வியாழன், 30 ஆகஸ்ட், 2012

நல்லா கேட்டாருயா கேள்வி


சில நாட்களுக்கு முன்பு  சென்னைக்கு வர ரயிலைப் பிடிப்பதற்காக தேவகோட்டையில் இரவு 9.30 மணிக்கு பஸ் ஏறினேன். பஸ் ஸ்டார்ட் ஆனதும்  சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் அவசரமாக அதைக் கீழே போட்டு மிதித்து விட்டு பஸ்சுக்குள் ஏறினார் .அவருக்குத் தெரிந்தவர் போலும் ஒருவர்,

' ஒரு சிகரெட் போச்சே' என்று ஏதோ சொன்னார் போலிருக்கிறது.' 

'அதனால என்ன ? இன்னொன்னு வாங்கிக்கிட்டா போச்சு.என்ன காசா இல்ல ?' 

என்று சொல்லியபடியே உள்ளே வந்தவர் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்தார். லேசாக அவரிடமிருந்து பழ வாசனை வந்தது.

' ஆமா, உங்களுக்கு என்ன ? பேங்குக் காரங்ககிட்ட காசுக்கா பஞ்சம் ..' 

என்று பின் பக்கம் அந்த தெரிந்தவரிடமிருந்து அடுத்த தாக்குதல் வந்தது. அவ்வளவுதான்.  சிகரட்டை இழந்தவர் கொதித்தெழுந்து விட்டார்


.' ஏம்ப்பா..பேங்குல வேலை செஞ்சா ..? ஆயிரம் ரூபாயும் ஐநூறு ரூபாயும் கட்டுக்கட்டா இருக்குன்னு தெனம் ஒன்னத் தூக்கி பாக்கட்டுல போட்டுக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கமா..? நாங்க பணத்த பாக்கத்தான் முடியும்.தொடத்தான் முடியும். பத்துக்காசு ஆனாலும் கணக்கு டேலி ஆனாத்தான் பேங்க விட்டு வெளிய வர முடியும்.சம்பளக்காசு மட்டும்தாய்யா நாங்க வாங்குறோம். உழைச்சு  சம்பாதிச்ச காசத்தான் செலவு பண்றோம்.பேசக் கிளம்பிட்டாய்ங்க ...'  என்று வறுத்தெடுக்க பின்னாலிருந்து சத்தமே இல்லை.

எதிர்த் தாக்குதல் எதுவும் இல்லாததால் சலிப்படைந்துபோனவர் என்னிடம் பஞ்சாயத்து சொல்லத் துவங்கினார்.நான் தலையாட்டிக் கொண்டே வந்தேன்.

கொஞ்ச நேரத்தில் பழ வாசனைக்காரருக்கு இன்னொரு பிரச்னை வந்து மாட்டியது.

காரைக்குடிக்கு 12 ரூபாய் டிக்கெட்டுக்கு கண்டக்டர் இரண்டு ரூபாய் சில்லறையாகக் கேட்டுச் சத்தம் போட, சில்லறை கொடுத்து டிக்கட்டை வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டே பேங்க்காரர் ஆரம்பித்தார்.

' ஏய்யா ..? இந்தச் சில்லரையை எல்லாம்  எங்க கொண்டுபோயி வைக்கிறீங்க? .சில்லரையா சேக்குறீங்க ..காலையில வரும்போது வெறும் பையோட வர்றீங்க.பிரைவேட் பஸ்ஸுதான்னு இல்ல.கவர்ன்மன்ட் பஸ்ஸுக்காரனும் காலையில வெறும் பையோடதான் வர்றான்.வாங்குற சில்லரை எல்லாம் எங்கதான் போகுது..? அட நீங்க மட்டும் இல்ல, திருப்பதி உண்டியல்லையும் பழனி உண்டியல்லையும் விழுகுற அவ்வளவு சில்லரையும்  என்ன ஆகுது.?..உருக்குறாய்ங்களா..? பேங்குலயும் நாங்க சில்லறைய வாங்கறதில்ல. அப்ப எங்கதாய்யா போகுது இந்த சில்லறை..? ஏன்சார் ,நான் கேக்குறது சரிதானே ..? '

நான் சரிதான் என்பதுபோல தலையாட்டி வைத்தேன்.வண்டி தேவகோட்டை ரஸ்தாவை நெருங்கும்போது ஏதோ நினைவு வந்ததுபோல அவர் என்னிடம் ஒரு விஷயம் கேட்டார்.

' சார். நான் டிக்கட் வாங்கிட்டேனா..? '

' ம் ,,வாங்கிட்டீங்களே .வாங்கி சட்டைப்பையிலே வச்சுட்டீங்க  பாருங்க.'

' நல்லவேளை .காப்பாத்தினீங்க [? ] சார். டிக்கட்  வாங்காமப் போயி அசிங்கமாப் போயிரும்ல. பின்னால இந்தப்பய பேச்சுக் குடுத்துக்கிட்டே வந்தானா [ ? ] ...அதான் லேசா மயங்கிட்டேன்.'

எப்படி இருந்தாலும் அவர் கேட்ட கேள்விகள் எல்லாமே சரியானதுதான் என்றே எனக்குத் தோன்றியது.அடுத்து அவர் பேச ஆரம்பிப்பதற்க்குள் தேவகோட்டை ரஸ்தா வந்துவிட்டது. பஸ் நிற்க நான் இறங்கிவிட்டேன்..அடுத்து பேங்க்காரர் பக்கத்து இருக்கையில் யார் வந்து உட்கார்ந்தார்கள் என்று தெரியவில்லை.





' இளைய ராஜாவிடம் கதை சொன்னேன் '...படிக்க சொடுக்கவும் 
http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_1294.html





இதையும் பாருங்கள் 

கே.பி.சுந்தராம்பாள்-அபூர்வ புகைப்படங்கள்


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக