சனி, 29 செப்டம்பர், 2012

என்ன ஒரு அற்புதம்..?




சில நாட்களுக்கு முன் சென்னையின்  புற நகர்ப் பகுதியில் பயணம் செய்ய நேர்ந்தது.ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் இயற்கையின் உந்துதலை
தனித்துக் கொள்வதற்காக வண்டியை நிறுத்தி விட்டு சாலையை விட்டு இறங்கினேன்.சில அடிகள்தான் நடந்திருப்பேன்.திடீரென்று காலுக் கடியிலிருந்து நீர் பீய்ச்சியடித்தது.

துடித்து விலகி குனிந்து தரையைப் பார்த்தால் புற்கள்தான் தெரிந்தன.குழம்பிப் போய் விட்டேன்.என்ன விந்தை இது ? புராணங்களின் நாயகர்கள் கால் பட்டதும் கல் பெண்ணானது போல ,...கால் பெருவிரலை அழுத்தியதும் பூமிக்குள்ளிருந்து நீரூற்று வெளிப்பட்டது போல எனக்கும் ஏதும் அமானுஷ்ய சக்தி வந்து விட்டதா..? சில நொடிகள் உண்மையில் திகைத்துத்தான் போய்விட்டேன்.

 இருந்தாலும் சட்டென்று விழித்துக் கொண்ட பகுத்தறிவு புற்களுக்குக் கீழே தோண்டிப் பார்க்கச் சொன்னது. தோண்டினேன்.அங்கே ....சிறிதளவு மட்டும் பயன்படுத்தப்பட்ட ஒரு தண்ணீர் பாக்கெட் புதைந்து கிடந்தது. எனது பாதம் அதன் மீது பட்டு அழுத்தியதும் அதனுள்ளிருந்த தண்ணீர் வேகமாக வெளிப்பட்டிருக்கிறது.

புராண காலத்தை விட இந்தக் காலத்தில் அற்புதங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன ...இல்லையா..?






சில நாட்களுக்கு முன்பு ஒரு அலுவல் காரணமாகத் தர்மபுரிக்குச் சென்றிருந்தோம்.மாலை ஐந்து மணிக்குள் வந்த வேலை முடிந்து விட்டது.சென்னைக்கு 10.00 மணிக்குத் தான் பேருந்து என்பதால் பொழுது போகாமல் அரசு மருத்துவமனையைச் சற்று நேரம் சுற்றி வந்தோம்.அப்போது ஒரு வித்தியாசமான காட்சியைக் காண நேர்ந்தது.

இரண்டு முழங்கால்களிலும் கட்டுப்போட்ட ஒரு சிறுவனைக் கூட்டிக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார் சிறுவனின் தந்தை.கொஞ்ச தூரம் சென்றதும் சட்டென்று சிறுவனை ஒரு மறைவான இடத்துக்குக் கூட்டிச் சென்றவர் மள  மளவென்று சிறுவனின் கட்டுகளைப் பிரித்தெறிந்தார்.

அந்த ஆள் எதோ தில்லு முல்லு  செய்கிறார் என்று சந்தேகப்பட்ட நாங்கள் சத்தம் போட்டோம்.திகைத்துப் போன அவர் எங்களிடம் வந்தார்.

' சார்.கால்ல சின்ன சிராய்ப்புதான் சார்.எதோ கணக்கு எழுதுதறதுக்கு
இவ்வளவு பெரிய கட்டப் போட்டு வுட்டுட்டாங்க சார். இவனப் பெத்தவ இப்படிக் கட்டோட பாத்தான்னா துடிச்சுப் போயிடுவா சார்.அதான்
பிரிச்சுட்டேன் ' .என்றார் அவர்.

நாங்கள் இளகிப் போய்விட்டோம்.

மருத்துவமனை ஊழியர்களுக்கு கடமை பெரிதாக இருக்கலாம்.ஆனால் ஒரு குடும்பத் தலைவனுக்கு பொறுப்பு தானே பெரிது.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக