புதன், 27 பிப்ரவரி, 2013

படியளந்தார் பண்டைத் தமிழர்











மது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன்  படியளக் கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை 'உனக்கென்னப்பா ..முதலாளி படியளக்கிறாரு ......' என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ நீ படியளக்கிற மாதிரியில்ல பேசுறே..' என்று வரிந்து கட்டுவதுண்டு.


படியளப்பது என்பது என்னவென்று நமது இந்த நவீன கால இளம் வயதுத் தோழர்களுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. 'சமைக்கவே வேண்டாம்.அப்படியே சாப்பிடுவேன் 'என்பது போன்ற 'பாஸ்ட் புட்' கலாசாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவர்களுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. கிராம் மற்றும் கிலோ கணக்குகளில் உழன்று கொண்டிருக்கின்ற இந்தக் கால இல்லத்தரசிகளுக்குக் கூட இது மறந்துபோய்க் கொண்டிருக்கின்ற விஷயமாக இருக்கக் கூடும்.அதனால் இந்த ' படியளப்பது' குறித்த சில விஷயங்களை இங்கே பதிவு செய்து வைப்பது அவசியமாகிறது.

நெல், பயறு போன்ற தானியங்களை அளப்பதற்கு பண்டைய தமிழ் மக்கள் ஏறத்தாழ 20 வகையான அளவீடுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அணு , சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு ,படி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை என்பவை அவைகளில் முக்கியமானவைகளாக இருந்தன.


'படி' என்ற உருளை வடிவிலான அளவுக் கருவியில் நெல்லை நிரப்பினால் அதில் 14,400 நெல்மணிகள் இருந்தன.அரிசியானால் 38000 மணிகளும் பயறு ஆனால் 14,800 மும் மிளகு ஆனால் 12,800 மும் இருந்தன. இது ஒரு படி என்று அளக்கப்பட்டது/

இதற்கு அடுத்ததாக 'மரக்கால் ' என்ற அளவீட்டுக் கருவி இருந்தது. எட்டு படிகளைக் கொண்டது ஒரு மரக்கால்.அதாவது ஒரு மரக்காலில் நெல்லை நிரப்பும்போது அதில் எட்டுப் படிகளில் அளக்கக் கூடிய நெல் நிரம்பும். இப்படித்தான் நமது முன்னோர்கள் தானியங்களை அளவீடு செய்து வந்தார்கள்.

இந்த பழங்கால அளவீட்டு முறை இப்போது அழிந்தொன்றும் போய் விடவில்லை.இன்றும் தென்னகக் கிராமங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றது.பண்ணையார்களின் நிலங்களில் பயிர்த்தொழில் செய்து வருகின்ற விவசாயிகள் இந்த முறையில்தான் தங்களது குத்தகையைச் செலுத்தி வருகிறார்கள்.

இங்கே இந்த ' படியளப்பது ' பற்றிய விஷயத்தை பதிவு செய்வதின் நோக்கமே இனிமேல்தான் வருகிறது.

என்ன அது..?

சமீபத்தில் கிராமம் ஒன்றில் இப்படிப் படியளக்கும் ஒரு நிகழ்வைக் காண நேர்ந்தது. அது சுவாரஸ்யமாக இருந்தது என்று மட்டும் சொல்வதை விட வியப்பூட்டுவதாகவும் இருந்தது என்றும் சொல்லவேண்டும்.அந்த நிகழ்வை விளக்குகிறேன்.கேளுங்கள்.


அந்த விவசாயி மரக்கால் கொண்டு , தான் விளைவித்த நெல்லை அளந்து கொடுத்தார்.இந்த 'அளப்பு' ஒரு இசைப்பாட்டு போல சந்தத்தோடு இருந்தது என்பதுவும்,எண்ணிக்கையை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் உரத்த குரலில் இருந்தது என்பதுவும் வேறு விஷயங்கள். இங்கே நான் சொல்ல வருவது அதைப் பற்றியல்ல.


முதல் மரக்காலை 'ஒன்று' என்று எண்ணாமல் 'லாபம்' என்று அவர் சொன்னார்.அடுத்து ரெண்டு,மூணு,நாலு,ஐந்து, ஆறு ,ஏழு..என்று எண்ணினார்.எட்டாவது மரக்காலை எட்டு என்று அவர் எண்ணவில்லை. .'எட்டு மரக்கால்' என்று சொன்னார்.அடுத்து 'ஒன்பது', 'பத்து' என்று தொடர்ந்து, பதினெட்டாவது மரக்கால் அளக்கும்போது 'பதினெட்டு மரக்கால்' என்று எண்ணினார்.


ஏன் ஒன்று என எண்ணாமல் லாபம் என்று சொன்னார்..?. ஏன் எட்டு என்று சொல்லாமல் எட்டு மரக்கால் என்று எண்ணினார்..?


இங்கேதான் நமது முன்னோர்கள் ஆதி காலம் முதலாகவே  தம்மிடம் பன்முகச் சிந்தனையைக்  கொண்டிருந்த  சிறப்பை நாம் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது.


இந்த வருடத்து உழைப்பின் பயனாக வந்த முதல் மரக்கால் நெல்லை 'லாபம்' என்று சுபச் சொல்லால் குறிப்பிட்டு அந்த லாபம் அடுத்த ஆண்டும் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள்.


'எட்டு' என்ற எண் ஏனோ ராசியில்லாத எண்ணாக உலகம் முழுவதுமே புறக்கணிக்கப்பட்டு வருகிறது.' எட்டு குட்டிச் சுவர்' என்ற சொலவடை ஒன்று இன்றும் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது.இந்த விஷயத்தைக் கருத்தில் கொண்டுதான் தங்களின் வாழ்வாதாரமான வேளாண் வருமானத்துக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்பட்டு விடாதவாறு  'எட்டு' என்று மட்டும் உச்சரிக்காமல் அதோடு நெல் நிறைந்த மரக்காலையும் சேர்த்துக்கொண்டு 'எட்டு மரக்கால்' என்று சொல்லியிருக்கிறார்கள்.


அடுத்ததாக , அளந்த நெல்லை சாக்குப்பைகளில் நிரப்பிக் கட்டும் இடைவெளிகளில் நெல்லை அளப்பவர் தான் வைத்திருந்த மரக்காலை தவறிக்கூட குப்புற வைத்துவிடாமல் நிமிர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதில் கவனமாக இருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.


ஏன் அப்படி..?


ஏனெனில் கவிழ்த்து வைப்பது ' முடிந்து விட்டது' என்பதின் அடையாளமாகக் கருதப்பட்டது.படியளப்பது எப்போதுமே தொடர் நிகழ்வாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் வினைச்செயல் அது.


இறுதியாக நெல் அளந்து முடிந்தது.இப்போதும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.அளந்த மரக்காலை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும்.அப்படி ஒப்படைத்தபோது நெல் அளந்தவர் வெறும் மரக்காலைக் கொடுக்காமல் மரக்காலில் சிறிது நெல்லை அள்ளிப்போட்டு மரக்காலைக் கொடுத்தார்.


இந்தச் செயலுக்குப் பொருளென்ன..?


நெல் அளக்கும் மரக்கால் வெறுமையாக இருக்கக் கூடாது.  'அட்சய பாத்திர'த்தில் இடப்படுகின்ற ஒரு பிடிச் சோறு வளர்ந்து ஒரு ஊரின் பசியைத் தீர்ப்பது போல அந்த மரக்காலில் இடப்படுகின்ற நெல் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.அந்த மரக்கால் நெல்லை அளந்து கொண்டேயிருக்கவேண்டும் என்பது அந்த முன்னோர்களது விருப்பம்.அந்த விருப்பத்தின் விளைவே இந்தச் செயலானது


இப்படியாக கொடுப்பவருக்கும் ,வாங்குபவருக்கும் அளந்த மரக்காலின் உரிமையாளருக்கும் கூட நன்மையே விளைய வேண்டும் என்ற நேர்மறை எண்ணங்களைத்  [ Positive thinking]  தம்மிடம் கொண்டு அதற்கேற்ற வகையில் தம் செயல்களை வகுத்துக்கொண்ட நம் முன்னோர்களின் அறிவுத் திறனை என்னவென்று வியப்பது..?


யாதும் ஊராக, யாவரும் கேளிராக ,எல்லோரும் இன்புற்று வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர். நாம் எப்படி  இருக்கிறோம்..?



வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

எது மகிழ்ச்சி ...?...இதோ இது








ரண்டு நாட்களாக  எடை பார்க்கும் கருவி  ஒன்று வாங்குவதற்காக அலைய வேண்டியதாகிவிட்டது.அதாவது Personnel weigh machine என்று சொல்லப்படுகிற வட்டக் கடிகாரம் போல இருக்கிற ஏறி நின்று நாமே எடை பார்த்துக் கொள்ளக்கூடிய கையடக்கமான இயந்திரம் அது.

அது எங்கே விற்கப்படுகிறது என்று தெரியாமல் ரிச்சி ஸ்ட்ரீட் வரையிலும் போய்ப் பார்த்து விட்டேன்,கிடைக்கவில்லை. 


அந்த எடை மெஷின் எனக்கில்லை.உடல் எடையைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் எனக்கு இதுவரையில் வரவில்லை.

என்னுடைய சிறுவயது நண்பர் ஒருவர்.அமானுல்லா என்று பெயர்.சின்ன வயதில் அசாத்திய படைப்புத் திறனுடன் இருப்பார்.புதிதாக எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை அப்படியே சொந்த முயற்சியில் உருவாக்க முயலுவார். செயல்பாட்டுத் திறன் இல்லையென்றாலும் அனேகமாக அந்த புதிய பொருளின் வடிவத்தை உருவாக்கிவிடுவார்.

அப்படியான திறமைசாலியாக இருந்தும் குடும்பத்தின் வறுமைச் சூழலால் அவரால் மேற்படிப்புக்குப் போக இயலவில்லை.நாங்கள் எல்லாம் படித்து வேலையில் சேர்ந்து அப்படி இப்படியென்று ஒருமாதிரி செட்டிலாகி விட்டோம்.

ஆனால் அமானுல்லாவின் வாழ்க்கைச் சக்கரம் மட்டும் ஏழ்மைச் சகதியில் மாட்டிக் கொண்டு மேலே ஏற வழியில்லாமல் அப்படியே நின்ற இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது.

நான் ஊருக்குப் போகும்போதெல்லாம்  எதேச்சையாக அவரைச் சந்திப்பது உண்டு. அப்போதெல்லாம் மிகுந்த அன்போடு நலம் விசாரிப்பார் அமானுல்லா. மறக்காமல் பக்கத்தில் இருப்பவர்களிடம் இளமைக் காலத்தில் நான் செய்த சேட்டைகளையும் அவர் செய்த சேட்டைகளையும் நாங்கள் இருவரும் சேர்ந்து செய்த சேட்டைகளையும் காமெடியாகச் சொல்லிக் கலகலக்க வைப்பார்.

எப்போதுமே அமானுல்லாவிடம் தனது  வறுமை குறித்த வருத்தமோ எங்களைப் பற்றிய பொறாமையோ இருந்ததேயில்லை.சென்ற முறை நான் ஊருக்குப் போயிருந்தபோது அமானுல்லா என்னைத் தேடி வந்தார்.நேருக்கு நேராக என் முகத்தைப் பார்த்து எந்த விதத் தயக்கமும் இல்லாமல் என்னிடம் கேட்டார்.

' தம்பி,எனக்கு ஒரு உதவி செய்யணும் நீங்க..'

ம்ஹும் .சரிதான்.என்றாவது ஒருநாள் இது நடக்கும் என்று எதிர்பார்த்தது தான். கடைசியில் அந்த நேரம் வந்தேவிட்டது.அவர் கேட்கும்போது 'இல்லை' என்று சொல்லமுடியாது.பணத்தைக் கொடுத்து விடலாம். ஆனால் அடுத்த முறை ஊருக்கு வரும்போது மறுபடி பணம் கேட்பாரோ என்று நான் அமானுல்லாவைக்  கண்டு ஒளிந்து கொள்ள நேரிடும். வாங்கிய  பணத்தைக் திருப்பிக் கொடுக்க முடியாமல் சங்கடப்பட்டு என்னைக் கண்டு அமானுல்லா ஒளிந்து கொள்ள நேரிடும்.நீண்ட கால நல்ல நட்புக்கு முடிவு காலம் வந்துவிட்டது என்று நான் முடிவு செய்து விட்டேன்.

'என்ன சொல்லுங்க ' ..என்றேன்.

அமானுல்லா நான் பயந்ததுபோல பணம் கேட்கவில்லை.அவர் கேட்டார்.

' எனக்கு ஒரு எடை மெசினு வாங்கிக் குடுங்க.பழசானாலும் பரவா யில்லை. கடைத் தெருவுல,சந்தைப்பேட்டையில போட்டு உக்காந் தேன்னா ஒவ்வொரு ரூபா வசூல் பண்ணிப் பொழைச்சுக்குவேன் ,,'

அந்தக் கணத்தில் எனக்கு மேடையெங்கிலும்  பேசித் திரிகின்ற மேதைகளின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

" பசித்தவனுக்கு மீனை  வாங்கிக் கொடுக்காதே, மீனைப்  பிடிக்கக் கற்றுக் கொடு..."

அமானுல்லா விருப்பப்பட்டிருந்தால் ஆயிரமோ இரண்டாயிரமோ கேட்டிருக்கலாம்.வாழ்க்கையின் அனுபவங்கள்தான் அமானுல்லாவுக்கு இப்படிச சிந்திக்கக் கற்றுக் கொடுத்திருக்கவேண்டும். 


ந்த அமானுல்லாவுக்காகத்தான் எடைக் கருவியைத் தேடியலைந்தேன். நல்லவேளை. கடைசியாக இங்கே வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த ஒரு சூப்பர் மார்க்கட்டில் கிடைத்தது. இருப்பதிலேயே விலை குறைந்தது 495 ரூபாய் என்றார்கள். பரவாயில்லை. குறைவுதான்.யோசிக்கவேயில்லை.உடனே பணத்தைக் கொடுத்து வாங்கிவிட்டேன்.

ஏனென்றால் 500 ரூபாய் செலவில் ஒரு பசித்த மனிதனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நழுவ விட்டு விடக் கூடாது.அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அமானுல்லாவுக்கு நன்றிகள்.








தென்னாடாகிறதா சென்னை ..?

       




இந்தப் பதிவு முக்கியமாகச் சென்னைவாசிகளுக்கானது.ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருமே தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்தான். இந்தப் பதிவு கொஞ்சம் தாமதமானதுதான்.என்றாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை.Evergreen subject என்பதுபோல எப்போதுமே பேசப்பட வேண்டிய விஷயம்தான் இது.

இப்போது இல்லா விட்டாலும் அடுத்த ஆண்டு எப்படியும் நாம் இதைப் பற்றிப் பேசத்தான் போகிறோம்.அதனால் தாமதமாகிவிட்டாலும் பரவாயில்லை. இப்போதே பேசி விடுவோம்.

பூடகம் பெரிதாயிருப்பதைக் கண்டு ஒன்றும் யோசிக்காதீர்கள்.விஷயம் சின்னதுதான்.என்றாலும் முக்கியமானது.சரி போதும். விஷயத்துக்கு வருவோம்.

சமீபத்தில் வந்து சென்ற தைப்பொங்கல் தமிழர் திருநாளுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வந்தது இல்லையா? அந்த நாட்களில் சென்னையைப் பார்த்தீர்களா..? நகரம் வெறிச்சோடிப்போய்க் கிடந்ததைக் கவனித்தீர்களா..?

 திரையரங்கங்கள் காலியாகக் கிடந்தன....

பேருந்து நிறுத்தங்கள் ஆளரவமின்றி நின்றன...

டாஸ்மாக் கடைகளில் அமைதி தவழ்ந்தது.

கோயம்பேடு பேருந்து நிறுத்தம் காற்று வாங்கியது.

ஜி.எஸ்.டி சாலையில் வாகனப் போக்குவரத்து வெகு சீராக இருந்தது.

நகரமே இப்படிக் காலியாகப் போனதற்குக் காரணமென்ன ..?

விடுமுறை முடிந்த மறுநாள் காலை ஜன நெரிசல் முண்டியடித்த வெளியூர்  பஸ்  நிறுத்தங்களைப்  பார்க்க வாய்ப்புக் கிடைத்தவர்களுக்கு காரணம் நன்றாகப் புரிந்திருக்கும்.பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்த தென்மாவட்ட மக்கள் அனைவரும் அன்று காலையில்தானே வந்து இறங்கினார்கள்.

PAUSE மோடில் இருந்த வீடியோப்படம் PLAY ஆக ஆரம்பித்தது போல மறுபடி சென்னை பரபரப்பானது.

மளிகைக் கடைக்காரர்கள்,ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள், முனியாண்டி விலாஸ் மற்றும் செட்டிநாடு ஓட்டல் முதலாளிகள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள். கார் ஓட்டுனர்கள், முடி திருத்தக் கலைஞர்கள், சலவைத் தொழிலாளிகள். ஐ.டி ஊழியர்கள்.தனியார் நிறுவனப் பணியாளர்கள், ரங்கநாதன் தெரு கடை  ஊழியர்கள், மெரினா பீச் சுண்டல் சிறுவர்கள், சாலையோர கையேந்தி பவன் கடைக்காரர்கள் , திரைப்படக் கலைஞர்கள் என்று இப்போது சென்னை முழுவதும்  நிறைந்திருப்பவர்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான்.



அரசுப் போக்குவரத்து விரைவுப் பேருந்துகளும் தனியார் ஆம்னி பஸ்களும் நெடுந்தூர விரைவு ரயில்களும் தினமும் இந்த மக்களை பிதுங்கப் பிதுங்க ஏற்றிச் சென்று திரும்ப வந்து இறக்கிக் கொண்டு  இருக்கின்றன.

ஒரு காலத்தில் 'இஸ்துன்னு வா ', 'வலிச்சினு வா ', கஸ்மாலம், பேமானி' என்பது போன்ற சென்னைக்கே உரித்தான  மணிப்பிரவாளத்தை இப்போது கேட்க முடிகிறதா..? முடியாது. ஏனென்றால் சென்னைத் தமிழ் இப்போது குறிப்பிட்ட சில ஏரியாக்களுக்குள் முடங்கிக்கொண்டு விட்டது.அது மெல்லச் செத்துப்போய்க் கொண்டிருக்கிறது..அதன் இடத்தை தென்னாட்டுத் தமிழ் பிடித்துக் கொண்டுவிட்டது.

' நாதாரிப் பயலுக  எங்க போய்ட்டாய்ங்க ' என்று இப்போது சென்னை மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.'மொக்கை ' இளைஞர்களின் செல்லக் குறியீடாகி விட்டது. தென் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் மெல்லப் பரவிப் பெருகிவிட்டன.

திண்டுக்கல் N.பாண்டியனின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு இங்கே சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

பூமி வெப்பமயமாதலின் விளைவாக பருவ காலங்கள்  தவறிப் போனதும் விளைநிலங்கள் தரிசாகிப் போனதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பள அழைப்பு விடுத்ததால் உள்ளூர்த் தொழில்கள் முடங்கிப் போனதும் அரசாங்கங்கள் எத்தனை நலத்திட்டங்களை அமல் படுத்தினாலும் அதன் பயன் சாமான்யர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் அரசியல்வாதிகளும் அதிகாரி களும் பங்கு போட்டுக் கொள்வதுமான காரணங்கள்தான் தென்னாட்டு மக்களைச் சென்னையை நோக்கித் துரத்தியிருக்கின்றன.

ஆனால் அதற்காக இவர்களைக் குறை எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் பாட்டுக்குத் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். முன்னேறுகிறார்கள். அவர்களின் உழைப்பும் திறமையும் அவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. 

இங்கே உழைத்துச் சம்பாதிக்கின்ற பணத்தில் அங்கே ஊர்த் திருவிழாக்களில் 'சென்னைவாழ் இளைஞர்கள்' சார்பில் சினிமாவில் தலையை  மட்டும் காட்டிக் கொண்டிருக்கிற 'திரைப்படக் கலைஞர்கள்' கலந்துகொள்கிற 'கடையம் ராஜு 'வின் கலை நிகழ்ச்சிகளை  நடத்திக் களிக்கிறார் கள்.

இவர்களைச் சென்னை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் இவர்களால் சென்னையும் வளர்ந்துகொண்டுதான் வருகிறது. பரப்பளவில் மட்டுமல்லாமல் பணப்புழக்கத்திலும் கூடத்தான்.

இது ஏதோ இப்போதுதான் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் விளைவு ஒன்றுமில்லை.

1900 ஆவது ஆண்டுகளில் ராமநாதபுரத்திலிருந்து வந்த பாண்டித்துரைத் தேவர்தான் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த சிங்காரவேலு முதலியார் எழுதிய 'அபிதான  சிந்தாமணி' என்ற முதல் தமிழ் மொழிக் கலைக் களஞ்சிய நூலைப் பதிப்பித்தார்.

1920 களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த நாகலிங்கம் என்ற ராஜா சாண்டோ தான் மவுனத் திரைப்படங்களின்  கதாநாயகனாக இருந்தார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த புதுமைப்பித்தன்தான் தமிழ்ச் சிறுகதைக் களத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்..' தினத்தந்தி'ஆதித்தனார்தான் வெகு சாமான்ய மக்களையும்   நாளிதழ் படிக்கப் பழக்கிய ஆசிரியரானார்.

நாகர்கோவிலில் பிறந்த கலைவாணரும் தூத்துக்குடியில் வளர்ந்த சந்திர பாபுவும்தான் தமிழ்த் திரையில் நகைச்சுவைக்கு புதிய பரிமாணம் கொடுத்தார்கள்.

காரைக்குடியைச் சேர்ந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்தான் சென்னை யின் பெரிய படப்பிடிப்புத் தளத்தை நிறுவினார். கண்ணதாசனையும் தமிழ் வாணனையும் அதே காரைக்குடிதான் தந்தது.

திருச்சியில் பிறந்த தியாகராஜா பாகவதர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஆனார்.

விருதுநகரில் தோன்றிய காமராசர்தான் இந்திய அரசியலின் சூத்ரதாரி யான   முதல் தமிழராக இருந்தார்.

ராமநாதபுரத்திலிருந்து வந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் என்கிற அறிஞர் தான் அணு அறிவியலில் நமது நாட்டை உலக அரங்கில் முன்னிறுத் தினார். 

அதேயிடத்திலிருந்து வந்த மகேந்திரனும் கமல ஹாசனும்தான் தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்தார்கள்.

 சொல்லிக்கொண்டே போகலாம். பிரமுகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர் கள், கவிஞர்கள் என்று எல்லோரையும் எழுத இங்கே இடம் போதாது.

ஆக தமிழ் மாநிலம், தமிழ் மொழி,சென்னை நகரம்ஆகிய  எல்லாவற்றின் வளர்ச்சியிலும் தென்  மாவட்ட மக்களின் பங்களிப்பு மிகக் கணிசமானது என்பது நிதர்சனம்.

எனவே சென்னை மெதுவாக தென்னாடாக மாறிக்கொண்டு வருவது நல்ல விஷயம்தான்.திருச்சியைத் தமிழ்நாட்டின் தலைநகரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை அப்படியே அமுங்கிப்போனதுகூட இந்த மாற்றத்தினால் விளைந்த ஒரு மாற்றம்தான்.

இன்னும் நிறைய சிந்தனையாளர்களும் படைப்பாளிகளும் சீர்திருத்த வாதிகளும் அறிஞர்களும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கட்டும்.தமிழ் நாடு வளரட்டும்.

இங்கே ஒரு விஷயம்.நானும் தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்தவன்தான்.இங்கே வந்தோர்  எல்லோரையும் போல என்னையும் இந்தச் சென்னை தான் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.நன்றி.



சரி,நல்லது.கடைசியாக இதைக் கேளுங்கள்.


பொங்கல் விடுமுறை முடிந்து எல்லோரும் சென்னைக்குத் திரும்பி விட்ட சில நாட்களுக்குப்பின் ஒருநாள் வெளியூர் போவதற்காக ரயிலில் இடம் கிடைக் காததால் பஸ் பிடிப்பதற்காக இரவு 8 மணி போல கோயம்பேடு போனேன்.100 அடி ரோட்டில் ஒரு சாலையோரச் சாப்பாட்டுக் கடையில் எதோ தகராறு. போதையில் இருந்த ஒரு இளைஞர் இன்னொருவரை சட்டையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிட்டுக் கத்திக்கொண்டிருந்தார்,

" எந்தூரான் எந்தூரானப் பத்திப் பேசுறது ,ஏண்டா .."

இரண்டு பெரும் தென்மாவட்டத்துக்காரர்கள்தான்.பக்கத்துப் பக்கத்து ஊர்க் காரர்களாம். அப்புறம் என்ன சண்டை..?

அதாங்க நாங்க.தென்னாட்டு மக்களின் கலாசாரத்தை உங்களால் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது.விடுங்க.

அடுத்த ஆண்டும் தைப் பொங்கல் வரும்.அதற்கு மூன்று நாட்கள் விடுமுறை யும் வரும்.அந்த விடுமுறை நாட்களில் சென்னையைக்  கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்.

 

திங்கள், 11 பிப்ரவரி, 2013

இவர்கள் மாமனிதர்கள்







துரையைச் சேர்ந்தவர் நாராயணன் கிருஷ்ணன்.இந்தியாவின் மிகப் பெரிய ஹோட்டல்களில் ஒன்றான 'தாஜ் 'ஜில் சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் பணி  ஒப்பந்தம் ஒன்று காத்திருந் தது. இந்த நேரத்தில் நான்கு நாட்கள் பயணமாக மதுரை வந்தார் நாராயணன்.

இதற்கு மேல் நடந்ததை அவரே சொல்லக் கேட்போம்.


"அன்று நான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மன நலம் பாதிக்கப்பட்ட வயதான பெரியவர் ஒருவர் பசி தாங்காமல் தனது மலத்தையே சாப்பிடுவதைப் பார்த்தேன் அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பக்கத்து ஹோட்டலிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.பர பரவென்று சில நிமிடங்களில் அதைச் சாப்பிட்டு முடித்த அந்த மனிதர் பசி அடங்கியதும் என்னை நிமிர்ந்து பார்த்தார்.அவர் கண்களில் பொங்கி நின்ற  நன்றியுணர்வினை நான் கண்ட அந்தக் கணம்தான் நான் என்ன செய்யவேண்டும் என்பதை எனக்குத் தெரியப்படுத்தியது."

21 வயதில் நாராயணன் கிருஷ்ணன் டாலர் சம்பாத்தியம் தரும் வேலையை உதறிவிட்டு மதுரையின் தெருக்களில் சுற்றித் திரிகின்ற மன நோயாளிகளை யும் உறவுகளால் கைவிடப்பட்ட உடல் நலிந்த முதியவர்களையும்  தேடிச் செல்லலானார்.கோடீஸ்வரக் கனவான் களுக்கு உணவு சமைத்த கை அதே நயத்தோடும் தரத்தோடும் தெரு வாசிகளுக்காக சமைக்க ஆரம்பித்தது.தினம் மூன்று வேளை தேடியலைந்து உணவு கொடுத்தது மட்டுமல்லாமல் மன நோயாளி களுக்கு முகச் சவரம் செய்தார் முடிதிருத்தமும் செய்தார். சாத்தியப்பட்ட சமயங்களில்  அவர்களைக் குளிக்க வைத்து ஆடை அணிவித்து இயல்பு நிலைக்குத் திருப்பவும் முயற்சித்தார்.

ஆச்சாரமான பிராமணக் குடும்பத்து மகனின்  நடவடிக்கைகளைப் பார்த்து அதிர்ந்து போன பெற்றோர்கள் பிள்ளைக்கு மனம் பிசகி விட்டதோ என்று  சந்தேகித்து மன நல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள்.தெய்வக் குற்றமோ என்று பயந்து கோவில்களுக்குக் கூட்டிச் சென்றார்கள்.

ஆனால் தான் என்ன செய்கிறோம் என்பதை மிக நன்றாக உணர்ந்திருந்த நாராயணனோ  தொடர்ந்து தனது பணியிலே கவனம் செலுத்தினார். இன்று நாராயணின் 'அட்சயா ட்ரஸ்ட்'  நாள்தோறும் 450 நலிந்த மனிதர் களுக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறது. இதுவரையில் 20 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே மதுரையில் இருக்கின்ற கோவில்களில் ஏழைகளுக்கு உணவு அளிக்கின்ற அன்னதானத் திட்டம் நடைபெற்றுக் கொண்டுதான்  வருகின்றது.ஆனால் அங்கே  கொடுக்கப்படுகின்ற உணவுச் சீட்டுகளில் 80 சதவிகிதம் கோவில் பணியாளர்களுக்கே போய்ச் சேருகின்றது.10 சதவிகிதம் பணியாளர்களுக்குத் நெருக்கமானவர்களின் கடைகளுக்குப் போகின்றது.மீதமிருக்கின்ற  10 சதவிகித டோக்கன்கள் மட்டுமே வெளியாட்களுக்குக் கிடைக்கின்றன .ஆனால் அவையும் பசித்துக் கிடப்பவர்களுக்குப் பயன் அளிப்பதில்லை.

இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது  நாராயணன் கிருஷ்ணனின் பணி மிக மகத்தான ஒன்றாகும்.

2010 ஆம் ஆண்டில் நாராயணன் கிருஷ்ணனின் தன்னலமற்ற சேவை களுக்காக சி.என்.என் நிறுவனம் உலகின் 10 மிக உயர்ந்த மனிதர்களில் 
[ Top 10 C.N.N Heroes ] ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

நாராயணன் கிருஷ்ணன் சொல்கிறார்.

" நீ ஹிந்துவா ?...,நீ பிராமினா ?...,நீ இந்தியனா?...இப்படியெல்லாம் கேட்டால் நான் எனக்குத் தெரியாது என்றுதான் சொல்வேன்.ஆனால் நீ ஒரு மனிதனா ?என்று கேட்டால் நிச்சயமாக உறுதியாக ஆம் என்று சொல்வேன். "


சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இரண்டாம் தளத்தில் இருக்கிறது அந்த புகைப்படக்கருவி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை. கடையின் உரிமையாளரான சேகர்  காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் வாடிக்கையாளர்கள் யாரையும் கவனிப் பதில்லை.ஏனென்றால் அந்த நேரங்களில் அவர் நூற்றுக் கணக்கான வேறு வகையான வாடிக்கையாளர்களைக் கவனிக்க வேண்டியதிருக்கிறது.



அந்த வேறு வகையான வாடிக்கையாளர்கள் கிளிகள்.

சில வருடங்களுக்கு முன் சேகர் தற்செயலாக தனது கடைக்கு வெளியே சில புறாக்களுக்கு உணவளித் தார். அதுமுதலாக அந்தப் புறாக்கள் தொடர்ந்து அங்கே  வர ஆரம்பித்தன. சில நாட்களுக்குப் பிறகு சில கிளிகள் அங்கே  வந்தன.இப்போது தினமும் சராசரியாக 200 கிளிகள் உணவுக்காக சேகரைத் தேடி வருகின்றன.

தானிய மணிகளையும் உடைத்த கடலையையும் அவை விரும்பிச் சாப்பிட்டு விட்டுப் பறந்து போகின்றன.அவை வந்து செல்லும் வரை அவைகளுக்குத் தொந்தரவு இல்லாத வகையில் வாடிக்கையாளர்களைத் தவிர்ப்பதற்காக கீழே இருக்கின்ற ஒரு கடையில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் சேகர்.


கோயம்பத்தூர் அருகிலுள்ள கல்பட்டி கிராமத்தில் வசிப்பவர் 42 வயதான ராமகிருஷ்ணன். அங்கே அவருடைய நட்பு வட்டம் மிகப் பெரியது.மிக வித்தியாசமானதும் கூட.14 ஆண்டுகளாக தினமும் ஏறத்தாழ 150 நண்பர்கள் அவர் அளிக்கின்ற உணவுக்காக அவர் மீது அன்புகொண்டு அவரைச் சுற்றி வருகிறார்கள்.


அந்த நண்பர்கள் காக்கைகள்.

பிஸ்கட், தோசை,அரிசி, தேங்காய்ச்  சில்லுகள், மிக்சர் போன்றவற்றை ராம கிருஷ்ணன் காக்கைகளுக்கு உணவாகத் தருகிறார்.தினமும் காலையில் அவர் உணவுப் பொட்டலத்தோடு வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவருக்காகக் காத்திருக்கின்ற காக்கைகள் உற்சாகக் குரல் எழுப்பி அவரை வரவேற்கின்றன. தலை, தோள் என்று அவர் மீது அவை பயமின்றி அமர்ந்து கொள்கின்றன. வியப்பைத் தரும் வகையில் சில காக்கைகள் அவர் தன உள்ளங்கைகளில் தரும் உணவை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன.

தனது தந்தையின் திதிக்காக ஒருநாள் காக்கைக்கு உணவு வைத்தபோது எங்கிருந்தோ திடீரென்று நிறைய காக்கைகள் உணவைச் சாப்பிட வந்ததாகவும் அன்றிலிருந்து தினமும் அவைகளுக்கு உணவளிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டதாகவும் ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

ராமகிருஷ்ணன் வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் கிளம்பும்போது காக்கைகள் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலும் அவரைத் தொடர்ந்து பறந்து செல்வதாகக் கூறுகிறார் ஊர்க்காரர் ஒருவர்.

இப்படியான இன்னும் பல மனிதர்கள் புனிதர்களாக நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இந்த மனிதர்கள் நம்மிலிருந்து தனித்து நிற்கிறார்கள்..? எப்படி இந்த ஈகைச் சிந்தனை இவர்களுக்கு வந்தது..?

அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.....

எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இறைவன் இருக்க முடியாது என்பதால்தான் அவன் தாய் என்பவளைப் படைத்தான் என்கிற சொல்லாடல் நம்மிடையே உண்டு.அந்தத் தாய் என்பவளும் இல்லாத நாதியற்ற மனிதர்களுக்கு யார் உதவ வருவார்கள்..?

அதற்குத்தான் இறைவன் நாராயணன் கிருஷ்ணன் போன்ற நல்லாத்மாக் களைப் படைத்திருக்கிறான் போலும்.

 இவர்கள் இறைவனின் பிரதிநிதிகளாக தேவனின் தூதர்களாக இங்கே வந்திருக்கிறார்கள்.இவர்கள் செய்வதுதான் உண்மையான தெய்வத் திருப்பணி.இவர்கள் செய்வதுதான் தேவ ஊழியம்.

ஆனால் இந்த இறைத் தொண்டினை இவர்கள் எந்தத் தெய்வத்தின் பெயராலும் செய்யவில்லை.மனிதனின் பெயராலேயே செய்கிறார்கள்.

இவர்கள் மகத்தானவர்கள்.