வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மலேசியத் தமிழ் மக்கள்






                 கன்யாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் நம்மவர்கள் 



மலேசியா நாட்டுக்கு நான் பல முறை சென்று வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மாதக்கணக்கில் அங்கே தங்கியும் இருக்கிறேன்.

தமிழ் நாட்டிலிருந்து மலேசியா சென்று வருகின்ற பெரும்பாலான வர்களைப் போல கோலாலம்பூரோடு திரும்பி விடாமல் பினாங்கு,, அலொச்டார் , ஈப்போ , க்ரோ என்று மலேசியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன் .

பினாங்கு வாட்டர் பாலைச் சேர்ந்த  ராஜாவோடு தாய்லாந்தின் 'ஹட்ஜாய்' க்கும் பட்டர்வொர்த் விஜய்  மற்றும் சுப்பிரமணியம் குடும்பத்தினரோடு  ஜெந்திங் ஹைலேண்ட்ஸ் பக்கத்தில் காட்டுக்குள்  அமைந்திருக்கின்ற ஒருமுனீஸ்வரர் கோவிலுக்கும் கூடப் போயிருக்கிறேன்.

கோலாலம்பூரிலிருந்து ' ஏர்கோன் ' பஸ் ஏறி விடிகாலை 2 மணிக்கு 'குவாந்தான்' நகரில் இறங்கி விட்டு திக்குத் திசை தெரியாமல் திண்டாடியிருக்கிறேன்.

மலேசியாவின் வடக்கு எல்லைச் சிற்றூரான 'க்ரோ' வழியாக தன்னந் தனியாக தாய்லாந்துக்குள் சென்று வந்திருக்கிறேன்.

அது மட்டுமல்லாமல் பினாங்கு நண்பர் 'அயத்தாம் '-[Air itham]  ராஜேந்திரனோடு மலேசியத் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தபோது அவர்களோடு சுற்றுலா முழுவதும் நானும் உடனிருந்திருக்கிறேன்.

இந்தச் சுயப் பிரதாபங்கள் எல்லாம் எதற்கு என்பதை இதோ சொல்லி விடுகிறேன்.இப்படி மலேசியாவின் உள் பகுதி வரையிலும் பல முறை  பயணம் செய்திருப்பதால் எனக்கு மலேசிய நாட்டைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும்  ஓரளவு தெரியும் என்பதையும் அதனால் அவர்களைப் பற்றி இங்கே எழுத எனக்கு அருகதை உள்ளது என்பதையும் முதலிலேயே தெரியப்படுத்திக் கொள்வதற்காகவே இந்தச் சுற்று வளைப்புகள்.

மலேசியத் தமிழ் மக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள்.அவர்களுடைய மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்றை முதலில் சொல்லிவிட வேண்டும்.அது அவர்கள் பேசுகின்ற தமிழ்.மிகச் சுத்தமான  தமிழில் அவர்கள் பேசுகிறார்கள். அவர்களுடைய தமிழ்ப் பேச்சு  நம்மை வியக்க வைக்கிறது.

காலை நேரத்தில் நாம்  பிரேக் பாஸ்ட்டுக்குத் தயாராகும் போது அவர்கள் ' பசியாறி விடலாமா ? ' என்று கேட்கிறார்கள்.' வீட்டுக்குள் நுழைந்து விட்டோம் 'என்று சொல்லாமல் ' வீட்டுக்குள் புகுந்து விட்டோம் ' -பூந்துட்டோம் -என்று சொல்கிறார்கள்.

'பேக் , சூட்கேஸ் ' என்கிற பேச்சே இல்லை .' பை,' 'பெட்டி ' தான்.  செருப்பு-சப்பாத்து . பேன்ட் -சிலுவார் . டாய்லட் -பீலி.

கொடைக்கானலில் ஸ்வெட்டர் அணிந்தபோது மலேசியத் தமிழ்ப் பெண்மணி ஒருவர் சொன்னார்.' நீட்டக்கைச் சட்டை போட்டுட்டீங்க..? '

மிகப் படித்த புதிய தலைமுறை இளைஞ்ர்களும் கூட தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலப்பு இல்லாமலேயே பேசுகிறார்கள்.சுற்றி வளைத்து நிற்கின்ற மலாய் மற்றும் சீன மொழிகளின் ஊடுருவ லிலிருந்து தம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காக யாரோ ஒரு மொழிப் பற்றாளர் தோற்றுவித்து வைத்த  இந்தப் பழக்கத்தை நம் மக்கள் இன்று வரை விடாது  கைக்கொண்டு வருவது உண்மையில் மிகச் சிறப்பு.

ஆனால் இந்தப் பாராட்டுத் தோரணங்களுக்கு இடையிலே கிழிந்து தொங்குகின்ற ஒரு வண்ணப் பதாகையை நம்மால் மறைக்க இயலாது. பெரும்பாலான மலேசியத் தமிழ் மக்களுக்கு தமிழை எழுதப் படிக்கத் தெரியாது.அரசாங்கத்தின் கல்விக் கொள்கைகளுக்காக நம்மவர்களை நாம் குறை சொல்ல முடியாது.தமிழ் படிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.

முகநூலில் [ Facebook ] இருக்கின்ற எமது மலேசியத் தமிழ் நண்பர்கள் ' மலாய் ' மொழியில் இடுகின்ற பதிவுகளும் பின்னூட்டங்களும் எமக்குப் புரிவதில்லை.

பேச்சு மொழியைக் காப்பாற்றி விட்டார்கள்.ஆனால் ஆடைக் கலாசாரத்தைக் கைதவற  விட்டு விட்டார்கள்.பெண்களின் குட்டைப் பாவாடைகளும் கையில்லாத மேல்சட்டைகளும் கருத்த முகத்தில் சிவப்பு உதட்டுச் சாயமும் ஆண்களின் பொம்மைச் சட்டைகளும் தாயகத்  தமிழரிடமிருந்து அவர்களை வெகு தூரத்துக்குப் பிரித்து எடுத்துச் செல்கின்றன.

தற்போது பெண்கள் சுரிதார் அணிய ஆரம்பித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. எழுபது வயது மூதாட்டிகள் கூட முடிச் சாயத்தின் ஆதரவோடு இளமையாக இருக்கிறார்கள்.

தைப்பூசம் போன்று எப்போதாவது பண்டிகைக் காலங்களில் அவர்கள் வேட்டி,சேலை அணிகிறார்கள்.ஆனால் அவைகளின் வண்ணமும் வடிவமைப்பும் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.

 நாம் இங்கே தாயகத்தில் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்ற ' ஹவுஸ் வைப் ' என்கிற ஒரு பதவி மலேசியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு  அவசியமும் இல்லை. ஏனென்றால் அங்கே  யாருமே வீட்டில் இருப்பதில்லை.எல்லோரும் எதாவது ஒரு வேலைக்குப் போகிறார்கள்.

நீங்கள் மலேசியாவுக்குப் போனால் எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும்  கூட அவர்கள்  உங்களை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குப் போய்விடுவார்கள்.குளிர்ப் பெட்டியில் இருப்பதை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு தொலைக் காட்சி பார்த்துக்கொண்டு பொழுதைக்  கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அவர்களை ரொம்பவும் பயப்படுத்துகின்ற ஒரு பிராணி நம் ஊர் சமையலறைகளில் செல்லப்பிராணிகளைப் போலத் திரிகின்ற கரப்பான் பூச்சிகள்.கரப்பான் பூச்சிகளைப் பார்த்தால் அவர்கள் சிங்கத்தைப் பார்த்தவர்கள் போல அலறுகிறார்கள்.ஈயும் கூட அவர்களுக்கு எரிச்சல் மூட்டுகிறது.

அதிகாலையிலேயே ' பசியாறி' விடுகிறார்கள்.அது எல்லோருமே வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால் வந்த பழக்கமாக இருக்கலாம்.

தண்ணீரோ பியரோ மிகக் குளிர்ந்த நிலையில் இருந்தால்தான் அவர்களுக்குப் பிடிக்கிறது.பெரிய கண்ணாடிக் குவளைகளில் கிட்டத்தட்ட கால் கிலோ ஐஸ் போட்டு 'சார்ஸி ' [ பெப்சி போன்ற ஒரு கோலா பானம் ] அருந்துகிறார்கள். இதன் விளைவாக விரைவாகவே அவர்களுக்கு பற்கள் விழுந்து போவதைக் கவனித்திருக்கிறேன்.

காலை நேரத்தில் அரை லிட்டர் அளவுக்கு 'தே ' [ தேநீர் ] குடிக்கிறார்கள்.[ சீனர்களுக்கு 'டி ' உச்சரிப்பு வராது.அதனால் அவர்கள் டீயை 'தே ' என்று சொல்ல நம்மவர்களும் அப்படியே சொல்கிறார்கள்.] இங்கே வரும் போது நம்ம ஊர் உணவகங் களில் அவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு தேநீர்கள் ஆர்டர் செய்வதைக் கண்டு பணியாளர்கள் திகைத்து நின்றதை பலமுறை  ரசித்திருக்கிறேன்.

மலேசியத் தமிழ் மக்களுக்கு ' டிப்ஸ் ' கொடுக்கும் பழக்கம் இல்லை. அதனால் இங்கே அவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவகப் பணியாளர்களிடம் முதுகுக்குப் பின்னால் திட்டு வாங்குவது அவர்களுக்குத் தெரியாது.இந்தத் தர்ம சங்கடத்தைத் தவிர்க்க முதலிலேயே பணியாளர்களிடம் விஷயத்தைச் சொல்லி நானே அவர்களைக் கவனிக்க வேண்டியதாயிருந்தது.

சொல்லச் சங்கடமாகத்தான் இருக்கிறது.ஆனாலும் சொல்லிவிட உந்துதல் உண்டாகின்றது.நம்மவர்களுக்கு ரசனை கொஞ்சம் குறைவுதான். உலகமே ரசிக்கின்ற கேரள ஆலப்புழா [Allepey Backwaters ] நீரிணையில் மூன்று மணி நேர 'ஷிகாரி ' படகுப் பயணத்தின் போது  அவர்கள் தூங்கிக் கழித்ததுதான் அதிக நேரமாயிருந்தது. இங்கே , அங்கே , எங்கேயும் நம்மவர்களுக்கு சினிமாதான் பிரதானம்.

மலேசியப் பெரும்பான்மைத்  தமிழ் இளைஞர்களிடம் வாழ்க்கை பற்றிய லட்சிய உணர்வு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.மிக அலட்சியமாக அவர்கள் இருக்கிறார்கள்.அடுத்த தலைமுறையிலாவது கல்வித் திறன் பெற்ற ,ஆக்கபூர்வ சிந்தனை கொண்ட ஒரு இளைஞர் சமுதாயம்  உருவாகட்டும்.

குறை சொல்வது இங்கே நோக்கமில்லை.குறைப்பட்டியல் அடுக்குவது போலத் தோற்றம் எதுவும் ஏற்பட்டிருந்தால் அதற்கு எமது ஆதங்கத்தின் வெளிப்பாடையே காரணமாக  எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

எல்லாக் குறைகளையும் தாண்டி மிக நிறைவாக இருக்கின்ற ஒரு விஷயத்தை இங்கே முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்துக் கொள்வோம். மலேசியத் தமிழ் மக்களிடையே சாதி இன பேதமில்லை.ஆமாம்,அது இல்லவேயில்லை.

அது மட்டுமல்லாமல் தாயகத்தை விடவும் அங்கே தேசிய ஒருமைப்பாடு  அதிகச் சிறப்பாக நிலவுகிறது.மலையாளிகள் , தெலுங்கர்கள் , சீக்கியர்கள் என எல்லோரும் இந்தியர்கள் என்ற ஒரு இனத்தின் உருவமாக வாழ்கிறார்கள்.

இன்னும் சிறப்பாக , நாம் வியக்கின்ற விதமாக குர்பிரீத் கவுரும் ராஜ்பால் சிங்கும் கோபால் ராவும் நல்ல தமிழ் பேசி பொங்கலும் தைப்பூசமும் கொண்டாடி தமிழர்களாகவே அங்கே  அடையாளம் காணப்படுகிறார்கள்.

சிறுபான்மையினராக வாழ்கின்ற ஒரு சமுதாயத்தில் நாம் நமது வாழ்க்கை முறையை வெகு கவனமாகவும் மிகுந்த உத்வேகத்துடனும் அமைத்துக் கொள்வது அவசியமாகிறது.அறிவுத் திறனையும் உழைப்பையுமே ஆயுதமாக எடுத்துக் கொண்டு நமக்கான சமுதாயத்தை நாம் கட்டி எழுப்பிக் கொள்ள வேண்டும்,  அப்படியில்லையெனில் நாம் சற்று அயர்ந்த நேரத்தில் அது தேன்கூடு போல கலைக்கப்பட்டு விடுமென்பதையும் நாம் நம் அனுபவத்தில் கண்டுவிட்டோம்.

இந்தக் கவலை மற்றும் அக்கறையின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. எத்தனை மலேசியத் தமிழ் மக்கள் இந்த இடுகையை வாசிப்பார்கள்  என்பது எமக்குத் தெரியாது. யாரேனும் வாசித்தால் அவர்கள் மூலமாக நம்மவர்களுக்கு  எமது  வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.









வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சென்னை அரசு அருங்காட்சியகம் -படங்கள்



சென்னை அரசு அருங்காட்சியகத்தைப் பற்றிய ஒரு ஆவணப் பட உருவாக்கத்தின்போது அருங்காட்சியகத்துக்குள் விரும்பியவாறு புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள சிறப்பு அனுமதி கிடைத்தது.

எல்லோருக்கும் கிடைக்காத இந்த வாயப்பின்படி யாம் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை எல்லோரும் காணும்படி இங்கே வெளியிட விரும்புகிறேன்.

























 













வியாழன், 12 செப்டம்பர், 2013

ஓவியப் பயிற்சி ...யாருக்கு,,?






ஓவியம்  வரையும் பழக்கம் கைவிட்டுப் போய் வெகு காலமாகி விட்டது.இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுச்சிறுமிகள் இருவர் வந்து பள்ளியில் புறத் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக படம் வரைந்து தரச் சொல்லி அன்புத் தொல்லை தந்தனர்.சரியென்று மற்ற வேலைகளைக் கொஞ்சம் புறந்தள்ளி வரைந்து கொடுத்தேன்.

சிறுமிகளுக்கு இது பயிற்சியாக இருந்ததோ என்னவோ எனக்கு மிக நல்ல பயிற்சியாக இருந்தது.

அந்தப் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு....படம் எப்படி இருக்கிறது ?













ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

முயல் வேட்டை -ஒரு பழங்கதை








                                                              கையில் முயல்


[ இப்படங்கள்  அண்மையில் நடந்த ஒரு சிறு வேட்டையின்போது எடுக்கப்பட்டது.]


பண்டைத் தமிழரின் வாழ்க்கைமுறை பரபரப்பானதாக பல்சுவைகளும் நிரம்பியதாக இருந்தது,ஆதித் தமிழரின் வரலாற்றினை ஆழ்ந்து கவனிக்கும் போது அவர்கள் கிடைத்தற்கரிய பேறான இந்த மனிதப் பிறவியின் மகத்துவத்தையும் உலக வாழ்வின் மாண்பையும் மிக நன்றாக உணர்ந்திருந்ததை புரிந்துகொள்ள முடிகிறது.

அதனால் அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக்கி அனுபவித்து வாழ்ந்தார்கள்.இயலும் இசையும் நாடகமும் அவர்களின் வாழ்வோடு இணைந்து பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்து கிடந்தன,

நாற்று நடவு , வயலுக்கு நீர் இறைத்தல் , குழந்தைக்குத் தாலாட்டு , மரித்தோருக்கு ஒப்பாரி என்று வாழ்க்கைப் போராட்டத்தையே அவர்கள் இசை மயமாக்கி இனிதே வாழ்ந்தார்கள்.

கலைகளுக்கு இணையாக அவர்கள் வாழ்வில் விளையாட்டும் முக்கியத் துவம் பெற்றிருந்தது.உடல்நலம் பேணும் வகையிலும் அறிவைத் தூண்டும் வகையிலும் சிந்தனையைச் சீர்படுத்தும்  வகையிலும் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த விளையாட்டுகள் ஏராளம். அவைகளெல்லாம் இன்று வழக்கொழிந்து போய்விட்டன என்பதை இங்கே மிக்க வருத்தத்தோடு சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

எனினும் எமது வாழ்க்கைக் காலத்தில் அவைகளில் எஞ்சியிருந்த சிலவற்றைக் காணவும் கலந்து கொள்ளவும்  நேர்ந்த வாய்ப்பினை எம் காலம் வரைக்கும் எம்மால் பெருமிதத்தோடு நினைவு கூற இயலும்.

இந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன் இந்த விளையாட்டுகளில் ஒன்றான ' வேட்டை ' யில் யான்  பெற்ற நேரடி அனுபவத்தைக் கொண்டு  அதைப்பற்றி இங்கே பதிவிட விழைகிறேன்.

முன்பே குறிக்கப்பட்டிருந்த ஒரு  நாளில் கிராமத்து ஆண்கள் குழுவாகத் திரண்டு தங்களின் நாய்களையும் அழைத்துக் கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடப் போவதைத்தான் 'வேட்டைக்குப் போவது ' என்று சொல்வார்கள்.விலங்குகள் என்று இங்கே சொல்லப்படுவது தற்காலத்தில் 'முயல்'களேயன்றி வேறொன்றுமில்லை.

அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். விடுமுறையில் வீட்டிலிருந்த ஒரு சமயத்தில் ஊர்க்காரர்கள் ' வேட்டை, வேட்டை' என்று எப்போதும் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்ததைக்கேட்டு  அந்த ஆர்வம் கிளர்ந்தெழுந்தது.

 பண்ணை வேலைகளைக் கவனித்துக் கொள்வதற்காக 'சக்திவேல்' என்ற எங்களின் ' மச்சான் ' ஒருவர்  எங்கள் வீட்டில் இருந்தார்.;[ இவரைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்ததை ' மணிமாறன் மாமா கதை சொன்னார் ' பக்கங்களைப் படிக்க நேர்ந்திருந்தால் கவனித்திருக்கலாம்.]

இவர் 'மோட்டார்' என்று ஒரு நாய் வளர்த்தார்.அந்தக் காலத்தில் 'காரை' மோட்டார் என்றுதான் அழைத்தார்கள். அந்த மோட்டார் போல இந்த நாய் வேகமாக ஓடியதால் நாய்க்கு மோட்டார் என்று பெயர். இந்த மோட்டாருக்கு சிறப்புச் சாப்பாடு கொடுத்து ஆழமான குளத்தில் நீந்த வைத்து மச்சான் விசேசப் பயிற்சிகள் கொடுத்ததைப் பார்த்து வேட்டையில் நானும் கலந்து கொள்ள அவரிடம் அனுமதி கேட்டேன்.

' காட்டுக்குள்ள முள்ளுல நடப்பியா ..? ' என்று கேட்டு விட்டு கூட்டிப் போவதாக ஒத்துக் கொண்டார்.

அந்த நாளும் வந்தது.

அன்று ஒரு ஊர் இல்லை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆறு கிராமத்து வேட்டைக் காரர்கள் கூடினார்கள்.அந்தக் கூட்டம் காட்டுக்குள் புகுந்து கிராமங்களைத் தாண்டிச் சென்றபோது மேலும் மேலும் ஆட்கள் சேர்ந்து இறுதியாகச் சுமார் முன்னூறு பேர்களும் நூறு நாய்களுமாகத்  திரண்டது.

இங்கே காடு என்று சொல்லப்படுவது மழைக் காடுகளோ அல்லது மலைக் காடுகளோ அல்ல.சில மரங்களும் குட்டைப் புதர்களுமானவைதான் அவை. அந்த நாய்கள் தாம் எங்கே போகிறோம் என்பதை உணர்ந்து கொண்டு  இயல்புக்கு மாறாக அன்று  மிக ஆக்ரோஷமாக இருந்தன.

வேட்டைக்காரர்கள் 'வேட்டைகம்பு ' என்ற இரும்புப் பூண்கள் போட்ட கைத்தடிகளையும்  'குத்துக்கம்பு' என்று சொல்லப்பட்ட ஈட்டி செருகிய நீண்ட கழிகளையும் ஆயுதமாக வைத்திருந்தார்கள்.

ராணுவப் படையினர் ' Combing operation ' செய்வதைப் போல நீண்ட வரிசையில் சென்ற அவர்கள் குத்து கம்பால் புதர்களைக் கலைத்தார்கள்.பதுங்கியிருந்த முயல்கள் பயந்து வெளியே பாய , வேட்டைக்காரர்கள் கூச்சலிட்டபடி பிடித்திருந்த நாய்களை அவைகளை நோக்கி ஏவி விட , முரட்டுப் பாய்ச்சலில் விரட்டிச் சென்ற நாய்கள் முயல்களை நெருங்கி காலால் தட்டி விடுகின்றன. தடுமாறி உருளுகின்ற முயல்களைக் கவ்விப் பிடித்துக் கொண்டு எஜமானர் ஓடிவந்து எடுத்துக் கொள்ளும்வரையில் காத்திருக்கின்றன.

அங்கேயோ அல்லது வேட்டை முடிந்ததுமோ நாய்களுக்கு முயலின் குடலும் கழிவு மாமிசமும் சாப்பிடக் கிடைக்கின்றன.

நாய்கள் ஒரு முயலைத் துரத்திச் சென்றால் நாய்களைக்  கம்பு தாக்கிவிடலாம் என்பதற்காக வேட்டைக்காரர்கள் வேட்டைக்கம்புகளை வீசுவதில்லை. இப்படி ஒரு முறை நடந்து இரண்டு ஊர்களுக்கிடையே பெரிய கலவரம் நடந்ததாகச் சொன்னார்கள்.

அப்படியில்லாமல் கூட்டத்தைக் கண்டு மிரண்டு எங்கிருந்தோ ஓடிவருகின்ற முயல் ஒன்று கண்ணில் பட்டால் அதை நோக்கிக் குறிபார்த்து  வேட்டைக் கம்புகளை வீசுகிறார்கள். முயல்கள் சுருண்டு விழுகின்றன. 

பெரும்பாலும் அனுபவம் மிக்க சிறப்புத் திறமை கொண்டவர்களே இந்தக் கம்புகளை வீசுகிறார்கள்.நமது சக்திவேலும் அதில் ஒருவர்.அதனால் அவருக்கு மற்றவர்களை விட அதிகமாகவே வேட்டை கிடைத்தது.

முயல்கள் மட்டுமல்லாமல் நரிகளும் பாம்புகளும் புதர்களுக்குள்ளிருந்து 
புறப்பட்டுப் பாய்கின்றன.ஆனால் அவைகளை யாரும் கண்டுகொள் வதில்லை.

வழியிலிருந்த சிற்றோடைகளிலும் குளங்களிலும் வேட்டைக்காரர்கள் தண்ணீர் குடித்தார்கள்.மாலை ஐந்து மணி போல வேட்டை நிறுத்தப் பட்டது.ஏதேனும் ஒரு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டது.சிலர் எங்கோ சென்று சமையல் பாத்திரங்கள் இரவல் வாங்கி வந்தார்கள்.சிலர் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று அரிசி ,சமையல் பொருட்கள் வாங்கி வந்தார்கள்.

 பனை ஓலையில் செய்யப்பட ' பட்டை ' எனச் சொல்லப் படுகிற  ஒருமுறை பயன்படுத்துகிற use & through சாப்பாட்டுப் பாத்திரங்கள் தயாராக முயல் கறியோடு சாப்பாடு நடந்தது. அடுத்த வேட்டைக்கான நாளும் அங்கேயே முடிவு செய்துகொள்ளப் பட்டது.எல்லோரும் அங்கேயே தூங்கி எழுந்து மறுநாளும் வேட்டை தொடருமாம்.

ஆனால் என்னால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனால் எனக்காக சக்திவேல் மச்சானும் ஊருக்குக் கிளம்பினார்.அவர் புறப்பட்டதும் எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருமே கிளம்பிவிட்டார்கள்.

ஊரை நெருங்கியதும் வேட்டை முயல்கள் எல்லாவற்றையும் இறைச்சியாக்கி கூடக் குறைய என்ற வேறுபாடு எதுவுமில்லாமல் எல்லோரும் சரிசமமாகப் பிரித்துக் கொண்டார்கள்.அன்று இரவு மச்சான் எங்கிருந்தோ ரகசியமாகச் சாராயம் வாங்கிவந்து குடித்துவிட்டு முயல் கறி சாப்பிட்டார்.

இப்போது இதெல்லாம் பழங்கதையாகி விட்டது.அரசாங்கம் வேட்டைக்குத் தடை போட்டுவிட்டது. தடையை நீக்கினாலும் கூட எங்கள் கிராமத்து ஆண்களுக்கு வேட்டைக்குப் போக விருப்பம் இல்லாத அளவுக்கு அவர்களின் சிந்தனையையும் நேரத்தையும் அரசாங்கத்தின் டாஸ்மாக் கடைகள் ஆக்ரமித்துக் கொண்டுவிட்டன.

காட்டில் முயல்கள் மட்டுமில்லாமல் இப்போது நமது தேசியப் பறவையான மயில்களும் பல்கிப் பெருகி விட்டன.