வியாழன், 26 ஜூலை, 2012

பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு பாரீன் பயணம்

பாஸ்போர்ட், விசா எதுவுமில்லாமல் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சென்று வரமுடியுமா ? முடியாது என்று நீங்கள் சொல்லவந்தால் கீழே இருப்பதைக் கொஞ்சம் படியுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னாள் மலேசியாவுக்குப் போயிருந்தேன். நண்பர் ஒருவரோடு பினாங்கு அருகேயுள்ள பட்டர்வோர்த்தில் இன்னொரு  நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தோம். சந்திப்பு முடிந்து கிளம்பலாம் என்றிருந்தபோது நண்பர் திடீரென்று ' தாய்லாந்து போய் வரலாமே' என்றார்.அதைக் கேட்டதும் மற்றவரும் உற்சாகமாக ' ஓகே ,ஓகே,போகலாம்' என்றார். நான் ' ஆனா நான் வரமுடியாதே' என்றேன். இருவரும் உடனே ' ஏன் ' என்றார்கள். ' நான் தாய்லாந்து விசா வாங்கவில்லை ' என்றேன். ' அது எதுக்கு.வாங்க போகலாம்' என்று காரைக் கிளப்பினார்கள்.

சரி,சும்மாதானே இருக்கிறோம்.நண்பர்கள் இருவரும் தாய்லாந்துக்குள் சென்று வரும் வரை பார்டரில் ட்யூட்டி ப்ரீ ஷாப்பில் பொழுது போக்கலாம் என்று நினைத்துக் கொண்டு போனேன்.இரண்டு அல்லது மூன்று மணி நேர சாலைப் பயணத்தில் ஹட்ஜாய் [' Hatyai ' ] என்ற தாய்லாந்து எல்லைப்புற சிறு நகரம் சென்று சேர்ந்தோம்.இமிக்ரேசன் அலுவலகத்துக்கு சற்று வெளியே இருந்த வாடகைக்கார் நிறுத்தத்துக்குச் சென்ற நண்பர்கள் ஒரு ஓட்டுனரிடம் பேசி ஏற்பாடு செய்துகொண்டு  நான் மறுத்தும் கேட்காமல் காருக்குள் என்னையும் ஏறச் செய்தார்கள்.

உள்ளே இருப்பவர்கள் தெரியாதபடி காருக்கு கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது, இமிக்ரேசன் வாசலில் நின்ற காரிலிருந்து நண்பர்களின் மலேசியப் பாஸ்போர்ட்டுகளை மட்டும் வாங்கிக் கொண்டு ஓட்டுனர் இறங்கிச் சென்றார். பாஸ்போர்ட் உள்ளேயிருந்த பணத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து திரும்பி வந்த ஓட்டுனர் காரைக் கிளப்பி தாய்லாந்து நாட்டுக்குள் நுழைந்தார், எல்லையைத் தாண்டி ஒரு இடத்தில் எங்களை இறக்கிவிட்டுத் திரும்பிப் போன ஓட்டுனர் பல மணி நேரங்கள் கழித்து நாங்கள் திரும்பி வந்தபோது அதே இடத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார்.

ஆனால் இந்தமுறை எல்லோரையும் போல வரிசையில் நின்றுதான் இமிக்ரேசனை முடிக்க வேண்டியிருந்தது.என்றாலும் என்னை வரிசையிலிருந்து விலகி இமிக்ரேசன் கவுண்டரைச் சுற்றிச் செல்லும்படி ஓட்டுனர் சைகை காட்ட நெஞ்சில் 'திக்,திக், என்ற பயத்தோடு அப்படியே செய்தேன்.எவரும் குறுக்கே வரவுமில்லை.எதுவும் கேட்கவுமில்லை.

திரும்ப மலேசியாவுக்குள் நுழைந்தபோது ஏதோ ஒரு அட்வெஞ்சர் செய்துவிட்டதுபோல ஒரு பெருமிதம் இருந்தாலும் எந்த வித அடையாளமும் இல்லாமல் தாய்லாந்துக்குள் இருந்தபோது ஒரு விபத்தோ சண்டையோ ஏற்பட்டிருந்தால் என் கதி என்னவாகியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தபோது எப்படியொரு முட்டாள்தனம் செய்திருக்கிறோம் என்ற பீதி அதைவிட கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.








ஞாயிறு, 22 ஜூலை, 2012

Tongue twisters

பல ஆண்டுகளுக்கு முன்பு ' Reader's Digest ' இதழில் படித்த வினோத அமைப்புக் கொண்ட இந்த ஆங்கில வாக்கியங்கள் இப்போது நினைவுக்கு வந்தன.அவை மறந்து போவதற்கு முன் இங்கே பதிவு செய்து கொள்வோம்.

' The train's departure time is changed from two to two to two after two '.

' She sells seashells in the seashore and the shell she sells is the best one among the shells sells in the sea shore '.

சனி, 21 ஜூலை, 2012

இளையராஜாவிடம் கதை சொன்னேன், வாலியிடம் கரெக்சன் சொன்னேன்.


சமீபத்தில் தொலைக்காட்சியில் சேனல்களுக்கிடையே அலைந்து கொண்டிருந்தபோது ஒரு சேனலில் ' கல்லுக்குள் ஈரம் ' படத்தின் துவக்கக் காட்சி கண்ணில் பட்டது.அதைச் சிறிது கவனித்தேன்.ஏதோ ஒன்று என்னை அங்கேயே நிறுத்தி வைத்தது. அனேகமாக அது பாரதிராஜாவின் இளமைத் தோற்றமாக இருக்கலாம். அவர் மட்டுமல்லாமல் அடுத்தடுத்து மனோபாலா, ஜனகராஜ், சந்திரசேகர் போன்றவர்களின் இளமைக்கால உருவங்கள் மனதுக்கு பரவசம் தந்தன.

படத்தைப் பார்க்கப்பார்க்க கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சுக்குள் ஒரு வியப்பு பிரம்மாண்டமாகத் திரண்டெழுந்தது.பல ஆண்டுகளுக்கு முன்பு பல தடவை பார்த்த படம்தான் என்றாலும் அப்போது நாம் கொண்டிருந்த கண்ணோட்டம் வேறு. ஏராளமான உலகத் திரைப்படங்களையும் உள்ளூர்த் திரைப் படங்களையும் கண்ணுற்ற பிறகு கிடைத்திருக்கின்ற இன்னொரு  பரிமாணத்தோடும் இன்னும் தெளிவான கண்ணோட்டத்தோடும் இந்தப் படத்தை இப்போது பார்க்கையில் வியப்பு அதிகமானதே தவிர குறையவில்லை. 

அன்னியப் படங்களைத் தமிழாக்கம் செய்தும் இங்கே கெட்டுப் புளித்துப் போயிருந்த  கலாச்சாரக்  கசடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியும்   தமிழ் இயக்குனர்கள் பெயர் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் நீண்ட அடை மழைக்குப்பின் பசுமை சூழப் பிறந்த புதிய விடியல்போல் தமிழ்த் திரைக்குள் வந்து சேர்ந்த பாரதிராஜா என்ற கலைஞ்ன் தமிழ்க் கலாசாரத்தின் உன்னதங்களை மட்டும் அல்லவா உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறான்.

மாராப்பு விலகவில்லை; தாவணி சரியவில்லை. உள்ளங்கைகளுக்குள் புதைந்த முகத்தை ஒரு கை விரல்கள் மட்டும் சற்றே விலக்கிக் காட்ட  அங்கே  தெரியும்  ஒற்றைக் கண்ணுக்குள்ளிருந்து ஓராயிரம்  கதைகளல்லவா தெறித்துக் கிளம்புகின்றன..பெண்களின் கண்களல்லவா பாரதிராஜாவுக்கு கதை சொல்லும் கருவியாக இருந்திருக்கிறது..

கதாநாயகி அருணாவின் பெரிய கண்களும் வட்ட முகமும் வெளிப்படுத்திய காதல் உணர்வுகள் புல்லரிக்க வைத்தன. ஒரு 16 வயதுப் பெண்ணிடமிருந்து எந்த அளவுக்கு மிகத்  துல்லியமாக இதை வெளிக்கொணர்ந்திருக்கிறார்  இயக்குனர்..? கதாபாத்திரங்களின் ஒவ்வொரு சிறு அசைவும் கூட உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது..ஒவ்வொரு பிரேமும் உணர்ந்து செதுக்கப்பட்டு காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன.

இசைஞானியைப் பற்றி சொல்லவே தேவையில்லை.இயக்குனரால் செதுக்கப்பட்ட அந்த ஒவ்வொரு பிரேமுக்கும் இசையால் இவர் உயிர் கொடுத்திருக்கிறார்.

முடிவேயில்லாது நீண்ட விளம்பரத் தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டு படத்தைப் பார்த்துவிட்டுத்தான் எழுந்தேன்.

படத்தில் நாயகியின் மாமனாக நடித்த, பின்னாட்களில் ' கல்லுக்குள் ஈரம் ராமநாதன்' ஆக மாறிய எங்களின் சீனியர் அண்ணன் ராமநாதனைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தப் படத்தில் மீண்டும் அவருடைய  நடிப்பைப் பார்த்தபோது ஏன் இவர் வெளிச்சத்துக்கு வராமல் போனார்  என்று நெஞ்சில் ஒரு நெருடல் தோன்றியது.அடிப்படையில் துணை இயக்குனரான அவர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து ' ஜங்சன் ' என்ற படத்தையும் இயக்கி கடைசியில் காணாமலேயே போய்விட்டார். அன்று ஒருநாள் போரூர் சிக்னல் அருகில் கண்ணாடி அணிந்து ஒரு பெரியவர் தோற்றத்தில் அவரைக் காண நேர்ந்தபோது மனது வலித்தது.

நல்ல படமாக இருந்தாலும் ' கல்லுக்குள் ஈரம் ' ஏன் சரியாக ஓடாமல் போனது என்ற கேள்விக்கு என்னிடம் ஒரு விளக்கம் இருக்கிறது.அதாவது......திரைப்பட உருவாக்கத்தைப் பின்னணியாகக் கொண்ட எந்தத் தமிழ்ப் படமுமே ஓடியதாக இங்கே வரலாறில்லை.இந்தப் படத்தின் ஹீரோ திரைப்பட இயக்குனராக இல்லாமல்  பாரதிராஜாவின் வழக்கமான கதை நாயகர்களான வாத்தியாராகவோ அல்லது மாட்டு டாக்டராகவோ  கூட இருந்திருக்கலாம். பாதகமில்லாமல் இருந்திருக்கும்.

இந்த சாபக்கேட்டிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்த ஒரு படத்தின் நினைவு இப்போது வருகிறது.மறைந்த இயக்குனர் நண்பர் கணேஷ்ராஜ் ' சின்னத்தாயி ' கதையை தயாரிப்பாளர் வேதா சாரிடம் சொல்வதற்கு முன்னாள் என்னிடம் சொன்னார். கதையின் இறுதியில் கதாநாயகியைக் காப்பாற்றவரும் சினிமா உதவி இயக்குனர் கேரக்டர் ஒன்று இருந்தது. ஒருவேளை தன்னை feel பண்ணி கணேஷ் அந்த கேரக்டரை உருவாக்கியிருக்கலாம். கதையை முழுவதும் சொல்லிமுடித்த பிறகு அபிப்பிராயம் கேட்டார் கணேஷ்.  அந்த உதவி இயக்குனரைத் தவிர மற்றதெல்லாம் ஓ கே என்று நான் சொன்னேன். ரொம்ப யோசித்தபிறகு அது ஏற்றுக் கொள்ளப்பட்டு போலீஸ் அதிகாரியாக அந்த கேரக்டர் மாற்றப்பட்டது. அந்தக் கேரக்டரில் ராதாரவி நடிக்க படம் ஹிட்டானது.

' சின்னத்தாயி ' படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த எனக்குக் கிடைத்த வாய்ப்பு ஒன்றை எப்போதும் என்னால் மறக்க முடியாது. திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்க சென்னையில் பாடல் பதிவுக்கு நேரம் கொடுத்துவிட்டார் இசை ஞானி இளையராஜா. பாடலுக்கு சிச்சுவேசன் சொல்ல என்னை அனுப்பினார் கணேஷ்ராஜ். இயக்குனர்களே ராஜாவை அண்ட முடியாத காலக்கட்டம் அது. ஆனால் எதனாலோ எனக்கு அனுமதி கிடைத்தது.

இசை ஞானியின் அறையில் நாங்கள் இரண்டே பேர் மட்டுமே  இருக்க 'சொல்லு' என்று ஒரு வார்த்தை மட்டுமே பேசினார்  எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் சிட்சுவேசனை விளக்கி திட்டு எதுவும் வாங்காமல் தப்பித்து விட்டேன்.அந்த தைரியத்தில் ராஜா சாரின் ட்யூனுக்கு பாடல் எழுதிக் காண்பித்த வாலி சாரிடம் பாடலில் இரண்டு வரிகளை மாற்றும்படி  சொல்லிவிட்டேன். எழுதிய பாட்டை அவர் என்னிடம் காண்பித்ததே பெரிய விஷயம்.

வாலி சார் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.' ராஜாவுக்கு தெறிஞ்சா கோபப்படுவான்.இப்படியெல்லாம் செய்யாதே ' என்றதோடு நிறுத்திக் கொண்டார். ஆனால் வரிகளை மாற்றிக் கொடுத்தார். அதனால்தான் எல்லோருக்கும் பிடித்தவராக இன்றும் இளமையோடு வலம் வருகிறார் அவர்.

அந்தப் பாட்டு எதுவென்று சொல்லவில்லையே.....' ஏரிககரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல...'





' பயணங்கள் ' சிறுகதை படிக்கச் சொடுக்குக 
http://mpmathivanan.blogspot.in/2012_11_01_archive.html



' மஞ்சள் சுரிதார் ' சிறுகதை படிக்க சொடுக்குக 

http://mpmathivanan.blogspot.in/2012/11/blog-post_14.html







வியாழன், 19 ஜூலை, 2012

உலக சினிமா அறிமுகம்- ' Not one less '

சீன நாட்டில் ஒரு தொலை தூரக் கிராமத்தில் ஒரு சாதாரண ஆரம்பப் பள்ளிக்கூடம். தாய்க்கு உடல்நலம் சரியில்லாததால் அதன் ஆசிரியர் ஒரு மாத விடுமுறையில் ஊருக்குக் கிளம்ப ,கிராமத்தின் தலைவர் மாற்று ஆசிரியர் கிடைக்காமல் பக்கத்து ஊரிலிருந்து 'வேய் ' என்ற ஒரு 13 வயதுப் பெண்ணை 50 'யுவான்' சம்பளம் பேசி அழைத்து வருகிறார். அவள் மேல் நம்பிக்கையில்லாத ஆசிரியர் வேறு வழியின்றி 'எப்படியாகிலும் ஒருவர் கூட பள்ளியிலிருந்து நின்று விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் .அப்படி யானால்தான் 50 யுவானை ஊர்த் தலைவரிடமிருந்து தன்னால் வாங்கித் தர முடியும் ' என்ற நிபந்தனையோடு கிளம்பிப் போகிறார்.



'ஷாங் ' என்ற சிறுவன் வேய்யை டீச்சராக ஏற்க  மறுத்து வகுப்பில் சேட்டை செய்கிறான். இதற்கிடையில் வேகமாக ஓடும் திறமை கொண்ட ஒரு மாணவியை ' வேய் ' யின் கடும் எதிர்ப்பையும் மீறி நகரத்து விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார் தலைவர்.மேலும் ஒரு அடியாக ஷாங் திடீரென பள்ளியில் இருந்து நின்று விடுகிறான்.குடும்பக் கடனை அடைப்பதற்காக சாங்கின் பெற்றோர் அவனை நகரத்துக்கு வேலைக்கு அனுப்பி விடுகின்றார்கள்.

வேய் சோர்ந்து போகிறாள். எப்படியும் ஷாங்கை மட்டுமாவது நகரத்திலிருந்து திரும்ப பள்ளிக்கு அழைத்து வர முடிவு செய்கிறாள்.நகரத்துக்குச் சென்று ஷாங்குடன் திரும்ப 9 யுவான் பணம் வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள்.அந்தப் பணத்தை தலைவர் உள்பட யாரும் வேயக்கு கொடுப்பதாக இல்லை.மாணவர்கள் எல்லோரும் தங்களிடம் இருக்கும் பணத்தை வேயிடம் கொடுத்தாலும் அது போதுமானதாக இல்லை. ஒரு மாணவி சொன்ன யோசனையின்படி எல்லோரும் ஒரு செங்கல் சூளைக்குச் சென்று கல் சுமக்கிறார்கள். மேலாளரோடு ஒரு சண்டைக்குப் பிறகு 15 யுவான் கிடைக்கிறது.தேவைக்கு அதிகமாக உள்ள 6 யுவானுக்கு இரண்டு கோககோலா கேன் வாங்கி முதன்முறையாக சுவைத்துப் பார்க்கிறார்கள்.

ஆனால் பேருந்து நிலையம் சென்ற பிறகுதான் நகரத்துக்குச் சென்றுவர 56 யுவான் வேண்டும் என்பது தெரிகிறது.இந்தப் பணத்தை சம்பாதிக்க எவ்வளவு செங்கல் சுமக்க வேண்டும் என்று மறுபடி கணக்குப் போட்டுப் பார்த்து அது முடியாத காரியம் என்பதை உணர்கிறார்கள்.பயணச் சீட்டு இல்லாமல் பஸ் ஏறும் வேய் இறக்கி விடப்படுகிறாள். வேய் ஒரே முடிவோடு நடந்தே நகரத்தை அடைகிறாள்.அதன்பிறகு வருகின்ற உச்சக்கட்ட காட்சிகள் எல்லாம் நெஞ்சை நெகிழச் செய்கின்ற கவிதைகள்.

அந்தக் குழந்தைகளை மிக எதார்த்தமாக கதாபாத்திரங்களாக வாழச் செய்திருக்கின்ற விதம் அற்புதம்.நகரத்துக்குச் சென்று வரத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க ஒவ்வொரு முறையும் குழந்தைகள் கூடி கணக்குப் போடுவது சுவாரஸ்யம்.இதை மறைந்திருந்து பார்க்கின்ற கிராமத் தலைவர் டீச்சர் வேய் மாணவர்களுக்கு நன்றாகக் கணக்குப் பாடம் சொல்லித்தருவதாக மெச்சிக்கொள்கிற காட்சி புன்னகையை வரவழைக்கிறது.

பல சர்வதேச விருதுகளை வென்ற இப்படம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.












ஞாயிறு, 15 ஜூலை, 2012

காலத்தின் கோலமடா கருப்பசாமி





சைக்கிளிலிலோ  பைக்கிலோ போய்க்கொண்டிருப்போம்.எதிரில் வருபவர் ஏதோ கேட்பார்.சரியாகக் கேட்காவிட்டால் வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்போம்.அவர் வழி கேட்பார் அல்லது முகவரி விசாரிப்பார்.அவருக்கு பதில் சொல்லுவோம்.

யாரோ கூப்பிடும் குரல் கேட்கும்.சட்டென்று நின்று திரும்பிப் பார்ப்போம்.ஒரு சுமையைத் தூக்கி வைக்க ஒருவர் உதவி கேட்பார். இறங்கிச் சென்று உதவுவோம்.அல்லது வழியில் ஏதோ ஒரு இடத்தில் இறங்கிக் கொள்வதாகச் சொல்லி லிப்ட் கேட்பார்.ஏற்றிச் செல்வோம்.

தெருவில் உணர்ச்சிமயமாக ஒருவன் கைகளை வீசி வீசி தானே பேசிக் கொண்டும் சிரித்துக்கொண்டும் போவான்.'பாவம் பைத்தியக்காரன் 'என்று பரிதாபப் படுவோம்.

இதெல்லாம் பழைய கதை ஐயா .

இப்போது நிலைமையே வேறு.

எதிரில் வருபவர் ஏதோ கேட்டாரே என்று வண்டியை நிறுத்தி அவரிடம் விசாரித்தீர்கள் என்றால் ஒன்று உங்களை முறைப்பார் அல்லது கிண்டலாகச் சிரிப்பார்.ஏனென்றால் அவர் மனைவியிடம் ப்ளூடூத் வழியாக செல்போனில் பேசிக்கொண்டு வருகிறார் ஐயா .

யாரோ கூப்பிடுகிறார்களே என்று மெனக்கெட்டு நின்று திரும்பிப் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் மொக்க பார்ட்டி .அங்கே நிற்பவர் எங்கோ தன்னுடைய தொழில் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியனுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறார் சார்.

தெருவில் தனக்குத் தானே பேசிக்கொண்டு போகிறவனைப் பார்த்து  'பைத்தியக்காரன்' என்று பரிதாபப் பட்டீர்கள் என்றால் உங்களை பார்த்து எல்லோரும் பரிதாபப் படுவார்கள்.  அவன் தன்னுடைய நண்பனோடு அல்லவா ப்ளூடூத்தில் ஜாலியாகப் பேசிக்கொண்டு போகிறான்.

நிலைமை இப்போது இப்படியாகிப் போனதால் உண்மையிலேயே வழி கேட்பவரையும் முகவரி விசாரிப்பவரையும் மக்கள் அலட்சியம் செய்து தன வழியே போய்க் கொண்டிருக்கிறார்கள்.

ஏதோ அவசரத்துக்கு உதவிக்கு அழைக்க கூப்பாடு போட்டவர் கவனிப்பார் யாருமின்றி கத்திக் கத்தி ஓய்ந்து போகிறார்.

தன்னோடு தானே பேசிக்கொண்டு போகின்ற பைத்தியக்காரன் தன்னைச் சுற்றியுள்ள எல்லோருமே தன்னைபோலத்தான்  இருக்கிறார்கள் என்று திருப்தியடைகிறான்.

எல்லாம் காலத்தின் கோலம். வேறென்ன ..?.















உலக சினிமா அறிமுகம் -'Not one less' படிக்க சொடுக்குக

http://thenpothikai.blogspot.in/2012/07/not-one-less.html












' என்ன ஒரு அற்புதம் ..? ' படிக்க சொடுக்குக
http://thenpothikai.blogspot.in/2012/08/blog-post_30.html










அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்






சமீபத்தில் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் ஒன்று வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது..இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்..


அன்றைக்கு காலை ஒரு புது நம்பரில் இருந்து மிஸ்டு கால் ஒண்ணு  வந்தது..நான் திரும்பக் கூப்பிடவில்லை..அடுத்து மதியம் ஒன்றும் சாயந்திரம் ஒன்றும் வந்தது..அதையும் நான் கேர் பண்ணவில்லை..அடுத்த நாள் காலை மறுபடியும் அதே நம்பரில் இருந்து மறுபடியும் மிஸ்டு கால்..யாரோ தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து போனை எடுத்தேன்..போனில் இருந்தது ஒரு பொண்ணு..

'யாருங்க...?  ' -நான்

' ம் ..அது...வந்து..அங்கே வசந்தி இருக்காங்களா..?'

எதோ ராங்க் நம்பர் என்று முடிவு செய்து கட் பண்ணப் போகும்போது போன் குரல்

' நான் சேலத்திலே இருந்து பேசறேன்..'

என்றது..சட்டென்று எனக்குள்ள ஒரு ஜெர்க் அடித்தது..கொஞ்சம் யோசனையோடு கேட்டேன் .

'நீங்க யாரு பேசறீங்க ..? '  .

' நான் வசந்திக்குத் தெரிஞ்சவங்கதான் '....

இது ஏதோ வில்லங்கமாயிருக்குமோ என்று மனதில் பட்டது..உடனே

' அப்படில்லாம் இங்கே யாரும் இல்லீங்க போனை வைங் ,,'

'ஏன் ? பக்கத்துல யாரும் இருக்காங்களா..?'

என்று இடை மறித்த குரல் அதிர வைத்தது..இதுல  ஏதோ ஒண்ணு இருக்கற மாதிரி இருக்கு..ஆனா இல்லாத மாதிரியும் இருக்கே என்று S.J,சூரியா மாதிரி லேசாகக் குழம்பிய நேரத்தில் காதில் போன் குரல்

'பயப்படாதீங்க..நான் வசந்தியோட பிரண்டுதான்..எப்போ நீங்க தனியா இருப்பீங்க சொல்லுங்க..அப்போ பேசறேன்..'

எனக்கு லேசா உதறல் எடுத்தது..யோசிக்கணும்..டைம் வேணும்..

' சரி,,அஞ்சு மணிக்கு மேல பண்ணுங்க '...என்று போனை வைத்து விட்டேன்..

நான் ஏன் பதட்டப்பட வேண்டும்?...எனக்கு ஏன் உதறல் எடுக்க வேண்டும்....?  காரணம் இருக்கிறது..வசந்தி யாரோ தெரியாதவள் இல்லை.அவள் என்னுடைய பழைய கேர்ல் பிரண்டுதான்.ஊருல இருக்கும்போது ரெண்டு பேருக்கும் ஒருமாதிரி பழக்கம் உண்டு.இப்ப அவள் சேலத்திலதான் இருக்கிறாள்.எனக்கு உதறல் எடுத்ததுக்கு காரணம் இப்ப உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்.

சரியாக 5.30 மணிக்கு அந்த மிஸ்டு கால் வந்தது.கொஞ்சம் யோசித்து விட்டுத்தான் திரும்ப அழைத்தேன்.

'ஹலோ ' என்று ஹஸ்கியாக வந்த குரலைக் கேட்டு ஒரு மாதிரியாக இருந்தது.

' ஹலோ,என்ன விஷயம் சொல்லுங்க .எதுக்காக போன் பண்ணீங்க ...? 'என்றேன்.

' என்னோட பெஸ்ட் பிரண்டோட பிரண்டுக்கு நான் போன் பண்ணக் கூடாதா..? '

சரிதான் .எல்லா விஷயமும் தெரியும் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

' என்னோட போன் நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது ? '

' வசந்தி சொல்லியிருக்கா ,அதோட நோட்புக்ல வேற எழுதி வச்சிருக்காளே '

' ஓ ...சரி, இப்ப உங்க பிரண்டு எங்கே ?'

' திருப்பூர்ல வேலை கிடைச்சுப் போயிட்டா '

மறுபடியும் மண்டைக்குள் ஏதேதோ எண்ணங்கள் குறுகுறுவென ஓடின.

' ம் ..அப்போ உங்க பிரண்டுக்குத் தெரியாமத்தான் போன் பண்றீங்களா? '

' ஆமா.ஏன் பண்ணக்கூடாதா....?'

' பண்ணலாம்,பண்ணலாம் .அது ஒண்ணும் தப்பில்ல ...'

என்று தட்டுத் தடுமாறிவிட்டு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் திணறி எப்படியோ பேச்சை முடித்துக்கொண்டேன்.ஆனால் இந்த மிஸ்டுகால் விவகாரம் முடிவதாயில்லை.தினம் இரண்டுமுறை என்று தொடர்ந்தது. வேறுவழி இல்லாமல் நானும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.  என்ன பேசுவது என்று தெரியாமல் பெயர் விசாரித்து ...எதை எதையோ உளறி -உளறி வழிந்தது எல்லாம் நான்தான், அந்தப்பக்கத்தில் எல்லாமே தெளிவாக இருந்தது- எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருந்த பேச்சு ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு வழியாக தடத்துக்கு வந்து சேர்ந்தது.

' மூஞ்சியே தெரியாமல் பேசிக்கிட்டுருக்கிறோம்,கருப்பா சிவப்பான்னு கூடத் தெரியல.'

'ஒரு நாள் நேர்ல பாத்துட்டாப் போச்சு ..'

' எப்பப் பாக்கலாம். ?.'

' பார்க்கலாம்.ஆனா யாரு யாரப் பார்த்துட்டு ஓடப் போறாங்கன்னுதான் தெரியல. '

' நான் கருப்பு. பாத்துட்டு உங்களுக்கு பிடிக்காமப் போயிருச்சின்னா....? '- நான்.

' கருப்பா..? ஐயைய ..சரி, என்ன பண்றது....இவ்வளவு தூரம் வந்துட்டமே...அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.' - மிஸ்டுகால் பார்ட்டி .

சரி,சுருக்கமாக கதையை முடித்துக் கொள்கிறேன். ஒரு மாதத்துக்குப் பிறகு ஒருநாள். சற்று முன்னதாகவே சென்றுவிட்ட நான் விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் சேலத்திலிருந்து வரும் பஸ்சுக்காகக் காத்திருந்தேன்.கொஞ்ச நேரத்தில் மிஸ்டுகால் வந்தது.அதாவது செல்போனில் மிஸ்டு கால் வந்தது.

' எங்கே இருக்கீங்க..?'

' பஸ் ஸ்டாண்டில் தான் நிக்கிறேன்..'

' என்ன கலர் சட்டை போட்டிருக்கீங்க..? '

' வெள்ளை, நீங்க  ? '

' மஞ்சள் கலர் சேலை கட்டியிருக்கேன் பாருங்க....'

நான் கண்டுபிடித்து விட்டேன்.ஆனால் சேலையை வைத்து அல்ல. நான் போன் பண்ணியபோதெல்லாம் ஒரு பெண் தன்னுடைய போனை எடுத்துப் பார்த்ததிலிருந்து. உண்மையில் மிஸ்டுகால் பார்ட்டி அணிந்திருந்தது சிவப்புக் கலர் சேலை. அதே போல நான் போட்டிருந்ததும் வெள்ளை சட்டை இல்லை. நீலக்கலர் கோடுபோட்ட டி சர்ட் . பார்க்க ஆள் பரவாயில்லைதான்.அருகில் போய் நான் நின்றதும் நிமிர்ந்து பார்த்த முகத்தில் திடுக்கென்று ஒரு அதிர்ச்சி தெரிந்தது.சில நொடிகளில் அது சரியாகி லேசான புன்னகை மலர்ந்தது.

'ஏன் புடவை கலரை மாத்திச் சொன்னீங்க ?'

'நீங்க என்னைக் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி நான் உங்களை கண்டு பிடிச்சுடனும்னுதான்.'

' கண்டுபிடிச்சிட்டா.....? '

' ஆள் அப்பிடி இப்பிடி இருந்தா அப்படியே எஸ்கேப் ஆயிரலாம்ல ....,நீங்களும் அப்படித்தானே நெனைச்சிருக்கீங்க...?'

நண்பர் முழுக்கதையும் சொல்லிவிட்டுத்தான் முடித்தார்.. ஆனால் நான் இதற்கு மேல் சொல்வதாக இல்லை.இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் கண்டிப்பாக சொல்லியாக வேண்டிய ஒரு விஷ்யத்தைச் சொல்லிவிட்டு நிறுத்திக்கொள்கிறேன். நண்பர் அந்த மிஸ்டு காலிடம்  கேட்டாராம் ,

' முன் பின் தெரியாத என் கூடப் பேசணும்னு தோணுனதுக்கு என்ன காரணம் ' னு .

அதுக்கு அவங்க சொன்னாங்களாம்.,

' வசந்தி அடிக்கடி உங்களைப் பத்தி பேசுவா.கொஞ்சம் ஓவராவே பேசுவா.அவ பேசப்பேச எனக்கு கடுப்பா வரும். அவளுக்கு முடிஞ்சது நம்மால முடியாதான்னு தோணும்  .சந்தர்ப்பம் வந்தது , போன் போட்டேன். ஒரு விஷயம் தெரியுமா ? எனக்கு ஒரு கெட்ட குணம். எதாயிருந்தாலும் அது எனக்குன்னு இருக்கணும்.பெஸ்ட் பிரண்டாவே இருந்தாலும் பங்கு போட்டுக்க முடியாது. சரியா..? '

எப்படி இருக்கு நாட்டு நடப்பு பாத்தீங்களா ..? எல்லாம் காலம் செய்யும் கோலம்.

'



 

' இளைய ராஜாவிடம் கதை சொன்னேன் ......'படிக்க சொடுக்குக

http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_1294.html








' தேவ செய்தி -ஒரு அனுபவம்' படிக்க சொடுக்குக

http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_13.html












வெள்ளி, 13 ஜூலை, 2012

தேவ செய்தி-ஒரு அனுபவம்





                                       


மிக அவசியமான சில நேரங்களில் தேவ செய்திகள் நமக்குக் கொடுக்கப்
பட த்தான் செய்கின்றன.நாம்தான் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று .படித்துப் பாருங்கள்.

எங்கள் கிராமத்தில் இருக்கின்ற மிகப்பழமையான பாழடைந்த சிவன் கோவில் ஒன்றைப் புதுப்பிக்கும் பணி  நடைபெற்று வருகிறது.ஏறக்குறைய முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே சிதிலமடைந்து போயிருந்த தட்சிணாமூர்த்தி [ குரு பகவான் ] சிலைக்குப் பதிலாக புதிய சிலை ஒன்று செய்திருந்தோம். எங்களுக்குத் தோன்றிய யோசனைப்படி கோவிலின் தெற்குச் சுவரில்  சிதிலமடைந்த சிலை இருந்த அதே இடத்தில் மரம்  ஒன்று குடை விரித்தது போன்ற கான்க்ரீட் அமைப்பை உருவாக்கி அதன் கீழ் சிலையை நிறுவும் திட்டத்தோடு இருந்தோம். நாங்கள் யாரும் எப்போதும் கோவிலில் இருப்பதில்லை.ஸ்தபதியின் மேற் பார்வையில்  வேலைகள் நடந்து வந்தன.




நான் கிராமத்துக்குப் போகும் சமயங்களில் காலையும் மாலையும் கோவிலுக்குச் சென்று பார்ப்பது உண்டு. வெயிலுக்குப் பயந்து மாலை 5.30 மணிக்கு மேல்தான் கோவிலுக்குச் செல்வது வழக்கம்.அன்று ஏதோ ஒரு மன உந்துதலில் 4.00 மணிக்கே  எழுந்து கோவிலுக்குச் சென்றேன். நான் போன நேரத்தில் அந்த மரககுடை அமைப்புக்காக நான்கடி ஆழப் பள்ளம் தோண்டப் பட்டு அதில் கொட்டுவதற்காக கான்க்ரீட்டும் கலக்கப்பட்டுத் தயாராக இருந்தது. பள்ளத்தை நிரப்புவதற்காக முதல் சட்டி கலவையை பணியாள் எடுத்துவந்தபோது பள்ளத்துக்குள் கோவிலின் அடிப்பாகமாக அமைந்திருந்த ஒரு கல்லில் ஏதோ எழுத்துப் பொறிப்புகள் இருப்பது என் கண்ணில் பட்டது.

அப்படியே வேலையை நிறுத்திவிட்டு கவனித்துப் பார்த்ததில்  மண்ணுக்குள்
4 x 2 அடி அளவுள்ள முழு பழங்காலக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. அது யாரோ கோவிலுக்கு அளித்த நில மானியம் பற்றிய குறிப்பு களைக் கொண்டிருந்தது. அந்தக் கல்வெட்டைப் பார்த்ததும் அதைக் கான்க்ரீட்டால் மூடிப்பூசி மரக்குடை அமைக்க மனம் ஒப்பாமல் அந்த  எண்ணத்தைக் கை விட்டுவிட்டோம்.அதற்குப் பதிலாக கல்வெட்டு வெளியே தெரியும் வகையில்  மேடை அமைப்புடன் கூடிய ஒரு புதிய சந்நிதி வடிவத்தை  ஸ்தபதி வரைந்து தந்தார்.இந்தப் புதிய சந்நிதியின் வடிவம் எல்லோருக்கும் பிடித்துப் போனது.இப்போது புதிய வரைபடத்தின் அடிப்படையில் பணிகள் நடக்கின்றன.

 அன்று எப்போதும் போல் நான் 5.30 மணிக்கு கோவிலுக்கு வந்திருந்தால் அந்த நேரத்துக்குள் கான்க்ரீட் கலவை முழுவதும் கல்வெட்டு இருந்த பள்ளத்தில் கொட்டப்பட்டு அதில் கான்க்ரீட் தூண் நடப்பட்டு மரக்குடை அமைப்புப் பணி நிறைவடைந்திருக்கும். கல்வெட்டு நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும். குருபகவானுக்கும் மரக்குடை சன்னதியே அமைந்திருக்கும்.

இங்கே நான் சொல்ல வருவது என்ன வென்றால் இந்தச் செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும்  வண்ணம் வழக்கத்துக்கு மாறாக 4 மணிக்கே எழுந்து கோவிலுக்குப் போக வேண்டும் என்று எனக்கு உந்துதல் தந்தது எது..?

இது தற்செயலா.., அல்லது தெய்வச் செயலா..?

நடந்து முடிந்த நிகழ்வுகளின் காரண காரியங்களை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்த பிறகு நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்.

கோவிலின்  பூஜை,புனஷ்காரப் பணிகளுக்கு நிலங்களைத் தானம் அளித்து பெரும் புண்ணியம் தேடிக்கொண்ட  அந்தக் கொடையாளனின் பெயர் மண்ணுக்குள் புதைந்து விடாமல்  காலமெல்லாம் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்பது தெய்வத்தின் அனுக்ரகமாகயிருக்க வேண்டும் அல்லது தனது சன்னதி எப்படி அமைய வேண்டும் என்பதை தெய்வமே இந்த மனிதருக்கு உணர்த்தத் தலைப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்த இரண்டு செயல்களுமே செம்மையாய் நிறைவேற இறைவன் கருணை கூர்ந்திருக்க வேண்டும்.

இவை எல்லாம் இனிதே நிறைவேற வந்த தேவசெய்தியே வழக்கத்துக்கு மாறாக 4.00 மணிக்கே எழுந்து கோவிலுக்குப் போகவேண்டும் என்ற அந்த உந்துதல் .சரிதானா...?








' மணிமாறன் மாமா சொன்ன கதைகள் -3 ' படிக்க இங்கே சொடுக்கவும் 
http://thenpothikai.blogspot.in/2012/09/3.html





' மீனவர் பிரச்னை -ஒரு கசப்பான உண்மை ' படிக்க சொடுக்குக
http://thenpothikai.blogspot.in/2012/10/blog-post_6.html









வியாழன், 5 ஜூலை, 2012

உலகத் திரைப்பட அறிமுகம்--In to the wild

கிறிஸ்டோபர் ஜான்சன் மேக்கண்ட்லஸ் என்னும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த புத்திசாலி மாணவனுக்கு நவீன வாழ்க்கை முறையில் பிடிப்பில்லாமல் போகிறது.இந்தப்பூமியில் தான் வாழ்ந்ததற்கான எல்லா அடையாளங்களையும் அழித்துவிட்டு 


காணாமல் போகிறான்.ஒரு போலிப் பெயரோடு அமெரிக்காவின் கடைசி எல்லை வரையிலும் பயணம் செய்கிறான்.பயணத்தின் இடையே புதுப்புது மனிதர்களையும் புதுப்புது அனுபவங்களையும் சந்திக்கிறான் அனாலும் எதுவுமே அவனைத் திருப்தி படுத்துவதாக இல்லை. இறுதியாக மனித நடமாட்டமே இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்குள் நுழைந்து ஒரு சிற்றோடையை தாண்டி அத்துவானக் காட்டுக்குள் புகுந்து இயற்கையோடு  இணைந்து வாழத் துவங்குகிறான். எப்போதோ யாரோ விட்டுச் சென்ற பழைய பஸ் ஒன்று அவனுக்கு இருப்பிடமாகிறது. புதுச் சூழலும் வாழ்க்கையும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.போகப்போக பசியும் பட்டினியும் 
வாட் டி எடுக்க எலுமபும் தோலுமாக உருவமே மாறிப்போகிறான். நீண்ட சிந்தனைக்குப் பிறகு வீடு திரும்ப முடிவெடுத்து காட்டுக்குள்ளிருந்து வெளியேற முயல்கிறான். ஆனால் அவன் கடந்து வந்த ஓடை இப்போது  பெரிய ஆறாக இருகரையும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றைத் தாண்ட முடியாமல் திரும்பி வந்த அவன் பசிக்கு ஏதோ காட்டுச்செடியை  தின்ன அதனால் வாந்தி பேதியாகிறது. உடல்  உருக்குலைந்து ,செயல் இழக்க இறுதியாக தனது உண்மைப் பெயரை ஒரு பலகையில் செதுக்கி தனது அடையாளத்தை உலகத்துக்குத் தெரிவித்துவிட்டு மல்லாந்து படுத்து வானத்தைப் பார்த்தவாறு இறந்து போகிறான்.சில மாதங்களுக்குப் பிறகு வேட்டைக்காரர்கள் சிலர் அவன் உடலைக்கண்டு பிடித்ததாக ஒரு  குறிப்போடு படம் முடிகிறது.

கதாநாயக நடிகர்  நமது சீயான் மாதிரி அர்ப்பண உணர்வோடு உடலை மெலிய வைத்து உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்..உண்மைச சம்பவத்தின் அடிப்படையிலான இந்தப்படத்தை பிரபல நடிகர் சீன பென் [ Seen Penn ] இயக்கித் தயாரித்து இருக்கிறார்.சிறந்த நடிகரான அவர் ஒரு சிறந்த படத்தையே நமக்குத் தந்திருக்கிறார்.

புதன், 4 ஜூலை, 2012

மணிமாறன் மாமா சொன்ன கதை--2


கிராமத்தில் ஒரு கிடா விருந்து விழா அன்று ஒரு குவார்ட்டரும் ஒரு கட்டிங்கும் உள்ளே போன நிலையில் மணிமாறன் மாமா சொன்ன கதை இது..






இப்பத்தானே  உங்களுக்கு கவர்மெண்டே ஊருக்கு ஊரு கடையும் உக்காந்து குடிக்க பாரும் கட்டிக்குடுத்து வசதி பண்ணிக் குடுத்துருக்கு..அப்பல்லாம் ஒரு செம்பு கள்ளுக்கு நாங்க பட்ட பாடு இருக்கே..சொல்லி மாளாதுடா மாப்புள..இந்தா தெக்கே தெரியுது பாரு வேலிகாத்தான் காடு அதுக்கு அங்கிட்டு இருக்கு அந்த ஊரு.. பேரச் சொன்னாலும் ஊரச்சொல்லக்கூடாதும்பாங்க.......அத எல்லாரும் சின்னப் பாண்டிச்சேரின்னுதான் சொல்லுவாய்ங்க..ஊரச்சுத்தி பனைமரக் காடு. ஒரு வண்டி வாசி வரப்போக நாதியில்ல...உள்ள நுழைஞ்சு வெளிய வர்றது உம்பாடு எம்பாடுதான்..அதான் வசதியாப் போச்சு ஊர்க்காரய்ங்களுக்கு..

ஒரு பனை விடாம கள்ளுமுட்டி தொங்கும்..விடியக்காலம் நாலு மணிக்கி எறக்கிருவாய்ங்க. ராத்திரி ஏழு மணி வரைக்கும் இருக்கும்..கள்ளு மட்டும்னு இல்ல..ஊருக்கு கடைசியா இருக்கிற ஒத்தை வீட்டுல சாராயமும் இருக்கும்..அந்தி சாய ஆரம்பிச்சதும் நம்ம பயலுக கெளம்பிருவாய்ங்க... ஆசைத்தம்பிதான் மொத ஆளா நிப்பான்..ஒருநாளு சும்மா இவைங்க கூட வேடிக்கை பாக்கத்தான் போனேன்..என்னையும் புடிச்சுக்கிச்சி சனியன்..இப்ப மாதிரியா, என்கிட்டயே  வந்து குவாட்டருக்கு பத்து ரூபா கொறையுது குடுங்க மாமான்னு கேக்குறானே நாம்பாக்கப் பொறந்த இந்த சொக்கம்பய... அப்பல்லாம் ஊர்ப் பெரிய ஆளுகளுக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி போவமப்பு..

ஆங் ...அங்க எங்க செட்டுக்கின்னே கள்ளுப் பானைய மூடிவச்சிக் காத்துக் கிட்டு இருக்கும்ங்க ஆம்பிளையும் பொம்பிளையும்...போயி உக்காந்துட் டோம்னா பொம்பிளைக நாட்டுக் கோழிமுட்டை பொரிச்சுக் கொண்டு வந்து வைக்கும்ங்க..உக்காந்து உக்காந்து குடிச்சுப்புட்டு பத்து மணிக்கு மேலதான் எந்திருச்சி ஊருக்கு வருவோம்.

அந்த ஊர்ல பாண்டின்னு எம் மச்சினன் ஒருத்தன் இருக்கான்..அவம் பண்ற அட்டகாசம் இருக்கே நீங்கல்லாம்  தாங்கமாட்டியப்பு.. பாண்டியும் அவன் கூட்டாளி ராஜேந்திரனும் சேந்து குடிச்சுப் புட்டாய்ங்கன்னா ஊர அதகளம் பண்ணிருவாய்ங்க .நடு ராத்திரில மரத்தில ஏறி கள்ளை எறக்கி குடிப்பாய்ங்க. . ஓடைக் கரைப் புதருக்குள்ள ஒத்த வீட்டுக்காரன் புதைச்சு வச்சிருக்கிற சாராய ஊறலை அள்ளிட்டு வந்து வீட்டுக்குள்ளேயே வச்சிக் காயச்சி வடிச்சுருவாய் ங்க..ஊருக்கு வெளிய வயக்காட்டுல கிடையில கிடக்கிற ஆட்டக் களவாண்டு தின்னுருவாய்ங்க... அப்படியாளு  பாண்டி..

அவனும் வந்து எங்க கூடச் சேந்துக்குவான்..வயிறு முட்டக் கள்ளக் குடிச்சுப்புட்டு வரும்போது அந்த ஒத்த வீட்டுக்கிட்ட பாண்டிக்கு கால் தானா நின்னுரும் .ஒத்த வீட்டுக்காரரு கொல்லைக்குப் போயி வைக்கோல் போருக்குள்ள கைய விட்டு போத்தல எடுத்துக்கிட்டு வருவாரு,,சாராயம் ஒரு கிளாஸ ஊத்திக்கிட்டுத்தான் மேல நடப்பான் பாண்டி .. அதுக்கு அவன் ஒரு வெளக்கம் சொல்லுவான் பாரு'அதான் பெரிய காமெடி அது வந்து மறிச்சுக்கட்டுறதாம். .வெளங்குதா ஒனக்கு...? குடிச்ச கள்ளு வெளிய வந்துராம சாராயம் மறிச்சுக் கட்டிருமாம்..

திரும்பி கண்மாய்க்குள்ள வரும்போது ஊரு கண்ணுல பட்டதும் இங்க அப்பிராணி மாதிரி இருக்கிற இந்த கோளாறுபயல்  'இந்தா தெரியுது பார் தென்னிலங்கை. எப்படித்தான் தாண்டுவேனோ பெருங்கடலை''ன்னு ராகம் போட்டு அனுமார் மாதிரிக் குதிக்கிறதப் பாக்கணுமே. இவ்வளவுக்கும் இந்தக் கோளாறு சொந்தக்காசுல குடிக்கறதே இல்லன்னு ஒரு பாலிசி வச்சிருந்தாரு.. எவ்வளவு சுருக்கா முடியுமோ அவ்வளவு சுருக்கா முடிச்சுப்புட்டு படக்குன்னு வெளிய வந்து தூரமாப் போயி நின்னுக்குவாரு. காசு கொரஞ்சிச்சின்னா நாங்கதான் கடன் சொல்லிட்டு வரணும்..

இங்க நாங்க பொறம்போக்குப் பயலுக எல்லாம் ஒண்ணா எங்கயாவது பொட்டல்ல ,மந்தைலதான தூங்குறது ;அதுனால வீட்டுக்கு எங்க அலும்பு எதுவும் தெரியாது.. 

இந்த சீனியர்,,ஜுனியர்னு சொல்றீங்களே அது மாதிரி இந்த விசயத்தில எங்க ஊர்ல சின்னசெட்டு,,பெரிய செட்டுன்னு வேற இருந்துச்சு.பெரிய செட்டில சத்தி [ சக்திவேல் ] மச்சான் முக்கியமான ஆளு..என்னடா எல்லாம் மச்சான் முறையாவே இருக்கேன்னு பாக்கிறியா?...ஊரு நாட்டுல அப்படித்தாம்ப்பு...அண்ணன் தம்பில்லாம் ஒரு மரியாதைக்கு .ஒதிங்கிருவாய்ங்கல்ல ...மச்சினய்ங்கமாருதான் செட்டு சேத்துக்கிட்டு திரிவாய்ங்க...

சரி கதயக்கேளு..சத்தி மச்சான் என்ன பண்ணுவாருன்னா ஊருல வீட்டுக்கு வீடு கோழிக்கூடு  இருக்கும்ல...அதுல  அசந்தவன் வீட்டுக் கூட்டுல ஈரத் துணியப்போட்டுக் கோழியை அமுக்கி கையோட கொண்டுபோயிருவாரு. அன்னிக்கி கோழிக்கறியோட கள்ளு விருந்து நடக்கும்..சமையல் சாமான் ஒண்ணும் கிடைக்கலன்னா மயித்தப் பிச்சிக் கொடல எடுத்துட்டு உப்பையும் மொளகாயையும் உள்ள வச்சு  அமுக்கிச் சுட்டுத் தின்னுருவாய்ங்க

சத்தி மச்சான் அடிக்கடி சொல்ற ஒரு ஜோக்கு ஒண்ணு இப்ப ஜாபகத்துக்கு வருது..காலையில  'ச்சே...இனிமேல  குடிக்கவே மாட்டேன்' ம்பாரு... தெகச்சுப்போயி நாம பாக்கறதுக்குள்ள 'இனி ராத்திரிதான்''ன்னு முடிப்பாரு..கொல்லுனு சிரிப்போம்..சத்தி மச்சான் இப்ப குடிக்கிறத அறவே விட்டுட்டாரு.. அந்தக் கதைய அப்புறம் சொல்றேன்..ஆனா அவரு மகன் மொடாக் குடியன் ஆயிட்டான்..அதையும்  ஒரு காமெடியாச் சொல்லுவாரு..' நாம் படிச்ச புத்தகத்தை  மூடி வச்சுட்டேன்..இப்ப எம் மகன் அத எடுத்துப் படிச்சுக் கிட்டிருக்கான்..'



செவ்வாய், 3 ஜூலை, 2012

எழில் மிகு எல்லோரா

புகழ் பெற்ற எல்லோரா குகைக் கோயில்கள் பற்றிக் கேள்விப் பட்டிருப் பீர்கள்.அண்மையில் அங்கே சென்று வருவதற்கான அருமையான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அந்த எளிமையான அனுபவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..தொடரலாமா  ?


ஷிர்டி சாய் பாபாவைத் தரிசனம் செய்வதுதான் எமது மகாராஷ்டிரா பயணத்தின் முதல் நோக்கம்..பயணத்துக்கு முன்பே எல்லோரா ஷீரடிக்கு அருகிலேயே இருப்பதை அறிந்திருந்ததால் அந்தக் கனவும் நினைவில் வந்துபோய்க்கொண் டிருந்தது..




சாய்பாபா தரிசனம் நிறைவேறியதும் பேருந்து நிலையத்துக்கு அருகே அமைந்திருந்த பயண ஏற்பாட்டாளர்களிடம் சென்று விசாரித்தோம்..அடுத்த நாள் காலை எட்டரை மணிக்கு வந்து விடச் சொன்னார்கள்..


அதன்படியே போய் நின்றோம்..250 ரூபாய் [ஒருவருக்கு] வாங்கிக் கொண்டு பயணச் சீட்டு கொடுத்தார்கள்..நல்ல நிலையில் இருந்த சுமோ வண்டி ஒன்றில் எட்டுப்பேர் வரையில் ஏற்றினார்கள்..நல்லவேளை.....தனியாளாக இருந்ததால் எமக்கு முன் இருக்கை கிடைத்தது..9.30 க்கு வண்டி கிளம்பியது.11 மணிக்கு ஏதோவொரு இடத்தில் காலை உணவுக்கு வண்டியை நிறுத்தினார்கள்..சாப்பாட்டுக்கடையில் இருந்தது அத்தனையும் சாட் என்ற வகையிலான  உணவுப்பண்டங்கள்..




நம் ஊர் போண்டா போல எதோ ஒன்றை விழுங்கி தேநீர் குடித்து சுத்திகரிக்கப்பட்ட நீரையும் குடித்து [ இந்த இடத்தில் தண்ணீர் பா ட்டிலை தமிழில் எழுத முயன்றோம்..முடியவில்லை..பாட்டிலுக்கு ஏதாவது தமிழ் வார்த்தை இருக்கிறதா ? ] பசியாறிக்கொண்டோம்.. அடுத்து எங்கும் நிற்காது பயணித்து 12.30 மணியளவில் எல்லோராவை அடைந்தோம்.. முதலில் அங்கேயிருந்த சிவன் கோவிலுக்கு அழைத்துப் போனார்கள்.. அப்போது கடவுள் வழிபாடு நம் கருத்தில் இல்லாததால் கோவிலின் சிறப்புகள் எதுவும் கவனத்தில்  இல்லை..


அங்கிருந்து கிளம்பிய அடுத்த பத்து நிமிடத்தில்  அதிக உயரமில்லாத  மலைத்தொடர் ஒன்று நம் கண்ணெதிரே விரிந்தது..அருகில் சென்று முதன்மைக் குகைக்கோவில் எதிரே நிறுத்தினார் வண்டியோட்டி..நிமிர்ந்து பார்த்த நமக்குள்  சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ராவில் தாஜ்மஹாலைப் பார்த்தபோது ஏற்பட்ட பிரம்மாண்ட உணர்வுதான் கிளர்ந்தெழுந்தது.. 




ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் விரிவில் இங்கே உள்ள 32 குகைகளையும் நிச்சயமாக ஒருநாளில் பார்த்துவிட முடியாது..அப்படிப் பார்க்கவேண்டு மானால் தனிப்பட்ட பயணமாக வரவேண்டும்..அப்படிப் பார்க்க முடிந்தால் அது பழங்கால மனிதர்களின் மிகக் கடின உழைப்பையும் அர்ப்பண உணர்வையும் விடாமுயற்சியையும் நமக்கு எடுத்துரைக்கின்ற தெய்வீக அனுபவமாகவே இருக்கும்..




இந்த குகைக் கோவில்களின் சிறப்புகளை வெறும் வார்த்தைகளால் விவரிப்பது சரியாக இருக்காது என்பது எமது கருத்து..இங்கே வெளியிடப் பட்டுள்ள புகைப்படங்கள் அதை சிறிதளவு நிறைவு செய்யும் என்று கருதுகிறோம்..என்றாலும் நேரில் பார்ப்பது  மட்டுமே முழுமையானதாக இருக்கும்..














































இரண்டு மணி நேரம் மட்டுமே எம்மால் எல்லோராவில் இருக்க முடிந்தது..அது மிகக் குறைந்த நேரம் என்றாலும் அந்த அனுபவமே எமக்கு போதுமானதாக இருந்தது..


எல்லோராவிலிருந்து அடுத்து நாங்கள் சென்றது அவுரங்காபாத்.. தாஜ்மஹாலைப்  பிரதிபலிக்கின்ற  அவுரங்க சீப்பால் கட்டப்பட்ட ' பிவி கா மக்பாரா' என்ற கட்டிடமே இந்த நகரத்தின் சிறப்பு..எல்லோராவை ஒத்த புகழ் பெற்ற அஜந்தா குகைகள் இங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன..எங்கள் பயணப் பட்டியலில் அஜந்தா இடம்பெறாததால் அதைப் பார்க்க இயலவில்லை என்பது எமக்கு ஒரு மனக்குறை..


வழியெங்கும் மராட்டிய மாவீரன் சிவாஜி புரவிஎறிப் பாய்ந்து சென்ற வறண்ட மலைச் சரிவுகளையும் மொஹலாய சாம்ராஜ்யப் பிரம்மாண்டத்தின் மிச்சங்களையும் பார்த்து வரலாற்றுக் காலத்தை நினைவு கூர வாய்ப்புக் கிடைப்பது இந்தப்பயணத்தின் இன்னொரு சிறப்பம்சமாகும்..


பயணம் முடித்து இரவு 9.00 மணிக்கு ஷிர்டி திரும்பி வந்து சேர்ந்தோம்.. இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக மீண்டும் எல்லோரா  செல்வதாகத்தான் உத்தேசம்..







திங்கள், 2 ஜூலை, 2012

மணிமாறன் மாமா சொன்ன கதை -1


                                                             


எங்கள் ஊர்ப் பெரிசு மணிமாறன் மாமா தனது பட்டணத்து நண்பர்  ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்த  உண்மைக்கதை ஒன்றைக் கேட்க நேர்ந்தது.இதோ அந்தக் கதை மாமாவின் குரலில் ......


எங்க கிராமம் ராமநாதபுரம் மாவட்டத்துல கடற்கரை ஓரத்துல இருக்கு.இப்ப அத இ சி ஆர் னு சொல்றாய்ங்க. ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி பாத்தா சிலோனுக்கும் மலேயாவுக்கும் போக்குவரத்து உள்ளவுங்க இங்க அதிகம். அதே மாதிரி இங்கேயிருந்து சிலோனுக்கும் சிலோன்லேயிருந்து இங்கைக்கும் கடத்தலும் அதிகம். பலநாள் ராத்திரி வேளையிலே கடற்கரையிலேயிருந்து வர்ற ரோட்டுல கடத்தல் வண்டி சர் சர்ருன்னு போறதையும் பின்னாலேயே கஸ்டம்ஸ்காரங்க துரத்திக் கிட்டு போறதையும் பாத்திருக்கேன்.

உள்ளூர்ல ஆடம்பரம் உள்ள சில ஆளுக தொனையோட இது நடந்துக் கிட்டு இருந்துச்சு.இலங்கையிலேயிருந்து போராளிப் புள்ளைங்களும் இங்க சர்வ சாதாரணமா வந்துபோவாய்ங்க.

ஒருநாள் விடியக்காலையிலே டீக்கடைக்கு பால் விக்கப்போன ஆளுக ரோட்டோரமா நெறைய பிளாஸ்டிக் விரிப்புக மடிச்ச நிலையில கிடக்கிறதைப்  பார்த்து வீ ட்டுக்கு எடுத்துக்கிட்டு வந்தாக.அதுக்கு அப்புறம் யாராரோ வந்து அதைபத்தி விசாரிச்சதாகவும் கடத்தல் காரைய்ங்க அதை எடுத்த ஒருத்தனை அடிச்சுபோட்டதாகவும் பேசிக்கிட்டாங்க.

இன்னொருநா ஆடு மேய்க்கிற பய ஒருத்தன் காட்டுல புதருக்குப் புதரு பெரிய பெரிய பிளாஸ்டிக் பண்டல்களப் பார்த்துட்டு  ஊருக்குள்ள ஓடிவந்து சொல்ல முந்துனவன் வீட்டுலயெல்லாம் கலர் டிவியும் விசிஆரும் சீப்பட்டுச்சி. இவ்வளவுக்கும் அப்பல்லாம் ஒருபய வீட்டுலயும் கரண்டு இல்லாதது ஒருபக்கம் இருக்க இந்த டிவிபொட்டியத் தவிர மத்ததெல்லாம் என்னன்னு கூட இந்தப்பய புள்ளகளுக்குத் தெரியல.

இன்னொரு பெரிய வேடிக்கையக் கேளுங்க,ஒருநா கடக்கறயிலயிருந்து மாட்டு வண்டியில கடத்தல் சரக்கு எங்க ஊரு வழியா வர்றதா எவனோ ஒரு காவாலிப்பய  கொளுத்திப்போட்டுட்டுப் போயிட்டான்.நானும் எம்மச்சான் ஒருத்தனும் சேந்து ஒரு திட்டம் போட்டோம்.அங்கெங்கெ தேடியலஞ்சி  ரெண்டு செட்டு பேண்டு சட்டை தயார் பண்ணுனோம். மச்சான் பயலுக்கு பேண்டு இடுப்புல கூட நிக்கல.மப்டி போலீஸ் மாதிரி மாட்டு வண்டிய மறிச்சு சாமானக் கைப்பத்தறதுதான் எங்க திட்டம். ராத்திரி முழுக்க கொட்ட கொட்ட முழிச்சுக்கிட்டு வண்டிச்சாலயிலேயே நின்னு பாத்தோம்.ம்ஹூம் ....எந்த வண்டியும் வரல.ஊர்ப்பயளுககிட்ட எங்க சாகசக் கதயச் சொல்லிச்சொல்லி ரொம்ப நாளைக்கிச் சிரிச்சுக் கிட்டிருந்தான் மச்சான்.

கத இப்படி இருக்க ,இதே கடற்கரை ஓரமா ஒரு ஏழெட்டு மைல் வடக்கே எங்க அம்மாவோட பொறந்த ஊர்லயிருந்து எங்க குடியானவன் ஒருத்தன் ஒருநா விடியக்காலை மூணு மணிக்கி எங்க வீட்டுக்கு ஓடியாந்தான். எங்க அம்மா என்ன எழுப்பி கூட்டிக்கிட்டுப் போனபோது நான் பாத்தது இது. வந்தவன் கைகாலெல்லாம் நடுங்கிக்கிட்டு இருந்துச்சு. மூஞ்சியில ரத்தமேயில்ல. திக்கித்திணறி மூச்சு வாங்கி வாங்கி அவன் சொன்னது என்னன்னா....

மேய்ச்சலுக்குப் போன மாடு வீட்டுக்கு வரத் தாமதமானதால அதத்தேடிப் போன குடியானவன் ஆத்தங்கரையிலே ஒரு புதருக்குள்ளிருந்த பண்டலப் பாத்துட்டு நைசா வீ ட்டுக்குத் தூக்கிட்டு வந்துட்டான். பண்டலுக்குள்ளயிருந்தது அத்தனையும் நயமான சங்கு மார்க் லுங்கி. மொத்தம் நூத்தம்பது உருப்படி. சிலோனுக்குக் கொண்டுபோக யாரோ ஒளிச்சு வச்சிருந்தது இவன்கிட்ட மாட்டிருச்சி.எப்படியும் ரூபா நாலாயிரத்துக்கும் மேல தேறும்.அந்தக்காலத்தில நாலாயிரம்னா என்ன மதிப்புன்னு பாத்துக்குங்க 

ஆனா அன்னிக்கி ராத்திரிதான் பயலுக்குத் தெரிஞ்சது தனக்கு வந்திருக் கிறது அதிர்ஷ்டம் இல்ல அனத்தம்னு.இந்த ஊர்க்காரனுகதான் தூக்கி வந்திருக்கணும்னு அனுமானம் பண்ணி கடத்தல் கும்பல் ஊருக்குள்ள நுழைஞ்சு தேட ஆரம்பிச்சுருச்சி.பயந்து போன நம்மாளு படார்னு நெல்லுக்கொட்டி வைக்கிற பெரிய குதிரத் தெறந்து எல்லாத்தையும் அதுக்குள்ளே கொட்டி மூடி மண் பூசி வச்சிட்டான்.அப்பிடியே 
கெளம்பினவந்தான் இப்ப எங்கம்மா கால்லே விழுந்து 'என்ன காப்பாத்துங்கக்கா'ன்னு கதர்றான்.

எங்கம்மா 'ஏதாச்சும் பண்ணுடா'ன்னுட்டுப் போய்ட்டாங்க,உக்காந்து யோசிச்சேன்.எப்பவுமே நம்மகூடத் திரியிற ஆசைத்தம்பியையும் கோளாறு மச்சானையும் கூட்டிக்கிட்டேன்.கோளாறுனகிறது பேரில்ல. பட்டப்பேரு. அவருக்கு அவுக அப்பா வச்ச பேரு சுப்பிரமணி.நாங்க வச்ச பேரு கோளாறு .இந்தாளு எதைச் செஞ்சாலும் அது கடைசியில கோளாறுலதான் முடியும். அதுனால இந்தப் பேரு.

அப்பல்லாம் இந்தா ஈசப் படை மாதிரித் திரியுதே மோட்டார் சைக்கிளும் காரும் அதெல்லாம் கெடையாது.ட்ராக்டரும் கூட அபூர்வம்தான்.அதிக பச்ச சொகுசு வாகனம் கூண்டு வண்டிதான்.அது எங்க வீட்டிலேயே இருந்துச்சு.மலேயா போக்குவரத்துக்காரரு ஒருத்தர் வீட்டுல பெரிய சைஸு சூட்கேசு ஒண்ணு ரெடி பண்ணுனோம்.எங்களோட திட்டத்துக்குத் தோதா அன்னைக்கின்னு அம்மா ஊருக்குப் பக்கத்துல ஒரு ஐய்யனார் கோவில்ல ராத்திரிக்கி கூத்து.ஒரு ஆறு மணிக்கெல்லாம் மூணுபேரும் வண்டியப் பூட்டிக்கிட்டுக் கிளம்பிட்டோம்.

எட்டரை மணி போல அம்மா வீட்டுக்குப் போயிட்டோம்.போற வழியிலேயே வண்டியகூட நிறுத்தாம நைசா சூட்கேச மாரிமுத்தன் வீட்டுக்குள்ள தூக்கி வீசீட்டு  போய்ட்டோம்.கூத்துப் பாக்க வந்திருக்கோம்னு நெனைச்சு தாத்தாவுக்கு ரொம்ப சந்தோசம்.சாப்பிட்டு முடிச்சுட்டு நான் மட்டும் மாரிமுத்தன் வீட்டுக்கு போயிப்பாத்தா புருசனும் பொண்டாட்டியும் குதிரப்பிரிச்சு எல்லாத்தையும் அள்ளி சூட்கேசுக்குள்ள திணிச்சுக்கிட்டிருக்காக.பொட்டி பிதுங்குது.மள மளன்னு எல்லாத்தையும் சரிபண்ணிகிட்டிருக்கோம்,வெளிய எங்கயோ சத்தம் கேக்குது.கள்ளக் கடத்தல் காரைங்க சத்தம்தான் அது. ரெண்டுபேரு ஒடம்பும் ஒதறுது பாரு. எனக்கே மயிரெல்லாம் சிலிர்த்திரிச்சி. விறுவிறுன்னு போயி தாத்தாக்கிட்ட சொல்லிட்டு வண்டியப் பூட்டிட்டோம்.

சரசரன்னு தெருவுல  வண்டிச்சக்கரத்தோட சத்தம்  மட்டுந்தான் கேக்குது.
மாரிமுத்தன் வீ ட்டு வாசல்ல வண்டிய நிறுத்தாம நானும் கோளாறும் மட்டும் இறங்கி ஒரே தம்முல  பொட்டியத் தூக்கிக்கிட்டு ஓடிவந்து வண்டியில ஏறிட்டோம்.ஆசைத்தம்பி பந்தய வண்டியே ஓட்டறவன்.எங்க ஊருச் சாலையைப் புடிச்சு வண்டியும் நாங்களும் நிதானத்துக்கு வந்த போது தூரத்துல கூத்துக்கொட்டகை லைட்டு ஜெகஜோதியாத் தெரியுது. ஆர்மோனியக்காரன் கத்துன கத்தல வச்சு நாரதருக்குத் திரை தூக்கப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.

பதினோரு மணியப்போல வீ ட்டுக்கு வந்திட்டோம். சூட்கேசப் பிரிச்சி 
லுங்கியை எல்லாம் எங்க வீட்டு மச்சு மேல அடுக்கி வச்சோம் ராவோட ராவா பொட்டிக்காரக கிட்ட பொட்டிய ஒப்படைச்சோம்.ஒண்ணுமே நடக்காத மாதிரி எங்க ஊர்ல மறுநா பொழுது விடிஞ்சுச்சு..

ஒரு பத்து நாள் பொறுத்துப் பார்த்தோம. எந்தப் பிரச்னையும் இல்ல. கடத்தல் கும்பல் அடுத்த சவாரியக் கவனிக்கப் போயிருச்சு போல. ஒரு சத்தத்தையும் காணாம்.. சத்தியமா சொல்றேன் இன்னைக்கு வரைக்கும் நான், எங்கம்மா, மாரிமுத்தன்,அவன் பொண்டாட்டி, ஆசைத்தம்பி, கோளாறு   இந்த ஆறு பேரத் தவுர இந்த விஷயம் ஒரு ஈ காக்காயக்குத் தெரியாது.

கதை இன்னம் முடியல இரு .கிளைமாக்ஸு இனிமேத்தான் வருது. இந்தக் கதையில ஜெயிச்சது யாருன்னு நினைக்கிறே ?.... ஹீரோவா... இல்ல...வில்லன்தான் ஜெயிச்சான். எப்புடின்னு கேளு.. என்னன்னா பொருளெல்லாம் வீணா மச்சுல கிடக்கே அத எடுத்து வித்துப் பணமாக்கலாமேன்னு யோசனை செஞ்சோம்.பத்து பத்தா எடுத்துக் கிட்டுப் போயி பக்கத்து டவுனுல கடைகள்ல வந்த விலைக்கு வித்துரலாம்னு முடிவு பண்ணுனோம்.யோசனை,முடிவு எல்லாமே நம்ம கோளாறோடதுதான் .சரின்னு பொறுப்பை கோளாறுகிட்டயே ஒப்படைச்சோம்.

முதல் பத்து கடைக்குப் போச்சு.பணம் கேட்டபோது அடுத்த பத்த கொடுக்கும்போது பணம் கொடுப்பாங்கன்னாரு கோளாறு. அடுத்த பத்தும் கடைக்குப் போச்சு.இதுக்கும் அதே பதில்தான் கோளாறுக்கிட்டயிருந்து. இப்படி சரக்கு எல்லாமே கடைக்குப் போயிருச்சு.பணம்தான் ஒருபைசா கைக்கு வரலே. யாருக்கிட்டப் போயி இதுக்குப் பஞ்சாயத்து வைக்கிறது? இந்தக் கோளாறுப் பையன்கிட்ட நான் தோத்துப்போனதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்.

இந்த விஷயத்தில நான் பிளான் போட்டுக் கிழிச்சனோ இல்லையோ, ஆரம்பத்திலிருந்தே தெளிவாப் பிளான்  போட்டது கோளாறுதான்னு அப்புறமாத்தான் எங்களுக்குப் புரிஞ்சது..என்ன செய்யிறது ..? கோளாறு வாழ்றதுக்காக எவனோ ஒருத்தன் பணம் போட்டு சங்கு மார்க்கு லுங்கி வாங்கியிருக்கான்..எங்கயோ இருக்கற மாரிமுத்தன் அதத் தூக்கிட்டு வந்திருக்கான்..தூக்கிட்டு வந்தவனைக் காப்பாத்தறதுக்கு நாங்க 
கெளம்பியிருக்கோம்..என்னமோ சொல்றாங்களே ,என்னப்பா அது...?...கேயாஸ் தியரியா ..?...ஆமா....அந்த எபக்டுதான் போல இது....






' மணிமாறன் மாமா சொன்ன கதை-2' படிக்க சொடுக்குக 

http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_04.html





'அனுபவம் புதுமை ,அவளிடம் கண்டேன் 'படிக்க சொடுக்குக  http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_15.html