ஞாயிறு, 24 நவம்பர், 2013

எங்கே இருக்கிறாய் நண்பா..?










நம் எல்லோருக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் பள்ளித் தோழர்கள் , பால்ய நண்பர்கள் மற்றும் முகநூல் நண்பர்களைத் தவிர்த்து விடுவோம். ஏனெனில் இவர்கள் எல்லாம் காலத்தின் கட்டாயமாக நம்மோடு இணைந்த வர்கள். நமது பயணத்தின்  வழியில் இடையில் சேர்ந்து கொண்ட   மற்ற நண்பர்களைப் பற்றித்தான் நாம் இங்கே பேசப் போகிறோம்.

இந்த  நமது நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் ..? எப்படி அவர்கள் நண்பர்களானார்கள்..?

கொஞ்சம் சிந்தித்தால் விநோதமாகத்தான் இருக்கிறது.

கல்லூரி விடுதியில் நண்பன் ஜெகதீசனுக்கும் எனக்கும் இடையே இருந்த தீவிர நட்பைப் பார்த்து மற்ற தோழர்கள் எங்களை ' Amigo friends' என்று அழைத்தார் கள். எங்களிடையேயும்  சண்டை உண்டாகும்  என்பதை நம்ப முடியாமல் சில சமயங்களில் எங்களுக்கிடையே நடக்கின்ற உண்மைச் சண்டைகளில் கூடத்  தலையிட மறுத்தார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னாள் ஒரு இரவில் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பியபோது வாகனம் எதுவும் இல்லாததால் யோகேஷ் என்கிற உடன் பணி புரிந்த ஒருவரை என்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏற்றி விட்டார்கள் நிர்வாகிகள்.அரை மணி நேரப் பயண நேரம் ஒரு நட்பு மலரப் போதுமானதாக இருந்தது.இன்றும் அவர் எமது நெருக்கமான நண்பர்.

எங்கள் பணியிடத்திற்கு அவ்வப்போது வந்து போகிற அப்துல்லா எம்மோடு பணி செய்கிற சரவணனின் பள்ளித் தோழர்.எப்போதும் ஸ்மார்ட்டாக உடையணிகிற அப்துல்லாவுக்கு அவரைப் போலவே பாந்தமாக ஆடை உடுத்துகின்ற என்னைப் பிடித்துப்போனது.பத்தாண்டுகளுக்கும் மேலாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

முதல் பயணமாகப் பாண்டிச்சேரி சென்றிருந்த சமயத்தில்  போக வேண்டிய இடத்துக்கு வழி தெரியாமல் நின்றிருந்தபோது கூடவே வந்து வீட்டில் விட்டுச் சென்ற ஒரு இளைஞன் நண்பனாகி பின்னால் அவன் சென்னைக்கு வந்தபோது எம் வீட்டுக்கும் வந்து சென்றான்.

ஒரு சுற்றுலாக் குழுவோடு சென்னைக்கு வந்திருந்த மலேசிய நண்பர் ராஜாவின் அழைப்பின் பேரில் அவரைப் பார்க்கச் சென்றபோது அந்தக் குழுவினரின் வாகனத்தில் எனக்கு அருகே அமர்ந்து இருந்த ராஜேந்திரன் சென்னையில் அவருக்குத் தெரிந்த ஒருவரைச்  சந்திக்க உதவி கேட்க அன்று மாலை அவரை அழைத்துச் செனறதன் மூலமாக அவர் நல்ல நண்பராகி அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

மற்றுமொரு மலேசியத் தமிழ்ப் பெண்ணான லலிதா வாரம் ஒரு முறை நீண்ட கடிதம் எழுதி விசேஷ நாட்களில் அன்போடு பரிசுகளையும் அனுப்பி வைக்கும் நல்ல தோழியாக இருந்தார்.

இலங்கைக்குச் சென்றிருந்தபோது நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகேயிருந்த மது பான விடுதியின் மேலாளர் ஜெயக்கொடி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்னைப் பார்த்து ' இன்னிக்கு பைன்டொன்னு இருக்குதானே ' என்று அழைப்பார்.[ பைன்ட் என்பது குவார்ட்டர் மாதிரி ஒரு அளவு ].

நாங்கள் அங்கேயிருந்த பத்து நாட்களில் நட்பு நெருக்கமாகி நாங்கள் ஊருக்குத் திரும்பியபோது நான் புதிய கேமரா வாங்கியதால் என்னிடமிருந்ததை அவரிடம் கொடுத்து விட்டு வருமளவுக்கு விரிந்தது.

 மதுரையிலிருந்து   ராமேஸ்வரத்துக்கு ரயிலில் சென்றபோது கூடப் பயணித்த சுவீடனைச் சேர்ந்த இளைஞ்ன் ' பீட்டர் பேரஷடிக் ' கோடு   பேச்சு ஏற்பட்டது. பட்ஜெட் சுற்றுலாப் பயணியான அவன் ராமேஸ்வரத்தில் தங்கும் அறைக் கட்டணத்தை இருவருமாகப் பங்கு போட்டுக்கொள்ள அழைத்தான்.அன்றைய  இரவுகளில் சுவீடனில் பனிக்காலத்தில் அவன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் பனியோடு பனியாகச் சுருண்டு கிடக்கின்ற கரடிகளின் மீது உட்கார்ந்த கதைகளைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவான்.  மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் இலங்கைக்குப் பயணத்தைத் தொடர்ந்தபோது கண்கள் கசிய விடை பெற்ற காட்சி  இன்னும் கண்களில் நிற்கிறது.

சிறிது காலம் கோவை நகரில் நண்பன்  மனோகரோடு தங்கியிருந்த போது  மனோகரின் நண்பன் கில்பர்ட் வார முடிவில் சம்பளம் வாங்கியதும் நேராக வந்து என்னை அழைத்துப்போய் சிலோன் ஹோட்டலில் பரோட்டா வாங்கித் தந்து சென்ட்ரல் தியேட்டருக்கு படம் பார்க்கக் கூட்டிப் போவான்.

மனோகரின் சகோதரி சாந்தியோ கொஞ்சமும் விகல்பமில்லாமல் என்னைத் தொடை மீது படுக்க வைத்து நகம் வெட்டி விடுமளவுக்கு தூய தோழியாயிருந் தாள்.

அரசுப் பணி நிமித்தமாக பொன்னமராவதி அருகே இருக்கின்ற புதூரில் சிறிது காலம் குடியிருந்தபோது அங்கே ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த , என்னை விடவும் பல வருடங்கள் இளையவனான குமார் நண்பனாகி நாளாவட்டத்தில் என்னை பங்காளி என்று அழைக்கும் அளவுக்கு உரிமை பெற்றுக் குடும்ப நண்பனான்.

இந்த நண்பர்களில் சிலர் இன்னும் எம்மோடு இருக்கிறார்கள்.மற்றவர்கள் எங்கே , எப்படி இருக்கிறார்கள்..? .என்ன செய்கிறார்கள்..? தெரிந்து கொள்ள விழைகிறது மனம்

இன்னும் நீள்கிறது நண்பர்கள் பட்டியல். வாசிக்கின்ற உங்களுக்கு சலிப்பு வந்து விடக்கூடாது என்று எச்சரிக்கிறது மனம்.அதனால் இப்போது விடை பெறுவோம்.மறுபடியும் சந்திப்போம்.

 .









2 கருத்துகள்: