செவ்வாய், 18 செப்டம்பர், 2012

மணிமாறன் மாமா சொன்ன கதை-3





சமீபத்தில் ஒருநாள் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது மணிமாறன் மாமாவுடன் பேசிக்கொண் டிருந்த சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.இரவு எட்டு மணியைப்போல் திடீரென்று சக்திவேல் மச்சான் பற்றி பேச்சு திரும்பியது.அவர்  இருட்டுக்கு பயப்படுவதைப் பற்றி மாமா சொல்ல ஆரம்பித்தார்.

' எல்லாத்திலயும் சூரப்புலிதான் இந்த சத்தி மச்சான்.ஆனா இருட்டக் கண்டா மட்டும் பயம். அது எப்பிடித்தான் அவருக்கு இப்படி ஒரு பயம் வந்துச்சோ தெரியலடா மாப்ள. பயம்னா அப்படி ஒரு பயம். இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேந்துரணும் அவருக்கு.வெளியூரு போற சமயங்கள்ல இதுக்காக அவரு படுற பாட்டையும் செய்யிற தந்திரங்களையும் சொல்லி மாளாதுப்பு. வெளியூருக் கதையை விடு. இங்கே உள்ளூருல அவரு அடிக்கிற கூத்த சொல்றேன் கேளு.

சத்தி மச்சானுக்கு அந்தா தெரியுது பாரு , மருதவயல் ..அதான் ஊரு.ஆனா சின்னப்புள்ளயில இருந்தே இங்க நம்மூருல அவரு மாமா வீட்டுலதான் வளர்ந்தாரு .இங்கேயேதான் இருப்பாரு. எப்பவாவது அங்கே  மருதவயலுக்கு போகணும்னா காலாகாலத்துல வேலையெல்லாம் முடிச்சுட்டு பொழுது சாயறதுக்குள்ள கிளம்பிடுவாரு.அப்படி அவரோட கணக்கையும் மீறி இருட்டிப் போயிருச்சின்னா அதுக்கும் ஒரு ஏற்பாடு பண்ணி வச்சிருந்தாரு.

மச்சான் அடிக்கடி மொச வேட்டைக்கு போறவரு. அதனால அவருக்கு நாய் ராசி இருந்திச்சி. வாயில ரெண்டு விரல வச்சி சீட்டி அடிச்சாருன்னா அது மருதவயல் வரைக்கும் கேட்கும். இந்த விஷயம்தான் அவருக்கு இக்கட்டுல கைகொடுத்துச்சி.

இவரோட சீட்டிச்சத்தம் கேட்டதும் நம்மூரு நாய்ங்க மட்டுமில்லாம மருதவயல் நாய்களும் பாய்ஞ்சு வந்து இவரைச் சுத்திக்கிட்டு நிக்கும்ங்க.ஒரு பத்து நாய்ங்க பின்னாடி வர மிலிடரி கமாண்டர் கணக்கா இவரு நடந்து ஊரு போய்ச்சேருவாரு .வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் ஓடுங்கன்னு விரட்டுவாரு .
எல்லாம் திரும்பி வீடு வந்து சேர்ந்துரும்.

ஆனா இருட்டா இருந்தாலும் துணைக்கு மட்டும் ஆள் இருந்தா இவரு பண்ற சேட்டை தாங்க முடியாது மாப்ள. ராத்திரி பத்து மணிக்கு மேல ரெண்டு மூணு பொடிப் பயலுகளைச் சேத்துக்கிட்டு வைக்கோல் பிரியை உடம்பு முழுக்கச் சுத்திக்கிட்டு அதுக்கு மேல துணியைச் சுத்திக்கிட்டு ஊருக்குள்ள வருவாரு பாரு. பேய், பூதம்னு நெனச்சி ஜனம் பூரா பயந்து அலறும்.

                                                                                       
                                                                                                                     
                                                                                                                              இன்று சக்திவேல் 

நம்ம செல்லக்கண்ணு அப்பு வீட்டுக்கு அவரு சொந்தக்காரன் ஒருத்தன் வந்திருந்தான். பய ஒரு அரை வேக்காடு. ஊர்ப் பயலுகள விட்டு அவனுக்கு எப்படியோ கலியாண  ஆசையை தூண்டி விட்டுட்டாரு நம்மாளு..ஒரு நாள் ராத்திரி ஊரே கூடி கல்யாணம்  நடந்துச்சி. பொண்ணு யாரு தெரியுமா ? நம்ம ஆளுதான்....என்ன முழிக்கிற..? சத்தி மச்சாந்தான்யா பொண்ணு. சேலை கட்டி ஜாக்கட்டு  போட்டு நெஜப்பொம்பிளை தோத்துச்சி போ ..ஆம்பிளையும் பொம்பிளையுமா சேந்து கல்யாண ஜோடியை ஒரு காலி வீட்டுக்குள்ள கொண்டுபோய் விட்டுச்சிங்க. விட்டுப்பிட்டு இருட்டுக்குள்ள மறைவா நிக்கிதுங்க. கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை கதவத் தொறந்துக்கிட்டு  விழுந்தடிச்சி ஓடிவர்றான் .' பொண்ணு ஆம்பிள , பொண்ணு ஆம்பிள' ன்னு கத்திக்கிட்டு .ஒரு மாசத்துக்கு ஊருல மக்களுக்கு இந்தப்பேச்சுதான்  பொழுதுபோக்கா இருந்திச்சு.

இந்த மாதிரி சேட்டைகள்னால நம்மாளுக்கு பொம்பிளைங்ககிட்ட ஒரு .மாசு இருந்துச்சி மாப்ள. ஒருநாள் சுப்பையா வீட்டுலயிருந்து ஒரே கூப்பாடாயிருக்கு. என்ன, ஏதுன்னு ஓடிப்போயிப் பார்த்தா சுப்பையா பொண்டாட்டி பிரசவ  வலி தாங்காம கத்திக்கிட்டிருக்கா  எப்பிடி ..?..' நான் அப்பவே வேணாம் வேணாம்னு சொன்னேனே .இந்தப் பாவி மனுஷன் கேட்டானா..?' அப்படின்னு புருசனத் திட்டிக்கிட்டிருக்கா.ஆனா நம்மாளப் பார்த்தா ஒரு மாதிரி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறாரு.

எனக்கு இன்னைக்கும் விளங்காத ஒரு விஷயம் என்னன்னா மாப்ள  ..,ராத்திரில ஒண்ணுக்குப் போறதுக்குக்கூட துணைக்கு ஆள் தேவைப்படுற நம்மாளுக்கு இந்த மாதிரி விஷயங்களுக்கு துணைக்குப் போனது யாரு..?






' மீனவர் பிரச்னை-ஒரு கசப்பான உண்மை ' படிக்க சொடுக்குக 
http://thenpothikai.blogspot.in/2012_10_01_archive.html






' வேதம் புதிது-ஒரு நினைவு கூர்வு ' படிக்க சொடுக்குக 
http://thenpothikai.blogspot.in/2012/10/blog-post_2.html













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக