சனி, 29 செப்டம்பர், 2012

என்ன ஒரு அற்புதம்..?




சில நாட்களுக்கு முன் சென்னையின்  புற நகர்ப் பகுதியில் பயணம் செய்ய நேர்ந்தது.ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இயற்கையின் உந்துதலை
தனித்துக் கொள்வதற்காக வண்டியை நிறுத்தி விட்டு சாலையை விட்டு இறங்கினேன்.சில அடிகள்தான் நடந்திருப்பேன்.திடீரென்று காலுக் கடியிலிருந்து நீர் பீய்ச்சியடித்தது.

துடித்து விலகி குனிந்து தரையைப் பார்த்தால் புற்கள்தான் தெரிந்தன.குழம்பிப் போய் விட்டேன்.என்ன விந்தை இது ? புராணங்களின் நாயகர்கள் கால் பட்டதும் கல் பெண்ணானது போல ,...கால் பெருவிரலை அழுத்தியதும் பூமிக்குள்ளிருந்து நீரூற்று வெளிப்பட்டது போல எனக்கும் ஏதும் அமானுஷ்ய சக்தி வந்து விட்டதா..? சில நொடிகள் உண்மையில் திகைத்துத்தான் போய்விட்டேன்.

 இருந்தாலும் சட்டென்று விழித்துக் கொண்ட பகுத்தறிவு புற்களுக்குக் கீழே தோண்டிப் பார்க்கச் சொன்னது. தோண்டினேன்.அங்கே ....சிறிதளவு மட்டும் பயன்படுத்தப்பட்ட ஒரு தண்ணீர் பாக்கெட் புதைந்து கிடந்தது. எனது பாதம் அதன் மீது பட்டு அழுத்தியதும் அதனுள்ளிருந்த தண்ணீர் வேகமாக வெளிப்பட்டிருக்கிறது.

புராண காலத்தை விட இந்தக் காலத்தில் அற்புதங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன ...இல்லையா..?



செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மணிமாறன் மாமா சொன்ன கதை-3





சமீபத்தில் ஒருநாள் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது மணிமாறன் மாமாவுடன் பேசிக்கொண் டிருந்த சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.இரவு எட்டு மணியைப்போல் திடீரென்று சக்திவேல் மச்சான் பற்றி பேச்சு திரும்பியது.அவர்  இருட்டுக்கு பயப்படுவதைப் பற்றி மாமா சொல்ல ஆரம்பித்தார்.

' எல்லாத்திலயும் சூரப்புலிதான் இந்த சத்தி மச்சான்.ஆனா இருட்டக் கண்டா மட்டும் பயம். அது எப்பிடித்தான் அவருக்கு இப்படி ஒரு பயம் வந்துச்சோ தெரியலடா மாப்ள. பயம்னா அப்படி ஒரு பயம். இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேந்துரணும் அவருக்கு.வெளியூரு போற சமயங்கள்ல இதுக்காக அவரு படுற பாட்டையும் செய்யிற தந்திரங்களையும் சொல்லி மாளாதுப்பு. வெளியூருக் கதையை விடு. இங்கே உள்ளூருல அவரு அடிக்கிற கூத்த சொல்றேன் கேளு.

சத்தி மச்சானுக்கு அந்தா தெரியுது பாரு , மருதவயல் ..அதான் ஊரு.ஆனா சின்னப்புள்ளயில இருந்தே இங்க நம்மூருல அவரு மாமா வீட்டுலதான் வளர்ந்தாரு .இங்கேயேதான் இருப்பாரு. எப்பவாவது அங்கே  மருதவயலுக்கு போகணும்னா காலாகாலத்துல வேலையெல்லாம் முடிச்சுட்டு பொழுது சாயறதுக்குள்ள கிளம்பிடுவாரு.அப்படி அவரோட கணக்கையும் மீறி இருட்டிப் போயிருச்சின்னா அதுக்கும் ஒரு ஏற்பாடு பண்ணி வச்சிருந்தாரு.

மச்சான் அடிக்கடி மொச வேட்டைக்கு போறவரு. அதனால அவருக்கு நாய் ராசி இருந்திச்சி. வாயில ரெண்டு விரல வச்சி சீட்டி அடிச்சாருன்னா அது மருதவயல் வரைக்கும் கேட்கும். இந்த விஷயம்தான் அவருக்கு இக்கட்டுல கைகொடுத்துச்சி.

இவரோட சீட்டிச்சத்தம் கேட்டதும் நம்மூரு நாய்ங்க மட்டுமில்லாம மருதவயல் நாய்களும் பாய்ஞ்சு வந்து இவரைச் சுத்திக்கிட்டு நிக்கும்ங்க.ஒரு பத்து நாய்ங்க பின்னாடி வர மிலிடரி கமாண்டர் கணக்கா இவரு நடந்து ஊரு போய்ச்சேருவாரு .வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் ஓடுங்கன்னு விரட்டுவாரு .
எல்லாம் திரும்பி வீடு வந்து சேர்ந்துரும்.

ஆனா இருட்டா இருந்தாலும் துணைக்கு மட்டும் ஆள் இருந்தா இவரு பண்ற சேட்டை தாங்க முடியாது மாப்ள. ராத்திரி பத்து மணிக்கு மேல ரெண்டு மூணு பொடிப் பயலுகளைச் சேத்துக்கிட்டு வைக்கோல் பிரியை உடம்பு முழுக்கச் சுத்திக்கிட்டு அதுக்கு மேல துணியைச் சுத்திக்கிட்டு ஊருக்குள்ள வருவாரு பாரு. பேய், பூதம்னு நெனச்சி ஜனம் பூரா பயந்து அலறும்.

                                                                                       
                                                                                                                     
                                                                                                                              இன்று சக்திவேல் 

நம்ம செல்லக்கண்ணு அப்பு வீட்டுக்கு அவரு சொந்தக்காரன் ஒருத்தன் வந்திருந்தான். பய ஒரு அரை வேக்காடு. ஊர்ப் பயலுகள விட்டு அவனுக்கு எப்படியோ கலியாண  ஆசையை தூண்டி விட்டுட்டாரு நம்மாளு..ஒரு நாள் ராத்திரி ஊரே கூடி கல்யாணம்  நடந்துச்சி. பொண்ணு யாரு தெரியுமா ? நம்ம ஆளுதான்....என்ன முழிக்கிற..? சத்தி மச்சாந்தான்யா பொண்ணு. சேலை கட்டி ஜாக்கட்டு  போட்டு நெஜப்பொம்பிளை தோத்துச்சி போ ..ஆம்பிளையும் பொம்பிளையுமா சேந்து கல்யாண ஜோடியை ஒரு காலி வீட்டுக்குள்ள கொண்டுபோய் விட்டுச்சிங்க. விட்டுப்பிட்டு இருட்டுக்குள்ள மறைவா நிக்கிதுங்க. கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை கதவத் தொறந்துக்கிட்டு  விழுந்தடிச்சி ஓடிவர்றான் .' பொண்ணு ஆம்பிள , பொண்ணு ஆம்பிள' ன்னு கத்திக்கிட்டு .ஒரு மாசத்துக்கு ஊருல மக்களுக்கு இந்தப்பேச்சுதான்  பொழுதுபோக்கா இருந்திச்சு.

இந்த மாதிரி சேட்டைகள்னால நம்மாளுக்கு பொம்பிளைங்ககிட்ட ஒரு .மாசு இருந்துச்சி மாப்ள. ஒருநாள் சுப்பையா வீட்டுலயிருந்து ஒரே கூப்பாடாயிருக்கு. என்ன, ஏதுன்னு ஓடிப்போயிப் பார்த்தா சுப்பையா பொண்டாட்டி பிரசவ  வலி தாங்காம கத்திக்கிட்டிருக்கா  எப்பிடி ..?..' நான் அப்பவே வேணாம் வேணாம்னு சொன்னேனே .இந்தப் பாவி மனுஷன் கேட்டானா..?' அப்படின்னு புருசனத் திட்டிக்கிட்டிருக்கா.ஆனா நம்மாளப் பார்த்தா ஒரு மாதிரி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாரு.

எனக்கு இன்னைக்கும் விளங்காத ஒரு விஷயம் என்னன்னா மாப்ள  ..,ராத்திரில ஒண்ணுக்குப் போறதுக்குக்கூட துணைக்கு ஆள் தேவைப்படுற நம்மாளுக்கு இந்த மாதிரி விஷயங்களுக்கு துணைக்குப் போனது யாரு..?






' மீனவர் பிரச்னை-ஒரு கசப்பான உண்மை ' படிக்க சொடுக்குக 
http://thenpothikai.blogspot.in/2012_10_01_archive.html






' வேதம் புதிது-ஒரு நினைவு கூர்வு ' படிக்க சொடுக்குக 
http://thenpothikai.blogspot.in/2012/10/blog-post_2.html













திங்கள், 3 செப்டம்பர், 2012

கே.பி.சுந்தராம்பாள் -ஒரு சுருக்கமான வரலாறு

மைசூரில் இருக்கின்ற மத்திய இந்திய மொழிகள் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்மால் உருவாக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பற்றிய ஆவணப் படத்தின் குரல் வருணனையின் எழுத்து வடிவத்தை உங்களுக்காக இங்கே தந்துள்ளோம்.

' ஞானப் பழத்தைப் பிழிந்து...பாடல் ஒலிக்கிறது 

...........அந்த மனதை மயக்கும் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.அழுத்தமான அந்த உச்சரிப்பும் குரலின்  நீரோடை போன்ற தெளிவும் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை.இசையில் மட்டுமல்லாமல் தனது தனித்துவமான திறமைகளால் நாடகம் ,அரசியல், ஆன்மிகம் என்று பல்வேறு துறைகளிலும் சிறப்புற்று விளங்கியவர் அவர்.

சினிமாவில் முதன்முறையாக அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று சாதனை படைத்தவர் அவர்.மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துவிட்ட அவர்தான் கேபிஎஸ் என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற இசைக்குயில் கே.பி.சுந்தராம்பாள்.

1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினோராம் நாளில் ஒரு ஏழைக்குடும்பத்தின் மூத்த மகளாகப் பிறந்தார் கே.பி.எஸ்.பெற்றோர் அவருக்கு சுந்தராம்பாள் என்று பெயரிட்டனர்.

கொடிது கொடிது இளமையில் வறுமை.........பாடல் ஒலிக்கிறது .

........புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் கே.பி.சுந்தராம்பாள் அவ்வையாரின் இந்த பாட்டை பாடியபோது தனது இளமைக்கால வறுமை நிலையை நிச்சயம் நினைத்துப் பார்த்திருப்பார்.கல்விக் கடவுளான சரஸ்வதியின் அருள் சிறுமி சுந்தராம்பாளுக்குக் கிடைக்கவில்லை என்றாலும் கணீரென்ற மக்களை மயக்கும் ஒரு அற்புதமான குரல்வளம் அவருக்கு வரமாகக் கிடைத்திருந்தது.

கிராமத் திருவிழாக்களிலும் கோயில்களிலும் மக்கள் அவரைப் பாடச்சொல்லி ரசித்தனர்.சுந்தராம்பாளின் பாட்டுத் திறனை அறிந்த ஆண்டிப்பட்டி ஜமீந்தார் அவரை அழைத்து பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து அவருக்கு பொன்னும் பட்டாடையும் பரிசுப்பொருட்களும் தந்து கவுரவித்தார்.

அந்தக் காலத்தில் பெரும்புகழ் பெற்றிருந்த வேலு நாயர், ராஜாமணிய ம்மால் 
நாடகக்குழு நாடகம் நடத்துவதற்காக ஒரு சமயம் கரூரில் வந்து தங்கியிருந்தது.நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் பிள்ளைகளாக நடிப்பதற்கு திறமையான குழந்தைகள் கிடைக்காமல் அவர்கள் சிரமப்பட்டபோது சிறுமி  சுந்தராம்பாளின் பாடும் திறமை பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடி வந்தனர்.

இந்த மேடை வாய்ப்பு சுந்தராம்பாளின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்ப்படுத்தியது என்று சொல்லலாம். கரூரில் நாடகங்களை நடத்திமுடித்த நாடகக்குழு வேறு ஊருக்கு கிளம்பிச் கட்றது. சிறுமி சுந்தராம்பாளின் உள்ளத்தில் நாடக நினைவுகள் நிரந்தரமாகத் தங்கிவிட மறுபடி மேடையேறிப் பாடும் வாய்ப்புக்காக ஏங்க  ஆரம்பித்தது அந்த இளம் உள்ளம்.

தன்னை வந்து சென்னையில் சந்திக்கும்படிச் சொன்ன நாடகக் குழுவின் ஹார்மோனியக்  கலைஞர் கோவிந்த ராஜுலு நாயுடுவின் வார்த்தைகள் நினைவுக்கு வர தன தாய் பாலாம்பாளுக்குக் கூடத் தெரிவிக்காமல் நெஞ்சம் நிறைந்த கனவுகளோடு சென்னப்பட்டினத்துக்கு ரயிலேறினார் சுந்தராம்பாள்.

கோவிந்த ராஜுலு நாயுடு ,புதுச்சேரி தாணுவம்மாள் ,கருப்பாயி அம்மாள் ஆகியோரின் நாடகக் குழுக்களில் நடிக்க ஆரம்பித்தார் சுந்தராம்பாள். படிப்படியாகக் கலையுலகில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துக்கொண்டு புகழ் பெறத் துவங்கினார்.1917 ஆம் ஆண்டில் சண்முகம் பிள்ளை என்பவர் மூலமாக
இலங்கையில் நாடகங்கள் நடத்தும் வாய்ப்புக் கிடைக்க தனது பாட்டியின் துணையோடு இலங்கைக்குப் பயணமானார் சுந்தராம்பாள்.

காலச் சக்கரம் உருண்டது. தனது பதினைந்தாம் வயதிலேயே கே.பி.சுந்தராம்பாள் நாடகங்களில் ஸ்திரீ பார்ட்டாக அதாவது கதாநாயகியாக நடிக்கத் துவங்கினார்.இதைவிடவும் சிறப்பாக அவர் ராஜபார்ட்டாக அதாவது கதாநாயகனாகவும் நடித்து பெரும் சாதனை படைத்தார்.

கே.பி.சுந்தராம்பாளின் உச்ச ஸ்தாயியிலான குரலுக்கு ஈடு கொடுத்து நடிக்கக் கூடிய கதாநாயகர்கள் கிடைக்காமல் நாடக அமைப்பாளர்கள் திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் அவருக்கு மிகவும் பொருத்தமான துணையாக எஸ்,ஜி .கிட்டப்பா ராஜபார்ட்டாக நடிக்க வந்தார்.

இந்த இணை ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று மிகப்பெரும் புகழ் பெற்றது.இருவரும் இணைந்து சிலோன் , பர்மா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நாடகங்கள் நடத்தினர்.

மேடையில் இணைந்த இவர்கள் பின்னாளில் வாழ்க்கையிலும் இணைந்தனர்.
கே.பி.சுந்தராம்பாளும் எஸ்.ஜி.கிட்டப்பாவும் இணைந்து மேடையில் பாடுவதைக் காண ரசிகர்கள் தவம் கிடந்தார்கள்.அரங்கத்தில் நுழைய அனுமதிச் சீட்டு கிடைக்காதவர்கள் நாடகம் முடியும்வரை வெளியிலேயே நின்று அவர்களின் குரலை மட்டும் கேட்டார்கள்.ஒலிபெருக்கி வசதி இல்லாத அந்தக்காலத்திலும் கூட நெடுந்தொலைவுக்கும்  கேட்கும் வகையில் அவர்களின் குரலில் கம்பீரத் த்வனியும் தெளிவும் இருந்தது.

1926 ஆம் ஆண்டில் கே.பி.சுந்தராம்பாளின் முதல் இசைத்தட்டு வெளிவந்தது.
பொதிகை மலை ஓரத்திலே என்ற அந்தப் பாடல் பெரிய வரவேற்பைப் பெற்றது.கே.பி.சுந்தராம்பாளின் குரலுக்கு மக்களிடம் இருந்த மதிப்பை அறிந்த கொலம்பியா  நிறுவனம் தொடர்ந்து இசைத்தட்டுக்களை வெளியிட்டது. கே.பி.எஸ்ஸின் குரல் உலகப் புகழ் பெற்றது.

1919 ஆம் ஆண்டில் ஜாலியன் வாலா பாக்கில் நடந்த படுகொலைச் சம்பவம் இந்திய நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியபோது அதன் தாக்கம் தமிழ் நாட்டிலும் அதிகமாகவே இருந்தது.மேடைக் கலைஞர்கள் மகாகவி
பாரதியார் மற்றும் மதுரகவி பாஸ்கரதாஸ் ஆகியோரின் பாடல்களைப் பாடி
மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்டினார்கள்.அதில் கே.பி.சுந்தராம்பாளின் பங்கு சற்று அதிகமென்றே சொல்லலாம்.

தன கணவர் எஸ்.ஜி.கிட்டப்பாவைப் போலவே கே.பி.சுந்தராம்பாளும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்தார். ராட்டையில் நூல் நூற்றார்.கைத்தறித் துணிகளை எடுத்துச் சென்று விற்றுக் கிடைத்த பணத்தை காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக அளித்தார்.

1931 ஆம் ஆண்டில் மோதிலால் நேரு மறைந்தபோது அன்றைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலின்படி 'மோதிலால் நேரு மறைந்தாரே' என்ற இரங்கற் பாடல் ஒன்றைப்பாடி கே.பி.எஸ் மோதிலாலுக்கு மரியாதை செய்தார்.தொடர்ந்து சத்தியமூர்த்தி ஏற்பாடு செய்த கூட்டங்களிலெல்லாம் கே.பி.சுந்தராம்பாள் தேச பக்திப் பாடல்களைப் பாடி மக்களிடம் விடுதலை உணர்வினைப் பரப்பினார்.

1933 ஆம் ஆண்டில் கே.பி.எஸ்ஸின் கணவர் எஸ்.ஜி.கிட்டப்பா எதிர்பாராத வகையில் அகால மரணமடைந்தபோது கே.பி.எஸ்ஸுக்கு வயது இருபத்தைந்து.கணவர் மீது தான் கொண்டிருந்த அபிமானத்தை வெளிப்படுத்தும் விதமாக அணிகலன்களையும் வண்ண ஆடைகளையும் துறந்து துறவுக்கோலம் பூண்டார் கே.பி.எஸ். மேடையிலும் திரையிலும் பிற ஆண்களுடன் நடிப்பதைக் கூடத் தவிர்த்தார் அவர்.

1931 ஆம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகில் பேசும் சினிமா அறிமுகமானது.அப்போது புகழ் பெற்றிருந்த மேடை நாடகங்கள் திரைப் படமாகத் தயாரிக்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றன.கிஷன் சந்த தாஸ் என்பவர் நந்தனார் என்ற நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தார்.
நாடகத்தில் பக்த நந்தனாராக நடித்திருந்த கே.பி.சுந்தராம்பாளையே திரைப்படத்திலும் நடிக்க ஏற்பாடு செய்து அதற்காக அந்தக் காலத்தில் பெரும் தொகையாகக் கருதப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் கே.பி.எஸ்ஸுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது.

ஒரு பெண் ஆண் வேடமிட்டு நடித்ததற்காக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் கூட 1935 ஆம் ஆண்டில் பக்த நந்தனார் படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது.துரதிர்ஷ்டவசமாக இனி எப்போதுமே நாம் அந்தப் படத்தைக் காண முடியாத வகையில் ஒரு பெரிய தீவிபத்தில் அந்தப் படத்தின் சுருள்கள்
எரிந்து சாம்பலாகிப் போயின.

மக்களிடையே கே.பி.எஸ் பெற்றிருந்த செல்வாக்கை உணர்ந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி சென்னையில் காந்திஜி தங்கியிருந்த ஆசிரமத்துக்கு கே.பி. எஸ்ஸை அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார்.

ஏற்கனவே கே.பி.எஸ் பற்றி அறிந்திருந்த காந்திஜி சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க வரும்படி அவரை அழைக்க , காந்திஜியின் அறிவுரையை ஏற்று கேபிஎஸ் விடுதலைப் போராட்டித்தில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினார்.

1937 ஆம் ஆண்டில் நடந்த தமிழகத்துக்கான சட்டமன்றத் தேர்தலில் காமராஜ் மற்றும்  சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார் கே.பி.சுந்தராம்பாள் .மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த கே.பி.எஸ்ஸின் பிரச்சாரம் காங்கிரசுக்கு பெரும் பலமாக அமைந்தது.

ஜவஹர்லால் நேருவும் இந்திரா காந்தியும் கே.பி.சுந்தராம்பாளின் சேவைகளுக்காக அவரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள்.மகாத்மா காந்தி சுடப்பட்டு இறந்தபோது கே.பி.எஸ் மனமுருகிப் பாடிய துக்கப் பாடல்கள் தமிழ் மக்களின் துயரத்துக்கு இதம் தரும் மாமருந்தாக அமைந்தன.

தமிழ் இசையை மேம்படுத்தும் நோக்கத்தோடு அண்ணாமலைச் செட்டியாரால் தமிழிசை இயக்கம் உருவாக்கப்பட்டபோது கேபிஎஸ் அதில் இணைந்து மேடைகளில் தமிழ்ப் பாடல்களை மட்டும் பாடி சிறந்த சேவை புரிந்தார்.

கே.பி.சுந்தராம்பாள் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் தீவிர பக்தையாவார்.தனது நிகழ்சிகளின் மூலமாக நிதி சேகரித்து புகழ் பெற்ற வடபழனி முருகன் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு பேருதவி புரிந்திருக்கிறார் கே.பி.சுந்தராம்பாள்.

1953 ஆம் ஆண்டில் ஜெமினி நிறுவனத்தின் அதிபர் வாசன் அவ்வையார் திரைப்படத்தை தயாரித்தார்.அந்தப் படம்  மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.
அந்தப்படத்தின் மூலமாக கேபிஎஸ்ஸை மக்கள் ஔவையாராகவே பார்த்தார்கள்.

ஏராளமான பட்டங்கள் கே.பி.எஸ்ஸை தேடிவந்தன.மாநில மற்றும் மத்திய அரசுகளும் விருதுகள் வழங்கி அவரைக் கவுரவித்தன.மத்திய அரசு கே.பி.எஸ்ஸுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்தது.1958 ஆம் ஆண்டு காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது கே.பி.எஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினராக்கப்பட்டு திரைத் துறையிலிருந்து அந்தப் பதவியை பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பையும் பெற்றார்.

1962 ஆம் ஆண்டில் இந்தியச் சீன யுத்தம் துவங்கியபோது தனது எம் எல் சி பதவியின் மூலம் கிடைத்த ஊதியம் அனைத்தையும் யுத்த நிதியாகக் கொடுத்து தனது தேசபக்தியை நிரூபித்தார் சுந்தராம்பாள்.

கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் மணிமேகலை ,உயிர்மேல் ஆசை  போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கே.பி.எஸ் தன சொந்த ஊரான கொடுமுடியில் திரையரங்கம் ஒன்றினைக் கட்டியுள்ளார். அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, வருங்கால முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் செல்வி ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வர்கள் கலந்து கொண்ட ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வாக 1969 ஆம் ஆண்டில் அந்தத் திரையரங்கத்தின் திறப்பு விழா அமைந்தது.

கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ்ஸின் வீட்டுக்கு வருகை தராத தலைவர்களே இல்லை என்று சொல்லலாம் சுற்றுலாப் பயணிகள் அவசியம் வருகை தரும் ஒரு இடமாக அந்த இல்லம் திகழ்ந்து வந்தது.தியாகராஜா பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ஆர் , வைஜயந்திமாலா  பாலி  போன்ற பிரபலங்கள் கே.பி.எஸ் மீது தனியான ஒரு அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள்.

இறைவன் கே.பி.எஸ்ஸுக்கு எல்லாச் செல்வங்களையும் அருளியிருந்தாலும் குழந்தைச் செல்வத்தை மட்டும் அருளவில்லை.இசை உலகின் முடி சூடா ராணியாகத் திகழ்ந்த கே.பி.எஸ் 1980 ஆம் ஆண்டில் நோயுற்றார்.தனது முடிவை அறிந்துகொண்ட அவர் மரணத்தை எதிர்கொள்ளத் தயாரானார். மருந்து உட்கொள்ள மறுத்தார்.தனது எழுபத்தியிரண்டாம் வயதில் கே.பி.சுந்தராம்பாள் இறைவனடி சேர்ந்தார். ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

கே.பி.எஸ்ஸின் ஆன்மா நம்மை விட்டுப் பிரிந்து விட்டாலும் அவரது வெண்கலக் குரல் இன்னும் நம் செவிகளில் எதிரோளித்துக்கொண்டுதான் இருக்கிறது.இந்த யுகம் உள்ளவரையில் அந்தக் குரல் உலகத்தின் எங்கோ ஒரு இடத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.



ஆவணப் படத்தை இங்கே காண்க.

http://www.youtube.com/watch?v=1dKCGYixn_o&feature=share&list=UUVY0Wt_fI7rHGHrdyk8qqKQ