வெள்ளி, 4 மே, 2012

கவிதை

பட்ட மரத்துக் குருவி 



மாதம் இருமுறை 
கிராமம் நோக்கிய பயணத்தில் 
பேருந்தில் ஏறியதும் 
கூடவே வந்து அமர்ந்து கொள்கிறது 
அந்த குருவியின் நினைவு 
வெளிச்சத் தூறல்கள் மெலிதாய் 
விழுந்து பரவுகின்ற காலைகளில் 
கிராமத்து வீட்டின் மேற்கு வேலியில்
ஒடிசலாய் நெடிது நிற்கின்ற 
பட்ட மரத்தின் கிளை மீது வந்தமர்ந்து 
வாலை முடுக்கி முடுக்கி 
பாடத் தொடங்கி விடுகிறது
பெயர் தெரியாத அந்தக்குருவி 

கவனிக்கப் படுவதை உணர்ந்ததாலோ என்னவோ 
சடுதியில் மாறுகின்ற மெட்டுகள் 
வியப்பிலும் வியப்பு.

பல மாதங்களாய்த்

தொடர்கிறது இந்த நிகழ்வு .


பட்டமரப் பாட்டரங்கம் 
குருவிக்கு வழமையா...
அல்லது 
என் வருகையுணர்ந்து வந்து 
அது காட்டும் தோழமையா...?
எப்படித் தெரிந்து கொள்வது !  






                                                                        அந்த மரம்







ஒற்றைத் தென்னை

ஆசையாய் நட்ட கன்றுகள் 
ஒவ்வொன்றாய் மடிய 
வாழ்ந்தே தீருவேன் என்று வைராக்கியமாக 
துளிர்த்து நின்றது ஒன்றே ஒன்று.
என்றோ சில நாட்களில் 
கடலை மிட்டாய் கையூட்டுப் பெற்ற 
சிறுவர்களோடு தூரத்து வாய்க்காலிலிருந்து 
சிறு குடங்களில் நீர் மொண்டு வந்து 
வார்த்தது நினைவிருக்கிறது.
அப்போதெல்லாம்..
பின்னிரவு அருகாமைகளில் 
ஒற்றைத் தென்னையின் வறண்ட பெருமூசுகளை 
உணர முடிந்தது.
அதன் பின் நிகழ்ந்தது புலம் பெயர்வு 
எப்போதாவது...
அந்த வழியே வந்து போகின்ற 
மேகங்களின் மேலோட்டமான நட்போடு 
பொட்டல் வெளியில் தன்னந்தனியே நின்று 
போராடி வளர்ந்தது அது.
பிடிவாதமான அந்த உயிர்ப் போராட்டத்தை 
தூரத்தில் இருந்தபடி 
விசாரிக்க மட்டுமே முடிந்தது.
வறுமையோடு வளர்ந்து ...பூப்பூத்து..மொட்டாகி..காயாகி..
இளநீர் இனித்தபோது 
ஒற்றைத் தென்னைக்கு எம்மீது 
கோபம் எதுவுமில்லை என்ற நிம்மதி பிறந்தது.
இப்போதெல்லாம்..
மாதம் இருமுறை கிராமம் போகையில் 
பக்கத்து வீட்டு இரைப்பானிளிருந்து
நீளக்குழாய் இணைத்து 
மண்ணும் தென்னையும் விழுங்க விழுங்க 
நீர் விடுவதுண்டு.
அன்றைய இரவுகளில் ஒற்றைத் தென்னையின் 
உற்சாக ஓலம் நிசப்தமாக 
என் படுக்கையறை வரையில் கேட்கிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக