புதன், 29 மே, 2013

அய்யனாரின் குதிரை









தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் புகைவண்டியிலோ பேருந்திலோ பயணம் செய்யும்போது சாளரத்தின் வழியாக ஒரு வியப்பூட்டும் காட்சியை நீங்கள் கண்டிருக்கலாம்.ஊருக்கு வெளியே அனேகமாக பனை மரங்களும் வெப்ப மரங்களும் அடர்ந்திருக்கின்ற  இடத்தில் அமைந்திருக்கின்ற ஒரு சிறு கோவிலுக்கு அருகே பெரிய மீசையோடு கையில் வெட்டரிவாள் தாங்கி ஆஜானுபாகுவாக ஒரு வீரன் பயமுறுத்தும் பார்வையோடு ஒரு குதிரையின் முதுகில் அமர்ந்திருக்க ,பாய்ந்து கிளம்ப தான் எப்போதும் தயார் என்பது போல நின்றிருக்கின்ற அந்த பன்னிரண்டு அடி உயர சுடுமண் குதிரையைத்தான் நாம் இங்கே குறிப்பிடுகிறோம் 

இப்படி ஒரு காட்சியை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அப்படிப்  பார்க்கும் போது உங்களுக்குள்ளே சில கேள்விகள் எழும்பியிருக்கின்றனவா?

' யார் இந்த அரிவாள் வீரன் .?.....இந்தக் குதிரையை யார் செய்கிறார்கள்..?... எப்படிச் செய்கிறார்கள்..?...எவ்வளவு காலமாக இந்தக் குதிரை இங்கே நிற்கிறது..? '

இப்படியெல்லாம் இயல்பாக எழும்புகின்ற  சில கேள்விகளுக்குத்தான் நாம் இப்போது இங்கே விடை காணப் போகிறோம்.

பல ஆயிரம் ஆண்டுகளாக நம் தமிழ் மக்கள் இந்த சுடுமண் குதிரைகளைச் செய்து வருகிறார்கள்.மிகப் பழமையானதும் உலகம் முழுவதும் பரவியதுமான மண்பாண்டக் கலையின் ஒரு அங்கமே இந்த சுடுமண் குதிரைகள்.புதிய கற்காலத்திலிருந்தே தமிழ் மக்கள் மண்பாண்டக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார்கள்.

' உலகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வுகளின்படி இந்தியாவில் நாம் கண்ட உட்புறம் எதுவுமில்லாத [HOLLOW]மிகப்பெரிய அளவிலான களிமண் சிற்பங்களே மிகச் சிறப்பானவையாகும்' என்று புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஸ்டீபன் இங்லிஸ் சொல்கிறார்.

தென்னிந்தியக் கிராமங்களில் மிகப்பெரிய கட்டுமானங்களோ ஆடம்பரமோ இல்லாத எளிமையான ஆனால் அழகான சிறு கோவில்களை நாம் நிறையக் காணலாம்.இவைகளைக் கோவில்கள் என்று சொல்வதை விட சன்னதிகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.இந்தச் சன்னதிகள் அய்யனாருக்காக எழுப்பப் பட்டிருக்கின்றன.

'அய்யனார்' என்பவர் ஆரிய வேத காலத்துக்கு முந்தைய தமிழ்த் தெய்வம். இவர் எல்லா வகைகளிலும் தமிழ்க் கிராமங்களின் நலன்களோடு தொடர்புடையவர்.பண்டைய தமிழ்க் கலாசாரத்தின்படி அய்யனார் தமிழ்க் கிராமங்களின் பாது காப்பாளராக இருக்கிறார்.

ஏதோ ஒரு காலத்தில் ஓரிடத்தில் குடியேறி கூட்டுச் சமுதாயமாக வாழ்ந்த மக்களோடு அவர்களுக்குள் ஒருவராய் வாழ்ந்து அவர்களுக்கு ஆலோசகராக, வழிநடத்துபவராக , பாதுகாவலராக இருந்து ஏதோ ஒரு வகையில் அவர்களுக்காக உயிர் கொடுத்த  ஒருவரை அவருடைய இறப்புக்குப் பிறகு தெய்வமாக வழிபடுவது திராவிடக் கலாசாரத்தின் ஒரு சிறப்பான அம்சமாகும்.

.இந்த வகையில் ஒரு சமுதாயத்தின் முன்னோடியாக வாழ்ந்து சென்ற ஒருவரையே  நம் மக்கள் அய்யனாராக தெய்வ அரியாசனத்தில் அமர்த்தினார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து சமயமாக நாம் ஏற்றுக் கொண்ட ஒரு புதிய வழிபாட்டு முறை நமக்கு பல கடவுள்களை அறிமுகப் படுத்தியதற்கு முன்பாக தமிழ்க் கிராமங்களில் அய்யனார் வழிபாடுதான் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது.

' அய்  ' என்ற தமிழ்ச் சொல்லுக்கு ' மூத்தவர் ' என்பது பொருளாகும்.சங்க இலக்கியங்களில் இந்த சொல் ' தலைவன் ', ' தந்தை ' , ' மூத்த தமையன் ' .
' நாயகன் ' மற்றும் ' கணவன்' ஆகிய பொருள்கள் தரும்படி கையாளப்
பட்டிருக்கிறது.' அய்யன்', 'அய்யை ', 'அய்யர் ' ,'அய்யனார்' ஆகிய சொற்களின் தோற்றத்துக்கு ' அய் ' என்பதே முதலாக இருந்திருக்கிறது.

துவக்க கால சங்க இலக்கியங்களான ' அக நானூறு ' , 'பதிற்றுப்பத்து ',' நற்றிணை '  ஆகியன 'அய்யன் ' என்ற சொல்லை மூத்த தமையன் என்ற பொருள் தரும்படியும் ' அய்யர்' என்ற சொல்லை பன்மையில் மூத்த தமையர்கள்  மற்றும் 'சாதுக்கள்' ,' முனிவர்கள் ' என்று பொருள் தருமாறும் பயன்படுத்தியுள்ளன.

பாரம்பரிய கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பேணிப் போற்றும் வகையில் அமைந்ததே நம் முன்னோர் மேற்கொண்டிருந்த அய்யனார் வழிபாடு .வேறு வேறான தனிப்பட்ட குண நலன்களைக் கொண்ட பல்வேறு மனிதர்களைக் கொண்டிருந்தாலும் அனைவரையும் ஒன்றுபோல அனுசரித்துப் போவதே நல்ல கூட்டுக் குடும்ப சமுதாய அமைப்பாகும்

அய்யனார் சன்னதிகளில் அய்யனாருக்கு மட்டுமல்லாமல் வேறு வேறான நல்ல மற்றும் தீய சக்திகளைக்  கொண்ட பல்வேறு தெய்வங்களுக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.' கருப்பசாமி ', 'முனியன் '.'சுடலை மாடன்' , 'மதுரை வீரன்' என்று இடத்துக்குத் தகுந்தவாறு தெய்வங்களும் இவர்களோடு கூட அந்தந்தக் குடும்பத்தினரின் குல தெய்வங்களும் அங்கே சன்னதி கொண்டிருந்தார்கள்.

தம் மக்களைக் காப்பதிலும் குறைகளை நிவர்த்தி செய்வதிலும் கருப்பசாமி அய்யனாருக்கு அடுத்த இடத்தில் இருந்து அவருடைய படைத்தளபதியாக செயல்பட்டார்.மற்றவர்கள் அய்யனார் இடும் ஆணைகளை நிறைவேற்று கின்ற போர்வீரர்களாக இருந்தார்கள். அய்யனாரையும் கருப்பசாமியையுமே நாம் இங்கே வெட்டரிவாளோடும் வீச்சரிவாள் மீசையோடும் குதிரை மீது வீற்றிருக்கக் காண்கிறோம்.

வெட்டரிவாள் மக்களுக்கு கெடுதல் விளைவிக்கும் தீய சக்திகளை வெட்டி வீழ்த்துகின்ற ஆயுதமாகவும் வீச்சரிவாள் மீசை அந்த சக்திகளைப் பயமுறுத்துகின்ற எச்சரிக்கை அடையாளமாகவும் விளங்குகிறது.

கூட்டுக் குடும்ப சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டுக்கொருமுறை தவறாமல் அய்யனாரின் சன்னதியில் கூடுகிறார்கள்.ஆட்டுக்கிடாய் வெட்டி ,பொங்கல் வைத்து ஐயனாருக்குப் படைத்து அதன்பிறகு தாமும் உண்டு கூடிப்பேசி மகிழ்ந்து வீடு திரும்புகிறார்கள்.இதன் மூலமாக ஓராண்டு காலமாக அவர்களிடையே நிரவிக்கிடந்த வேற்றுமைகள் களையப்பட்டு உறவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு கூட்டுச் சமுதாய வாழ்க்கை முறை மீண்டும் மீண்டும் புத்தாக்கம் செய்யப்படுகிறது.

தகுந்த வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதிலும் நோய் நொடிகளைத் தீர்ப்பதிலும் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதிலும் செய்யும் தொழிலைச் சீர் படுத்துவதிலும் முன்னிலை வகித்து அய்யனார் தம் மக்களின் வாழ்வுகாலம் முழுமைக்கும் துணையாக நிற்கிறார். மக்கள் அய்யனாரிடம் வைக்கின்ற கோரிக்கைகளுக்கும் வேண்டுதல் களுக்குமான பதில்கள் சன்னதியில் ' சாமியாடிகள் ' மூலமாகவும் கனவுகள் மூலமாகவும் கிடைக்கப் பெறுகின்றன.

அய்யனார் சன்னதியில் அய்யனாருக்கு சேவை செய்பவர்கள் வேளார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.வேளார் மக்களின் முதன்மைத் தொழில்  மண்பாண்டங்கள் செய்வது. மண்ணைக்கொண்டு அவர்கள் படைத்த தெய்வ உருவங்களின் நேர்த்தி இந்தத் திறன் கடவுள் அவர்களுக்கு பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்ட வரமாகக் கருதச் செய்தது. அய்யனாருக்கும்  கருப்பசாமிக்கும்  அவர்களே  உருவம் கொடுத்தார்கள். உருவம் தந்தவர்களே அவர்களுடன் உறவாடும் உரிமையையும் பெற்று பூசாரிகள் ஆனார்கள்.

விழாக் காலங்களில் பூசாரிகள் சிறப்பு விரதமிருந்து அய்யனாருக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பாளர்களாகின்ற 'சாமியாடிகள் ' ஆவார்கள். தாரை தப்பட்டைகளும் கொட்டுமேளங்களும் துரிதகதியில் முழங்க அந்த அசுர சந்தம் மக்களின் உடல்களில் புல்லரிப்பையும் மயக்கத்தையும் ஏற்படுத்தி ஒருவித மோன நிலையை உண்டாக்கி தெய்வங்களின் நேரடியான தரிசனத்தையும் கடாட்சத்தையும் சாத்தியமாக்குகிறது.

அய்யனாரின் சார்பிலே சாமியாடிகள் குறைகேட்ட மக்களுக்கு நிவாரணத்தைச் சொல்லி விபூதி தந்து அருளாசி வழங்குகிறார்கள். தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைத்ததற்காக அய்யனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக மக்கள் கோழிகளையும் சேவல்களையும் கால்நடை களையும் சன்னதியில் விட்டுச் செல்கிறார்கள். அய்யனாரின் ஆயுதமான அரிவாளை பெரிய அளவில் செய்து வைக்கிறார்கள்.வேளார்களைக் கொண்டு மண்ணால் பறவைகள்,கால்நடைகளின் உருவங்களைச் செய்வித்து அவற்றை காணிக்கையாகப் படைக்கிறார்கள்.

இரவு நேரங்களில் அய்யனாரும் கருப்பசாமியும் வெள்ளைக் குதிரையிலேறி கிராமத்தை வலம் வந்து ஊர்க்காவல் புரிவதாக மக்கள் நம்புகிறார்கள். அமானுஷ்யமான அந்தக் குதிரையைக் கற்பனை செய்து அதற்கு பிரமாண்ட உருவம் கொடுத்து அதைச் சன்னதியின் முன்பாக நிறுத்தி அழகு பார்த்து ஆத்ம திருப்தி பெறுகிறார்கள். ஆண்டாண்டு காலமாக அந்தக் குதிரை அங்கே நிற்கிறது.மழையாலும் வெயிலாலும் காற்றாலும் பனியாலும் அது சிதிலமடையத் துவங்கும்போது புதிய குதிரை உருவாக்கப்படுகிறது.

ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பழமை கொண்ட சுடுமண் குதிரைகளைக் கூட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இப்போதும்  காணலாம். இந்தக் குதிரைகள் அவைகளைச் செய்தவர்களின் தொழில் நேர்த்தியை மட்டுமே பறைசாற்றிக்கொண்டிருக்கிறதே தவிர அந்த மனிதர்களின் அடையாளங்கள் எதையுமே தம்மிடம் கொண்டிருக்கவில்லை.

நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக மக்கள் தனிப்பட்ட முறையில் சிறிய அளவிலும் குதிரைகளைச் செய்து கொண்டுவந்து சன்னதியில் வைக்கிறார் கள்.' புரவி எடுப்பு ' [ என்ன அழகான தமிழ்ச் சொல் !]என்ற பெயரில் இது திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அய்யனாரின் சன்னதியில் பூசாரிகளாக இருக்கின்ற வேளார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்தக் குதிரைகளைச் செய்கிறார்கள். இதைச் செய்ய அவர்கள் வரைபடத்தையோ [ sketch ],அச்சையோ [ அச்சு -mould ] ,மாதிரியையோ [ model ] பயன்படுத்துவதில்லை  தமது சொந்தக் கற்பனைத் திறனை மட்டுமே கொண்டு வெறும் கைகளால் இந்தக் குதிரைகளை இவர்கள் உருவாக்குகிறார்கள். மண்ணும், களிமண்ணும், வைக்கோலும் ,நெல் உமியும் ,மூங்கில் பட்டைகளும் இவைகளின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.

வருந்தத்தக்க விஷயமாக சுடுமண் சிற்பங்கள் செய்வது இப்போது மிகவும் குறைந்து போய்விட்டது.அய்யனாருக்கும் கருப்பசாமிக்கும் குதிரைகள் செய்து வைப்பதாக மக்கள் செய்துகொள்ளும் வேண்டுதல்களே சுடுமண் சிற்பங்கள் செய்கின்ற வேளார்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. , இன்று தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மதுரை ,சேலம் மற்றும் சிதம்பரம் மாவட்டக் கிராமப் பகுதிகளில்  இந்த வேளார்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள்.

அடுத்த பயணத்தின்போது ஆஜானுபாகுவான இந்த தமிழ்க் குதிரை ஒன்றை வழியில் பார்க்க நேரிட்டால் அதை உருவாக்கிய முகம் தெரியாத அந்த மனிதனின் தெய்வீகத் திறமைக்கு ஒரு வாழ்த்துச் சொல்லுங்கள்.குதிரை மீது அமர்ந்திருக்கின்ற அய்யனாரின் கண்களை உற்றுப்பாருங்கள்.அவைகளில் பயமுறுத்தல் மட்டுமல்லாமல் தம் மக்களின் மீது அவர் கொண்டிருக்கின்ற பாசமும் படிந்திருப்பதைக் கவனியுங்கள்.அவருக்கும் ஒரு வணக்கம் சொல்லுங்கள்.ஏனெனில் தனது கிராமத்து மக்களுக்கு மட்டுமல்லாமல் வழிப்போக்கர்களுக்கும் அவர் வழித்துணையாக வருகிறார்.












வெள்ளி, 3 மே, 2013

ஒத்தைக்கு ஒத்தை வர்றியா...?







வெகுநாட்களுக்குப் பிறகு மணிமாறன் மாமாவை அண்மையில் சந்தித்தேன்.லேசான மப்பில் இருந்த அவர் தனது மனக்குமுறல்களை என்னிடம் கொட்டித் தீர்த்து விட்டார்.அதை நீங்களும் கேளுங்கள்.



' இப்பல்லாம் வாழ்க்கையே பெரிய போராட்டமாப் போயிருச்சிப்பா. ரேஷன் கடையில, கரண்ட்டு பில்லு கட்டற இடத்திலே , டிரெயின் டிக்கட் வாங்கப்போற இடத்தில இங்கதான முந்தில்லாம் கூட்டம் கியூ கட்டி நிக்கும்..? இப்ப டாஸ்மாக் கடையில போய்ப்பாரு.போனமா காசக் குடுத்தமா குவாட்டர வாங்குனமான்னு வரமுடியலப்பா....இடிச்சி மோதிக்கிட்டு நிக்கிறானுங்க...

முந்தில்லாம் என்ன பண்ணுவோம்..?கடைக்குப்போயி ஒரு எம்சி குடு, ஒரு ஓல்டு மங்கு குடு அப்பிடீன்னுதான கேப்போம்..?இப்ப அப்பிடிக் கேட்டுப் பாரு..கான்டாயிருவானுங்க.ஒரு எழுபத்தஞ்சி குடு, ஒரு எம்பத்தஞ்சி குடு அப்பிடீன்னுதான் கேக்கணும்.

ஒரு நாளக்கி ஒரு சரக்கு வருதுப்பா..இதெல்லாம் டாஸ்மாக்குக்கு சரக்கு கொள்முதல் பண்ணுற ஆபீசருங்க பண்ற வேலைன்னு பேசிக்கிறாங்க. கம்பெனிக்காரன்கிட்ட கமிஷன் வாங்கிக்கிட்டு அந்தந்தக் கம்பெனி சரக்க ஏத்திக்கிட்டு வந்துர்றாங்கன்னு சொல்றாங்க.அதுவும் உண்மையாத்தான் இருக்கும் போலருக்கு.

முந்தில்லாம் எப்படி இருந்திச்சு..? எம்சிக்கு ஒரு தனி ருசி.. ஜானெக்ஷாவுக்கு ஒரு தனி ருசின்னு இருந்திச்சு.அந்த ருசி பழகிப்போன மனுஷன் அதது பேரச்சொல்லித்தான் வாங்குவான்.இப்ப தெனத்துக்கு ஒண்ணா என்னென்ன கருமாந்திரத்தையெல்லாம் குடிக்க வேண்டியிருக்கு..? இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா..?அப்பல்லாம் ரெகுலரா ஒரு சரக்குக்கு பழகிப்போன வயிறு பிரச்சினை ஒண்ணும் பண்ணாம இருந்துச்சு.இப்ப தெனம் ஒரு எழவக் குடிக்கிறமா ..காலையில பாத்ரூம் போறதுல பிரச்னையா யிருக்கு.

அப்பல்லாம் தடுமன் புடிச்சா ஜானகஷாதாம்பா மருந்து.சுடுதண்ணி ஊத்திக் கலந்து அதுல கொஞ்சம் மிளகுத்தூளைப் போட்டு ஒரே மடக்குல குடிச்சுட்டோம்னா மறுநாள் காலைல தடுமன் எங்கே போச்சுன்னே தெரியாதுல .பேக்பைப்பர்,கோல்கொண்டா,ஓல்டு காஸ்க்கு,மெக்டோவல்னு அதுங்க பேரச்சொன்னாலே ஒரு தெம்பு வரும்.இப்ப பேர் சொல்ற மாதிரி எதாவது இருக்கா சொல்லு..?

சரி,அடுத்த விஷயத்துக்கு வா..

அப்பல்லாம் என்ன பண்ணுவோம்..?...ஒரு குவாட்டர்  வாங்குவோம் .ஒரு டம்ளர் வாங்குவோம் ..இரு..இரு ..இங்க இன்னொரு விஷயம் சொல்லிக்கிறேன்.ஆமா..,இந்த பிளாஸ்டிக் கப்ப எல்லாரும் கிளாஸ்,கிளாஸ்னு சொல்றாங்களே அது எப்பிடி..?கிளாஸ்னா என்ன..? கண்ணாடிதானே..? கண்ணாடிக் கிளாஸத்தானே கிளாஸ்னு சொல்லணும்.அதுனால நான் எப்பவும் டம்ளர்னுதான் சொல்றது...ம் ..ஒரு குவாட்டர் வாங்குவோம்,ஒரு டம்ளர் வாங்குவோம்,ஒரு வாட்டர் பாக்கட் வாங்குவோம்.அப்பிடி ஓரமா உக்காந்து குடிச்சுட்டுப் போவோம்.

இப்ப அப்பிடியா சொல்லு..? குவாட்டர வாங்கிகிட்டு எவனாவது தண்ணிப்பாக்கட்டுல மிச்சம் ஏதாவது வச்சிட்டுப் போயிருக்கானான்னு பாக்க வேண்டியிருக்கு..வேற என்ன பண்றது..? 35 காசு தண்ணிப் பாக்கட்டயும் டம்ளரையும்  பார்க்காரன் அஞ்சு  ரூபாய்க்குல்ல விக்கிறான்.பார்க்காரன்கிட்ட கொஞ்சம் பழகிப்பார்த்திங்கன்னாத் தெரியும்..,ஊர்ல அவன் பத்து லட்சத்துல புது வீடு கட்டிக்கிட்டிருக்கற விஷயம்..

அப்பல்லாம் வேலை முடிஞ்சி 10 மணிக்கு மேலதான் டாஸ்மாக்குக்குப் போகமுடியும். இருந்து மெதுவா குடிச்சிட்டு வருவோம்.இப்ப அது முடியுதா..?

மருத்துவர் ஒருத்தர் சொன்னாருன்னு இந்த மஞ்சத்துண்டுப் பெரியவர் பத்து மணிக்கு கடையை மூட வச்சாரு.அதனால பத்து மணிக்கு மேல யாரும் குடிக்காம விட்டுட்டாங்களா..? பார்க்காரனும் கடை சேல்ஸ்மேனும் கள்ளக் கூட்டணி போட்டுக்கிட்டு குவாட்டர் 120 ரூபாய்க்கு விக்கிறானுங்க. அதையும் வாங்கிக் குடிச்சுக்கிட்டுத்தானே இருக்கோம்..? குடிக்கிறதுல குறைவு இல்ல..எதுக்கு தேவையில்லாத செலவும் டென்ஷனும்னு கேக்கறேன்...இரு.. இந்த இடத்தில இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறேன் கேளு..

கேரளாவுக்குப் போயிருக்கியா நீ..? அங்க ஒம்போது மணிக்கு கடை மூடிருவாங்க.ஆனா ஒம்போது மணிக்கு வந்தவங்கள கடைக்கு உள்ள கூப்பிட்டுக்கிட்டு வெளிய மூடிருவாங்க.எல்லோருக்கும் சரக்கைக் கொடுத்து அனுப்பிவிட்டு பூட்டிருவாங்க.பிளாக்குல எல்லாம் விக்குறதில்ல .அது சட்டம். அடுத்த மேட்டருக்கு வருவோம்.

அப்பல்லாம் அறுபது ரூபா இருந்தாப் போதும்.ஒரு குவாட்டரு அடிக்கலாம்.சுருக்குன்னு இருக்கும்.இப்ப ஒரு நாளைக்கு ஒரு விலையால்ல  இருக்கு.கம்பெனிக்காரன் ஒரு விலை போட்டிருக் கான்,கடைக்காரன் ஒரு விலை சொல்றான்.சரக்கும் வடிவேலு சொன்னமாதிரி சப்புன்னு இருக்கு. பத்தாததுக்கு பார்க்காரன் கொள்ளை வேற. குறைஞ்சது நூறு ரூபா வேணும்பா. கையில காசு இருந்தா உத்தமம். இல்லேன்னா ஒண்டிக்கு ஒண்டிதான்.

ஒண்டிக்கு ஒண்டின்னதும் ஏதோ சண்டைக்குக் கிளம்பிடுவேன்னு நினைச்சி ராத..அது எங்க குடிமக்களுக்குள்ள ஒரு கோட்வேர்டு .அதாவது ஊர்ல ஏதாவது சண்டை வந்துட்டா 'ஒத்தைக்கு ஒத்தை போட்டுப் பார்ப்போமா..?' ன்னு சவால் விடுறது வழக்கம் தெரியுமில்ல..? இந்த 'ஒத்தைக்கு ஒத்தை', ' ஒண்டிக்கு ஒண்டி ' இதுக்கெல்லாம் அர்த்தம் என்னன்னு தெரியுமா..? 'நீ ஒருத்தன், நான் ஒருத்தன் .ஒருத்தனுக்கு ஒருத்தன் .மோதிப்பார்க்கலாமா? ' ங்கறதுதான் . அதுமாதிரி 'நீ ஒருத்தன்.உன்கிட்ட பாதிப்பணம். நான் ஒருத்தன்.என்கிட்டே பாதிப்பணம்.ரெண்டையும் சேர்த்து ஒரு குவாட்டர் வாங்கி  ஆளுக்கு ஒரு கட்டிங் அடிக்கலாமா..?' அப்படீன்னு ஜாடையாக் கேட்டுக்கிறதுதான் இந்த ஒண்டிக்கு ஒண்டி, ஒத்தைக்கு ஒத்தை இதெல்லாம்.

..' குடியாதவன் வீடு விடியாது ' ன்னு பழமொழி எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கியா..? இது பழமொழியில்ல..எங்க மக்களுக்குள்ள புழங்கற ஒரு புது மொழி.

இடையிலே ஒரு நாலு மாசத்துக்கு முன்னாலே டாஸ்மாக்கையே அம்மா மூடப்போறதா ஒரு புரளி கிளம்பிச்சு தெரியுமா..? நாங்கல்லாம் அப்படியே திகிலடிச்சுப் போயிட்டோம்.என்ன பண்ணப்போறோமுன்னே தெரியாம அரண்டு போயிட்டோம்.நல்ல வேலை, அம்மா அப்படியெல்லாம் செஞ்சிடலை.ஒரு வேலை அப்படிச் செஞ்சிருந்தாங்க ன்னு வையி...அடுத்த எலக்சன்ல நாங்க அவுங்களுக்கு ஓட்டுப்போட மாட்டோம். குடிக்காதீங்கன்னு புத்திமதி சொல்லி அவுங்க ஆளுங்க கிட்டேயே டாக்டர் வாங்கிக் கட்டிக்கிட்டது அவங்களுக்குத் தெரியாமயா இருக்கும்..?

குடிக்கிறதுக்கு இப்படிலாம் நாங்க படுற பாடு இருக்கே ..அப்பப்பா... போராட்டமாவே போச்சுப்பா.இந்த அம்மா எங்க மேல இரக்கப்பட்டு சரக்கு வெலையையும் பார்க்காரன் கொள்ளையையும் கொஞ்சம் கொறைச் சாங்கன்னா புண்ணியமாப்போவும்ப்பா...நாங்களும்தானே
ஓட்டுப்போட்டிருக்கோம் '.