்க்கின்ற படங்கள் கடந்த மார்ச் மாதம்  22ஆம் நாளன்று எடுக்கப்பட்டவை. இடம் எதுவென தெரிகிறதா..?  ஆமாம் .அது எம்.ஜி.ஆரின் நினைவிடம்தான்.   சரி  இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிகிறதா ?
அவர்கள் எம் ஜி.ஆரின் கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிற 'டிக்,டிக்' ஒலியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


எம்.ஜி.ஆர் மரணமடைந்த பிறகு  அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடமும் எழுப்பப்பட்டது.அதன் பிறகு நினைவிடத்திற்குச் சென்ற மக்களுக்கு எவராலோ ஒரு செய்தி சொல்லப்பட்டது.


எம்.ஜி.ஆர் எபபோதும் அணிந்திருந்த அந்த பெரிய 'Rado' கைக்கடிகாரம் அவருடனேயே புதைக்கப்பட்டதாகவும் அது இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாக வும் சமாதியின் மீது காது  வைத்துக் கேட்கும்போது அது ஓடும் சத்தம் காதில் விழுவதாகவும் சொல்லப்பட்ட அந்த செய்தியை தாங்கள் எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள்.


என்ன அதிசயமோ அது,இந்தச் செய்தி தென்கோடித் தமிழகம் வரைக்கும் பரவி கடிகார ஒலியைக் கேட்பதற்காகவே மக்கள் சுற்றுலா கிளம்பினார்கள். சமாதியின்மீது தலை சாய்த்து காது கொடுத்துக் கேட்டவர்களும் 'டிக்டிக்'ஒலி கேட்பதாகவே சொன்னார்கள்.


அப்போது வடிவேலு சினிமாவுக்கு வந்திருக்க வில்லை. அதனால் அவருக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை.


ஆனால் இப்போது .., அதாவது இந்தப் படங்கள் எடுக்கப்பட்ட நாளன்று   எம்.ஜி.ஆரின் சமாதியின் மீது படுத்து காது வைத்துக் கேட்டுவிட்டு ஒரு ஊர்க்கார மனிதர் 'ஆமா,சத்தம் கேட்குது' என்று சொன்னபோது ஒரு படத்தில் வடிவேலு ஒரு வெள்ளிகிழமையன்று  ஊர்க்காரர்களை எல்லாம் கூட்டி வைத்துக்கொண்டு மலை உச்சியில்  சாமியைக் காட்டிய காமெடிதான் நினைவுக்கு வந்தது.


அந்தக் காமெடியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?  


ஆனாலும் எம்.ஜி.ஆரின் மீது இந்த மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை   பிரமிக்க வைக்கிறது.சுனாமி ஏதும் வராதிருந்து இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப்பின் மெரினா இப்படியே மிஞ்சியிருந்தால் எம்.ஜி.ஆரின் சமாதி அப்போது ஒரு கோவிலாகக் கூடக்  கருதப்படலாம். 


அன்பையும் அஹிம்சையையும் போதித்த ஒரு மகா மனிதர் கர்த்தரானது போல,


தனது கொள்கைகளைச் செயலாக்குவதில் உறுதியாக இருந்த ஒரு போராளி இறைத்தூதர் ஆனதுபோல,


கொடிய வாழ்க்கையின் துயரங்களை உணர்ந்து ஆசாபாசங்களை விலக்கிய ஒரு புனிதர் புத்தர் ஆனது போல ,


காதலுக்காக உயிர் கொடுத்துத் தெய்வமான ' காத்தவராயன் 'போல , 


சாகசக் காரனாக வாழ்ந்து மறைந்து சாமான்ய மக்களின் காக்கும் தெய்வமான 'மதுரை வீரன் ' போல, 


ஊர் காத்த 'அய்யனார் ' போல , 'சுடலை மாடன் ' போல


மக்களின் மன ஓட்டத்தை எடை போட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றி மக்கள் நாயகனாகி வாழ்வில் வெற்றிகளையே சாதித்த எம்.ஜி.ஆரும் ஒரு தெய்வமாகி இருக்கலாம்.


அமானுஷ்ய சக்தி கொண்டதாக , அவருடைய கைக்கடிகாரம் அப்போதும் ஓடிக்கொண்டிருக்கலாம்.