சனி, 16 ஜூன், 2012

பசுமை நிறைந்த நினைவுகளே

                                    பசுமை நிறைந்த நினைவுகளே
  
                     நினைவு -1
                                      குலவை 


தென் தமிழ் நாட்டுக் கிராமங்களில் பருவ மழைக்குப் பின் விவசாயிகள் ஆடி மாதத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்கு வார்கள்.பாவி வைத்த நெல்நாற்று பருவமடைந் ததும் ஆண்கள் நாற்றைப் பறித்து வயலுக்குக் கொண்டு வர கிராமத்துப் பெண்கள் வீட்டுக்கு ஒருவராக பெரும் குழுவாக வயலில் இறங்கி நடுவார்கள். ஒரு நாள் ஒருவரின் வயல் என்றால் இன்னொரு நாள் இன்னொரு வரின் வயல் என்று முறை வைத்து நடவு வேலை நடக்கும். காலை தொடங்கி மாலை வரை நடக்கும் வேலையில் சோர்வு தெரியாமல் இருக்க பாடத் தெரிந்தவர்கள் பாடுவார்கள். இப்படி வயல்காடுகளில் பாடியே நல்ல குரல் வளமும் தேர்ச்சியும் பெற்று கிராமத்தில் நட்சத்திரத் தகுதியடைந்த பெண்களும் இருந்தார்கள். இவர்களின் பாட்டுக் குரல் நெடுந்தொலைவு வரையிலும் கேட்கும்.  இப்படி நடவின்போது அந்த வழியிலோ அல்லது வயல் வரப்பிலோ யாரேனும் ஊர்ப் பெரியவர்கள் வந்துவிட்டால் சில குறும்புக்காரப் பெண்கள் நாற்று முடியை அவர்களின் வழியை அடைத்து வைத்து விடுவார்கள்.வந்தவர் நாற்று முடியைத் தாண்டமாட்டார்.நடவு செய்யும் பெண்கள் அந்த மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பாடி பெருங் குரலில் குலவையிடுவார்கள்.அதன்பின் அந்த மனிதர் குலவை யிட்டவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டுத்தான் அங்கிருந்து செல்வார். .இந்தச் செயல் பெரிய மனிதர்களைக் கவுரவிக்கும் விதமாகவே கருதப்பட்டது.இதெல்லாம் இப்போது இல்லை. எல்லாம் மாறிப் போய்விட்டது.அந்தக் குலவைச்சத்தத்தை இப்போது நினைவு படுத்திப் பார்க்கும்போது எதையோ இழந்து விட்ட உணர்வு என்ன ஓட்டத்தை சற்றே இடைமறிக்கிறது. 



                                                         நினைவு -2

                                                            ஈசல் பொரியல்

மழைக் காலத்தின் துவக்கத்தில் முதல் மழை பெய்து நின்று வெய்யில் அடித்ததும் பூமிக்குள்ளிருந்து சிறு பிளவு உண்டாக்கி அதன் வழியாக ஏராளமாக ஈசல் பூச்சிகள் வெளிவரும்.அதைப் பார்த்ததும் பெண்களும் சிறுவர்களும் அந்தப் பிளவுகளின் மீது துணியால் ஒரு வலையை உருவாக்கி ஈசலைப் பிடிப்பார்கள்.சில சமயங்களில் சிறுவர்கள் அந்தப் பிளவில் வாய் வைத்து ஊ ஊ என்று குரல் கொடுப்பார்கள்.அப்படிச் செய்தால் ஈசல்கள் விரைவாக வெளியே வரும் என்பது அவர்களின் நம்பிக்கை.காக்கைகளும் மைனாக் குருவிகளும் தப்பிப்  பறந்து வரும் ஈசல்களை பிடிப்பதற்காக சிறுவர்களின் தலைக்கு மேல் வட்டமடிக்கும்.பாத்திரம்  நிறையப் பிடித்து வரும் ஈசல்களின் சிறகுகளை நீக்கிவிட்டு அரிசியோடு சேர்த்துப் பொறித்து அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பிடக் கொடுப்பார்கள்.ஈசலில் புரதச்சத்து அதிகம் என்பதை அவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தார்கள்  ?


                                                 நினைவு-3

                                                             கூட்டாஞ்சோறு.

கோடை காலப் பள்ளிக்கூட விடுமுறையில் பொழுதைப் போக்க  கிராமத்தில்  சிறுவர்கள் பல விதமான விளையாட்டுக்களை விளையாடுவார்கள்.அதில் ஒன்றுதான் கூட்டாஞ்சோறு.ஆண்களும் பெண்களுமாக ஒன்று சேர்ந்து அவரவர் வீட்டிலிருந்து அரிசியும் காய்கறிகளும் பொருட்க்களுமாகச் சேர்த்து ஊருக்கு வெளியே ஒன்று கூடி, ஆண்கள் காட்டில் விறகு சேகரித்து வந்து காய்கறி வெட்டிக்கொடுக்க பெண்கள் அடுப்பு அமைத்து சமையல் செய்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு மாலையில் வீடு திரும்புவார்கள்.இந்த விளையாட்டுக்கு பெரியவர்களும் முழு ஆதரவு கொடுப்பார்கள்.அவர்களும் வந்து கூட்டாஞ்சோறு சாப்பிட்டுப்போவதும் உண்டு.விளையாட்டாக மட்டுமல்லாது கிராமத்து குடும்பங்களிடையே நல்லுறவையும் சிறுவர்களிடையே ஒற்றுமையையும் வளர்த்து வந்த இந்த உன்னதமான நிகழ்வு இப்போது இல்லை.ஏக்கமாகத்தான் இருக்கிறது.

                                         நினைவு-4

                                          மண் குடத்துக்  குடிநீர் 


சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் கிராமங்களில் மண்குடத்தில் குடிநீர்  வைத்து அருந்துவது வழக்கமாக இருந்தது. வீடுகளுக்கு முன்புறத்தில் நிழலான ஒரு இடத்தில் இந்தக்குடம் இருந்ததால் வழிப்போக்கர்களும் தாகத்துக்கு நீர் அருந்திச் சென்றனர்.நுண்துளைகள் நிறைந்த மண்குடம் நீரை சுத்தமாகவும் எப்போதும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். இந்தக் குளிர்சாதன முறை மிகவும் சுகாதாரமானதும் சிக்கனமானதும் உடலுக்கு நலம் பயப்பதும் ஆகும்.மண் குடங்களின் இடத்தை இப்போது பெட் பாட்டில்கள் பிடித்துக்கொண்டுவிட்டன.  வருத்தமாக இருக்கிறது  

         
                                                                                   நினைவு-5
                                            
                                                                                          சிட்டுக்குருவிகள் 

கிராமத்து வீடுகளில் மாட்டிவைத்திருக்கும் போட்டோ பிரேம்களின் பின்னால் சிட்டுக் குருவிகள் கூடு கட்டி முட்டை யிட்டு  குஞ்சு பொரிக்கும். அவைகள் போடுகின்ற சத்தம் வீட்டுக்கு ஒரு நிறைவைத் தரும்.வீ ட்டுக் குள் அவை வருவதும் வெளியே பறப்பதுமாக அவற்றின் புழக்கம்  குடும்பத்தில் ஒருவரைப் போல அன்னியோனியமாக இருக்கும்.சில வீட்டுக்காரர்கள் அவை களுக்காக சின்ன மண்பானையில் துளை போட்டு கூரையில் கட்டி வைப்பார்கள்.அதில் சிட்டுக்குருவி கூடுகட்டிக் கொள்ளும்.அந்தக் குருவிகள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டன ? யாருக்காவது தெரியுமா ?

                                                                  நினைவு -6
                               
                                                              பச்சைக் கிளிகள் 

பனைமரக் கூட்டங்களுக்கிடையே 'கீச்..கீச்' என்று கத்தியவாறு பச்சைக் கிளிகள் பறந்து திரியும். சுட்டிப்பயல்கள் பனைமரத்திலேறி பொந்துக்குள்ளி ருந்து கிளிக் குஞ்சு களை எடுத்து வந்து வளர்ப்பார்கள். அனேகமாக வீட்டுக் கொரு கிளி வளரும்.பனைமரங்கள் இப்போது வெறிச்சோடி நிற்கின்றன. கிளிகள் எங்கோ வேற்றிடம் தேடிப் போய்விட்டன.ஏன் இப்படி?



                                                                          நினைவு-7

                                                                      வண்ணத்துப்பூச்சி 




வசந்தகாலம் துவங்கியதும் ஊரெல்லாம் பூத்துக்கிடக்க எங்கிருந்தோ அணியணியாய் வந்து செடிக்குச்செடி பறந்து தெருவெல்லாம் திரிந்து தோளிலும் அமருமே இந்த அழகுப் பூச்சி ...இப்போது காணாமல் போய்விட்டதே ஏன் ? மறுபடியும் எப்போதாவது அது திரும்பி வருமா .....?
   


                                                                             நினைவு-8


                                                                              கூண்டு வண்டி 



கிராமங்களில் வீட்டுக்கு வீடு வாட்டசாட்டமான ஒரு ஜோடிக் காளைமாடுகள் கட்டாயம் இருக்கும்.உழவுக்கும் சுமை வண்டி இழுப்பதற்கும் மட்டுமல்லாது கூண்டு வண்டி என்று சொல்லப்பட்ட பயண வண்டியையும் இந்தக் காளைகளே இழுத்துச் சென்றன.இந்தக் கூண்டு வண்டியில் மெத்தை போடப்பட்டு மேலே அழகான வடிவங்கள் வரையப்பட்ட வண்ணத்துணி போர்த்தப்பட்டிருக்கும்.

தினமும் காலையிலும் இரவிலும் இந்தக் காளைகளுக்கு ஒரு பெரிய கல்தொட்டி யில் தண்ணீர் நிரப்பி அடுக்கியிருக்கும் மூட்டைகளிலிருந்து தவிட்டைப் பிரித்துக்கொட்டி குடிக்க வைப்பார்கள். பருத்திக்கொட்டை ,பிண்ணாக்கு வைத்து சாப்பிடச் செய்வார்கள்.காளைகளின் உடல் அளவும் தோற்றமும் உரிமையாளர்களின் கவுரவத்தையும் செல்வச் செழிப்பையும் பறைசாற்றுவதாக இருந்தன.இப்போது அந்தக் கல்தொட்டிகள் மட்டும் சற்றுத் தேய்ந்துபோன நிலையில் அங்கேயே கிடக்கின்றன.ஆனால் மாடுகளைக் காணவில்லை.காளைகள் நின்ற இடத்தில் டிராக்டர்களும் கூண்டு வண்டிகளின் இடத்தில் மோட்டார் சைக்கிள்களும் நிற்கின்றன.

                                            தொடரும் .....





'பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு பாரீன் பயணம்' படிக்க சொடுக்குக  
http://thenpothikai.blogspot.in/2012_07_01_archive.html












' மணிமாறன் மாமா சொன்ன கதை-3 'படிக்க சொடுக்குக 
http://thenpothikai.blogspot.in/2012/09/3.html



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக