வெள்ளி, 3 மே, 2013

ஒத்தைக்கு ஒத்தை வர்றியா...?







வெகுநாட்களுக்குப் பிறகு மணிமாறன் மாமாவை அண்மையில் சந்தித்தேன்.லேசான மப்பில் இருந்த அவர் தனது மனக்குமுறல்களை என்னிடம் கொட்டித் தீர்த்து விட்டார்.அதை நீங்களும் கேளுங்கள்.



' இப்பல்லாம் வாழ்க்கையே பெரிய போராட்டமாப் போயிருச்சிப்பா. ரேஷன் கடையில, கரண்ட்டு பில்லு கட்டற இடத்திலே , டிரெயின் டிக்கட் வாங்கப்போற இடத்தில இங்கதான முந்தில்லாம் கூட்டம் கியூ கட்டி நிக்கும்..? இப்ப டாஸ்மாக் கடையில போய்ப்பாரு.போனமா காசக் குடுத்தமா குவாட்டர வாங்குனமான்னு வரமுடியலப்பா....இடிச்சி மோதிக்கிட்டு நிக்கிறானுங்க...

முந்தில்லாம் என்ன பண்ணுவோம்..?கடைக்குப்போயி ஒரு எம்சி குடு, ஒரு ஓல்டு மங்கு குடு அப்பிடீன்னுதான கேப்போம்..?இப்ப அப்பிடிக் கேட்டுப் பாரு..கான்டாயிருவானுங்க.ஒரு எழுபத்தஞ்சி குடு, ஒரு எம்பத்தஞ்சி குடு அப்பிடீன்னுதான் கேக்கணும்.

ஒரு நாளக்கி ஒரு சரக்கு வருதுப்பா..இதெல்லாம் டாஸ்மாக்குக்கு சரக்கு கொள்முதல் பண்ணுற ஆபீசருங்க பண்ற வேலைன்னு பேசிக்கிறாங்க. கம்பெனிக்காரன்கிட்ட கமிஷன் வாங்கிக்கிட்டு அந்தந்தக் கம்பெனி சரக்க ஏத்திக்கிட்டு வந்துர்றாங்கன்னு சொல்றாங்க.அதுவும் உண்மையாத்தான் இருக்கும் போலருக்கு.

முந்தில்லாம் எப்படி இருந்திச்சு..? எம்சிக்கு ஒரு தனி ருசி.. ஜானெக்ஷாவுக்கு ஒரு தனி ருசின்னு இருந்திச்சு.அந்த ருசி பழகிப்போன மனுஷன் அதது பேரச்சொல்லித்தான் வாங்குவான்.இப்ப தெனத்துக்கு ஒண்ணா என்னென்ன கருமாந்திரத்தையெல்லாம் குடிக்க வேண்டியிருக்கு..? இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா..?அப்பல்லாம் ரெகுலரா ஒரு சரக்குக்கு பழகிப்போன வயிறு பிரச்சினை ஒண்ணும் பண்ணாம இருந்துச்சு.இப்ப தெனம் ஒரு எழவக் குடிக்கிறமா ..காலையில பாத்ரூம் போறதுல பிரச்னையா யிருக்கு.

அப்பல்லாம் தடுமன் புடிச்சா ஜானகஷாதாம்பா மருந்து.சுடுதண்ணி ஊத்திக் கலந்து அதுல கொஞ்சம் மிளகுத்தூளைப் போட்டு ஒரே மடக்குல குடிச்சுட்டோம்னா மறுநாள் காலைல தடுமன் எங்கே போச்சுன்னே தெரியாதுல .பேக்பைப்பர்,கோல்கொண்டா,ஓல்டு காஸ்க்கு,மெக்டோவல்னு அதுங்க பேரச்சொன்னாலே ஒரு தெம்பு வரும்.இப்ப பேர் சொல்ற மாதிரி எதாவது இருக்கா சொல்லு..?

சரி,அடுத்த விஷயத்துக்கு வா..

அப்பல்லாம் என்ன பண்ணுவோம்..?...ஒரு குவாட்டர்  வாங்குவோம் .ஒரு டம்ளர் வாங்குவோம் ..இரு..இரு ..இங்க இன்னொரு விஷயம் சொல்லிக்கிறேன்.ஆமா..,இந்த பிளாஸ்டிக் கப்ப எல்லாரும் கிளாஸ்,கிளாஸ்னு சொல்றாங்களே அது எப்பிடி..?கிளாஸ்னா என்ன..? கண்ணாடிதானே..? கண்ணாடிக் கிளாஸத்தானே கிளாஸ்னு சொல்லணும்.அதுனால நான் எப்பவும் டம்ளர்னுதான் சொல்றது...ம் ..ஒரு குவாட்டர் வாங்குவோம்,ஒரு டம்ளர் வாங்குவோம்,ஒரு வாட்டர் பாக்கட் வாங்குவோம்.அப்பிடி ஓரமா உக்காந்து குடிச்சுட்டுப் போவோம்.

இப்ப அப்பிடியா சொல்லு..? குவாட்டர வாங்கிகிட்டு எவனாவது தண்ணிப்பாக்கட்டுல மிச்சம் ஏதாவது வச்சிட்டுப் போயிருக்கானான்னு பாக்க வேண்டியிருக்கு..வேற என்ன பண்றது..? 35 காசு தண்ணிப் பாக்கட்டயும் டம்ளரையும்  பார்க்காரன் அஞ்சு  ரூபாய்க்குல்ல விக்கிறான்.பார்க்காரன்கிட்ட கொஞ்சம் பழகிப்பார்த்திங்கன்னாத் தெரியும்..,ஊர்ல அவன் பத்து லட்சத்துல புது வீடு கட்டிக்கிட்டிருக்கற விஷயம்..

அப்பல்லாம் வேலை முடிஞ்சி 10 மணிக்கு மேலதான் டாஸ்மாக்குக்குப் போகமுடியும். இருந்து மெதுவா குடிச்சிட்டு வருவோம்.இப்ப அது முடியுதா..?

மருத்துவர் ஒருத்தர் சொன்னாருன்னு இந்த மஞ்சத்துண்டுப் பெரியவர் பத்து மணிக்கு கடையை மூட வச்சாரு.அதனால பத்து மணிக்கு மேல யாரும் குடிக்காம விட்டுட்டாங்களா..? பார்க்காரனும் கடை சேல்ஸ்மேனும் கள்ளக் கூட்டணி போட்டுக்கிட்டு குவாட்டர் 120 ரூபாய்க்கு விக்கிறானுங்க. அதையும் வாங்கிக் குடிச்சுக்கிட்டுத்தானே இருக்கோம்..? குடிக்கிறதுல குறைவு இல்ல..எதுக்கு தேவையில்லாத செலவும் டென்ஷனும்னு கேக்கறேன்...இரு.. இந்த இடத்தில இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறேன் கேளு..

கேரளாவுக்குப் போயிருக்கியா நீ..? அங்க ஒம்போது மணிக்கு கடை மூடிருவாங்க.ஆனா ஒம்போது மணிக்கு வந்தவங்கள கடைக்கு உள்ள கூப்பிட்டுக்கிட்டு வெளிய மூடிருவாங்க.எல்லோருக்கும் சரக்கைக் கொடுத்து அனுப்பிவிட்டு பூட்டிருவாங்க.பிளாக்குல எல்லாம் விக்குறதில்ல .அது சட்டம். அடுத்த மேட்டருக்கு வருவோம்.

அப்பல்லாம் அறுபது ரூபா இருந்தாப் போதும்.ஒரு குவாட்டரு அடிக்கலாம்.சுருக்குன்னு இருக்கும்.இப்ப ஒரு நாளைக்கு ஒரு விலையால்ல  இருக்கு.கம்பெனிக்காரன் ஒரு விலை போட்டிருக் கான்,கடைக்காரன் ஒரு விலை சொல்றான்.சரக்கும் வடிவேலு சொன்னமாதிரி சப்புன்னு இருக்கு. பத்தாததுக்கு பார்க்காரன் கொள்ளை வேற. குறைஞ்சது நூறு ரூபா வேணும்பா. கையில காசு இருந்தா உத்தமம். இல்லேன்னா ஒண்டிக்கு ஒண்டிதான்.

ஒண்டிக்கு ஒண்டின்னதும் ஏதோ சண்டைக்குக் கிளம்பிடுவேன்னு நினைச்சி ராத..அது எங்க குடிமக்களுக்குள்ள ஒரு கோட்வேர்டு .அதாவது ஊர்ல ஏதாவது சண்டை வந்துட்டா 'ஒத்தைக்கு ஒத்தை போட்டுப் பார்ப்போமா..?' ன்னு சவால் விடுறது வழக்கம் தெரியுமில்ல..? இந்த 'ஒத்தைக்கு ஒத்தை', ' ஒண்டிக்கு ஒண்டி ' இதுக்கெல்லாம் அர்த்தம் என்னன்னு தெரியுமா..? 'நீ ஒருத்தன், நான் ஒருத்தன் .ஒருத்தனுக்கு ஒருத்தன் .மோதிப்பார்க்கலாமா? ' ங்கறதுதான் . அதுமாதிரி 'நீ ஒருத்தன்.உன்கிட்ட பாதிப்பணம். நான் ஒருத்தன்.என்கிட்டே பாதிப்பணம்.ரெண்டையும் சேர்த்து ஒரு குவாட்டர் வாங்கி  ஆளுக்கு ஒரு கட்டிங் அடிக்கலாமா..?' அப்படீன்னு ஜாடையாக் கேட்டுக்கிறதுதான் இந்த ஒண்டிக்கு ஒண்டி, ஒத்தைக்கு ஒத்தை இதெல்லாம்.

..' குடியாதவன் வீடு விடியாது ' ன்னு பழமொழி எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கியா..? இது பழமொழியில்ல..எங்க மக்களுக்குள்ள புழங்கற ஒரு புது மொழி.

இடையிலே ஒரு நாலு மாசத்துக்கு முன்னாலே டாஸ்மாக்கையே அம்மா மூடப்போறதா ஒரு புரளி கிளம்பிச்சு தெரியுமா..? நாங்கல்லாம் அப்படியே திகிலடிச்சுப் போயிட்டோம்.என்ன பண்ணப்போறோமுன்னே தெரியாம அரண்டு போயிட்டோம்.நல்ல வேலை, அம்மா அப்படியெல்லாம் செஞ்சிடலை.ஒரு வேலை அப்படிச் செஞ்சிருந்தாங்க ன்னு வையி...அடுத்த எலக்சன்ல நாங்க அவுங்களுக்கு ஓட்டுப்போட மாட்டோம். குடிக்காதீங்கன்னு புத்திமதி சொல்லி அவுங்க ஆளுங்க கிட்டேயே டாக்டர் வாங்கிக் கட்டிக்கிட்டது அவங்களுக்குத் தெரியாமயா இருக்கும்..?

குடிக்கிறதுக்கு இப்படிலாம் நாங்க படுற பாடு இருக்கே ..அப்பப்பா... போராட்டமாவே போச்சுப்பா.இந்த அம்மா எங்க மேல இரக்கப்பட்டு சரக்கு வெலையையும் பார்க்காரன் கொள்ளையையும் கொஞ்சம் கொறைச் சாங்கன்னா புண்ணியமாப்போவும்ப்பா...நாங்களும்தானே
ஓட்டுப்போட்டிருக்கோம் '.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக