திங்கள், 15 ஜூலை, 2013

மரமே தெய்வம்



மரமே தெய்வம்







எங்கள் சிற்றூரில் நடந்த உண்மை நிகழ்வு இது.தெருமுக்கு ஒன்றில் மாரியம்மனுக்கு சிறு கோவில் அமைப்பதாக ஊர்க்காரர்கள் முடிவு செய்து வேலையைத் தொடங்கினார்கள்.கட்டிடம் அமைக்கப் பட்டது.அம்மன் சிலையை நிறுவுவதற்கு நல்லநாள் ஒன்றுக்காக ஊரார் காத்திருந்த வேளையில் சரியாக சிலை வைப்பதாக இருந்த இடத்தில் மரக்கன்று ஒன்று முளைத்து வளர்ந்தது.எந்தவொரு நீர் ஆதாரமும் இல்லாமல் வளர்ந்த அது சில நாட்களில் செடியாகி நின்றது.

நாம் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது கண்ணில் பட்ட இந்தக்காட்சி எம் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது.இதில் மிகவும் வியக்கச் செய்த விஷயம் என்னவெனில் சாமி இருக்க வேண்டிய இடத்தில் முளைத்து நின்ற அந்தச் செடியை யாரும் பிடுங்கி எறியவில்லை. மாறாக செடி அப்படியே இருக்க மக்கள் காலை நேரத்தில் வாசலில் கோலமிட்டார் கள்.மாலை நேரத்தில் விளக்கேற்றினார்கள்.வணங்கினார்கள்.வயலில் விளைந்த முதல் நெற்கதிரைக் காணிக்கையாக்கினார்கள்.

இந்தச் செயல்கள் எம் நெஞ்சை நெகிழச் செய்தன.மனதுக்குள் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்தன.

ஆதித் தமிழ்மக்கள் காலம் தவறாது நீர் பொழிந்து தம்மை வாழ வைக்கின்ற மாரிக்கு [ மாரி  - மழை ] நன்றி செலுத்தும் விதமாக அதைத் தெய்வமாக்கி அதற்கு ஒரு உருவம் தந்து மாரியம்மன் எனப் பெயரும் சூட்டி கோவில் கட்டிப் பொங்கலிட்டு பூசை செய்து முளைப்பாரி எடுத்து முளைக்கொட்டு செய்து விழா எடுத்தார்கள்.மிக உன்னதமான இயற்கை வழிபாடான இந்தச் செயல்கள் இன்றும் தொடர்கின்றன.

மழைக்கு ஆதாரம் மரம்.மரத்துக்கு மூலம் மழை.இந்த உயிர்ச்சங்கிலித் தொடர்பினை உணர்ந்திருந்தனால்தான் நம் முன்னோர்கள் மரத்துக்கும் ஆடை அணிவித்து அலங்காரம் செய்து அதையும் தெய்வமாக்கியிருந்தார்கள் .

இப்போது இங்கே எமது கிராமத்தில் அறிந்தோ அறியாமலோ நிகழ்ந்த எம் மக்களின் செயல்களைக் கண்டபோது ஆதியில் எம் மூதாதையர் கொண்டிருந்த மரபணுக் குணங்களில் இப்போது பெரிதான மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை என்பதற்கான அடையாளமாகத்தான் தெரிந்தன.உண்மையில் மனம் பெருமிதத்தில் மிதந்தது.

உணவுக்காகவே உழைக்கிறோம்.உழைத்து ஈட்டிய பணத்தைக் கடையில் கொடுத்தால் உணவு தருவர். உயிர்க்காற்று யார் தருவார்..?

ஒரு கன்று நட்டு நீரூற்றி பேணிப் பாதுகாத்து அதை உயிர்க்காற்று தருகின்ற ஒரு மரமாக மாற்றுவதைக் காட்டிலுமான உயர்ந்த வழிபாடு வேறொன்றுமில்லை.

நம்மை வாழவைக்கும் மகாசக்திகள் மாரியும் மரமுமே.மாரியின்றி மரமில்லை.மரமின்றி மாரியில்லை.

மரங்களே தெய்வம்.மரம் வளர்ப்போம்.நம் மண் [பூமி ] ணைக் காப்போம்.