திங்கள், 1 அக்டோபர், 2012

கோட்டாவின் சேட்டைகள்





கோட்டா சீனிவாச ராவ் .

முகத்தின்  தசைகள் துடிக்க ஆக்ரோஷமாக வசனம் பேசி இவர் வில்லத்தனம் செய்வதைப் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆவேஷ  நடிப்புக்குப் பின்னால் ஒரு உண்மையான வில்லத்தனம் இருப்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சொல்கிறேன் கேளுங்கள்.

தெலுங்கு மொழிக்காரரான கோட்டாவுக்குத் தமிழ் தெரியாது.ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தாலும் தமிழைக் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள கொஞ்சமாவது முயற்சியும்  செய்ததில்லை.படப்பிடிப்பில் தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிக்கொண்டு அசிஸ்டென்ட் டைரக்டரிடம் வசனத்தின் அர்த்தத்தையும் உச்சரிப்பையும் காட்சியின் தன்மையையும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

அமைதியாக உட்கார்ந்து எழுதிக்கொண்ட வசனத்தை படித்துக் கொண்டிருப்பார். ' சரி,பிரச்னை இல்லை .டேக்குக்குப் போகலாம் ' என்று முடிவு செய்து  கடைசியாக ஒரு மானிட்டர் பார்ப்போம். மானிட்டரில் பொசிசனில் இருப்பாரே தவிர வசனம் எதையும் பேசமாட்டார்.' ஒ கே ..ஒ கே ..டேக் ,,டேக்' என்பார்.

கேமரா ஓட ஆரம்பித்ததும் அவர் பேசவேண்டிய நேரம் வரும்போது அவர் வாயிலிருந்து வசனங்கள் தெரித்து வந்து விழும்.ஆனால் வந்து விழுபவை தமிழ் வசனங்களாக இருக்காது.தெலுங்கு வசனங்களாகத்தான் இருக்கும். அசிஸ்டன்ட் டைரக்டரின் உழைப்புக்கும்  முயற்சிக்கும் மதிப்பே இல்லாமல் போய்விடும். இது பழகிப் போனதால் இயக்குனர்களும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

அதற்க்குக் காரணம் கோட்டாவுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் ராஜேந்திரனின் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை.தமிழ் பேச வராத தன தவறை மறைப்பதற்காக லிப் மூன்மென்ட் தெளிவாகத் தெரியாதபடி முகத்தை அஷ்டகோணலாக்கி அங்கும் இங்குமாகத் திருப்பி கோட்டா தெலுங்கில் பேசியிருப்பதை தமிழில் சின்க் செய்வதற்காக டப்பிங்கில் ராஜேந்திரன் படுகிற பாடு  பார்ப்பவர்களுக்குத்தான்  தெரியும்.

இவ்வளவு சிரமத்திலும் கோட்டா தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் இந்தச் சிரமங்களை நம்மவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அது நமது பிறவிக்குணம் இல்லையா..?

இன்னொரு உண்மை தெரியுமா உங்களுக்கு..? வெகு சிலரைத் தவிர தமிழ்த் திரையின் வெற்றிகரமான பின்னணிப் பாடகர்கள் எல்லோருமே தமிழ்ப் பாடல்களை வேற்று மொழியில் எழுதிக்கொண்டு பாடுகிறவர்கள் தான். இத்தோடும் இல்லை. தமிழை மென்று துப்புவதற்ககென்று மும்பையிலிருந்து வேறு பாடகர்கள் இங்கே விமானக் கட்டணம் கொடுத்து அழைக்கப் படுகிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அல்லவா இது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக