வெள்ளி, 7 டிசம்பர், 2012

மீனாம்பாள் ஆத்தா -சிறுகதை




இன்று காலை மீனாம்பாள் ஆத்தா இறந்து விட்டதாக ஊரிலிருந்து போன் வந்தது.  முகேஷ்தான் போன் செய்தான். 

சில நாட்களுக்கு முன் கிராமத்துக்குப் போயிருந்தபோது ஆத்தா உடல்நிலை மோசமாக இருப்பதாகக்  கேள்விப்பட்டு போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.உடல் வற்றிப்போய் எலும்புக் கூடாகப் படுத்திருந்தது ஆத்தா. பேசுவதற்கு தெம்பில்லை.அந்த நிலையிலும் என் பிள்ளைகளைப் பற்றித்தான் ஆத்தா விசாரித்தது.

ஆனால் ஆத்தா எந்தப் பிள்ளையைப் பற்றி விசாரித்ததோ அந்தப் பிள்ளை வளர்ந்ததுக்கப்புறம் இதுவரையிலும் ஆத்தாவைப் பார்த்ததே இல்லை. என்னமோ தெரியலை. ஆத்தாவின் ஆசை கடைசி வரை நிறைவேறவே யில்லை. அந்தக் கொடுப்பினை என் பிள்ளைகளுக்கும் கிடைக்கவில்லை.

' எல்லாருமா வந்திருந்து ஆத்தாவை நல்லபடியா தூக்கிப் போட்டுறுங்கப்பா 'என்று அப்போது ஆத்தாவின் மகன் திருப்பதி என்கிட்ட சொன்னார்.

'எப்படியும் வந்து விடுவேன் ' என்று சொல்லிவிட்டு முகேஷிடம்  என்னுடைய போன் நம்பரைக் கொடுத்துட்டு வந்திருந்தேன்.ஆத்தாவோட உயிர் பிரிஞ்ச உடனேயே முகேஷ் போன் செய்து விட்டான்.

மீனாம்பாள் ஆத்தா நல்ல செவப்பா அழகா இருக்கும். ஆத்தானாலே எனக்கு முதலில் மீன்குழம்புதான் நினைவுக்கு வரும்.ஆத்தா செய்யும் மீன்குழம்புக்கு அப்படி ஒரு சுவை.எங்க தாத்தா முத்துவேல் அம்பலம் ஆத்தா மேல மயங்கிப் போய்க் கிடந்தார்னா  அதுக்கு ஆத்தாவோட அழகு மட்டும் காரணமில்லை. சமையலும் ஒரு காரணம்.

எங்க அம்மாவோட அப்பாதான் அந்தத் தாத்தா  தாத்தா நாட்டு அம்பலம். அந்தக் காலத்துல தாத்தா அனுமதி கொடுத்தாத்தான் போலீஸ் ஊருக்குள்ள வரும்.தாத்தா தெம்போட இருந்த வரையில அந்தப் பகுதியில கோர்ட்டு, கேஸுன்னு யாரும் போனதில்லை. எந்தப் பிரச்னை யானாலும் தாத்தாவே தீர்த்திடுவார் .

கொஞ்ச வருஷத்துக்கு முன்னால தாத்தாவோட ஊருக்கு முதன்முதலா போலீஸ் ஸ்டேஷன்  வந்திருந்த சமயம்.ஒருநாள் தாத்தா ஊர்ப்பக்கம் போயிருந்த போது பின்னாலிருந்து யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டுச்சு. என்னன்னு திரும்பிப் பார்த்தா ஒரு போலீஸ்காரர்

' ஒண்ணுமில்ல தம்பி. இந்தாப் போற பையன்தான் தூனா மூனா அய்யாவோட பேரன்னு ஒருத்தர் சொன்னாரு.அதான் அய்யாவோட  பேரனப் பார்த்துரு வோம்னு ஓடி வந்தேன் ' அப்படின்னாரு.

அந்த அளவுக்கு தாத்தா ஒரு லெஜண்டா இருந்தாரு  .இப்பவும் ' முத்துவேல் நகர் ' னு அவர் பேர்ல ஒரு ஊர் இருக்கு.

தாத்தா வீடு எப்பவும் ஜேஜேன்னு இருக்கும்.அப்ப அதான் ஏரியாவிலேயே பெரிய வீடுங்கறதால பங்களான்னுதான் சொல்லுவாங்க.தெனமும் பந்திதான். பக்கத்துல கடற்கரையிலயிருந்து யாராவது நண்டு மீனு கொண்டு வந்துருவாங்க.நண்டக் கழுவி மீன நறுக்கி ஆத்தா அவ்வளவு பேருக்கும் முகம் சுளிக்காம சமைச்சுப் போடும்.ஆத்தா வைக்கிற மீன் குழம்புக்காகவே ஒரு குரூப்பு தெனமும்  சீட்டுக் கச்சேரிக்கு தாத்தாவுக்கு கைசேர வந்திரும்.

நான் அப்ப ஹை ஸ்கூல் படிச்சுக்கிட்டுருந்தேன். சனிக்கிழமை மத்தியானமே எவனாவது தாத்தா ஊர்க்காரன் சொல்லிருவான்

.' உங்க தாத்தா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாருடா ' ன்னு.

சாயந்திரம் பாம்பாறு தாண்டி தாத்தா ஊருக்குப் போனா ரெண்டு நாளைக்கு மீனாம்பாள்  ஆத்தா கைமணம்தான்.

தாத்தா ஊர்ல இன்னொரு விசேஷம் சொல்லியே ஆகணும்.அக்ரகாரத்துல ஒரு பையன் ஒரு சின்ன டப்பா புரொஜக்டர் மெசின வச்சி அதுல ஒரு அடிநீளப் பிலிம் ரோலைப் போட்டு படம் காட்டிக்கிட்டிருந்தான்.. படம் பார்க்க டிக்கட் பத்துகாசு இல்லேன்னா நாலு புளியம்பழம் . பிற்காலத்தில அரசாங்க வேலையைக் கூட மதிக்காம கோடம்பாக்கத்தை நோக்கி என்னைத் துரத்தின சினிமா ஆசைக்கு இங்கதான் விதை போடப்பட்டிருக்கணுங்கறது என்னோட ஒரு கணக்கு.

வைகாசி மாசம் தாத்தா ஊர்லயிருக்கற பெரிய சிவன் கோவில்ல  பதினஞ்சு நாள் திருவிழா நடக்கும்.சுத்துப்பட்டு முப்பத்தியிரண்டு கிராமமும் அங்கதான் இருக்கும்.பதினஞ்சு நாளும்  சொந்தக்காரப் பயலுக எல்லாம் தாத்தா வீட்டுல கேம்ப் போட்டுருவோம். அங்கேயிருந்து தான்  ஸ்கூலுக்குப் போவோம்.

ஸ்கூல்லயிருந்து வரும்போது பாம்பாத்துல திருவிழாவுக்கு வியாபாரத் துக்குப் போற மாம்பழ வண்டிங்கள இழுக்க முடியாம மாடுங்க திணறிக்கிட்டு நிக்கும்.வண்டிக்காரர் வண்டியைத் தள்ளிவிடச் சொல்லி எங்களைக் கூப்பிடுவார். வண்டியைத் தள்ளி விடுற மாதிரியே வண்டிக்குள்ள கையை விட்டு மாம்பழத்தை எடுத்து பைக்குள்ள போட்டுக்குவோம்.

தேரோட்டமும் தெப்பமும் முடிஞ்சதுக்கப்புறம்தான் அவுங்கவுங்க ஊருக்குப் போவோம்.பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் , கரகாட்டம் இதெல்லாம் ஆடுறவங்க எங்க தாத்தாவோட இன்னொரு வீட்டுலதான் தங்கியிருப்பாங்க. அவங்க எனக்கு குடுக்கற மரியாதையில எனக்கு கொஞ்சம் தலை கனத்துப்போயிருந்தது உண்மைதான்.

இந்தப் பதினஞ்சு நாளும் மீனாம்பாள் ஆத்தாவுக்கு சமைச்சுப் போட்டு மாளாது.ஆத்தா சமையல்ல மட்டும் இல்ல ..பேச்சுலயும் எக்ஸ்பர்ட்டுதான். பசும்பொன் படத்தில ராதிகா பேசுமே அதேமாதிரி ஆத்தாவும் சொலவடையும் எசப்பாட்டும்  நையாண்டியும் நக்கலுமா எடுத்துக்கட்டி பேசுச்சுன்னா  நாங்க எல்லாம் சுத்தி உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்போம்.

தாத்தா நல்லாத் தண்ணியடிப்பாரு.எங்க அப்பா கூட ஒருநாள் சொன்னாரு

' டேய் ..தாத்தா மஞ்சள் கலர்ல  எதுவும் குடிக்கச் சொல்லி தந்தார்னா  குடிச்சிராதே ' அப்படின்னு .

பக்கத்துல சிலோனுக்கு அடிக்கடி வியாபாரத்துக்குப் போற ராவுத்தருங்க வெளிநாட்டுச் சரக்கு கொண்டு வந்து கொடுப்பாங்க.ஆத்தாவ மீனும் கறியும் வறுக்கச் சொல்லி கூட்டாளி சேத்துக் குடிச்சுட்டு போதையில ஆத்தாவையே போட்டு அடிப்பாரு தாத்தா. அதுக்குக் கூட ஏதாவது சொலவடை சொல்லி ஆத்தா காமெடி பண்ணும்.

அப்படிப்பட்ட ஆத்தா இன்னிக்கு செத்துப்போச்சு. இப்போது நான் கிளம்ப வேண்டும்.ஆனால் எப்படி..?  ஊரிலிருந்து வந்து மூன்று நாள்தான் ஆகிறது. நாளையிலிருந்து மூணு நாள் ஒரு டாகுமெண்டரி படம் ஷூட்டிங் ப்ளான் பண்ணியிருக்கோம்..

ஊருக்கு போன் போட்டு என் தம்பியையும் அவன் பொண்டாட்டியையும் போகச் சொன்னேன்.எங்க நிலத்துக் குத்தகைதாரர்கிட்ட  பணம் வாங்கிக்கச்  சொன்னேன்.அப்புறமா என் வேலையை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். சாயந்திரமா மறுபடி போன் போட்டு விசாரிச்சேன்.ஆத்தா காரியம் எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொன்னாங்க.அப்புறமாத்தான் மனசுல லேசா உறுத்த ஆரம்பிச்சிச்சு...

' ஆத்தாவைத் தூக்கிப் போடப் போயிருக்கணுமோ....'

ஊட்டி வளர்த்த ஆத்தா.சொந்த ஆத்தாகூட அப்படி வளர்த்திருக்குமான்னு சொல்ல முடியாது. ஆமா..மீனாம்பாள் ஆத்தா எங்களோட சொந்த ஆத்தா இல்ல.எங்க தாத்தா சேத்து வச்சிக்கிட்டது. பதினெட்டு வயசில ரெட்டைச் சடையோட செக்கச்செவேல்னு சுறு சுறுன்னு திரிஞ்சுக்கிட்டிருந்த பொண்ணை  தாத்தா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டாராம்.தாத்தாவ எதுத்துக் கேக்க ஆளில்லை.அப்ப தாத்தாவுக்கு கல்யாணம் ஆகி பத்து வயசுல எங்க மாமாவும் ஏழு வயசுல எங்க அம்மாவும்  இருந்திருக்காங்க .எங்க உண்மையான ஆத்தா அத்தோட அப்படியே பண்ணை வீட்டுக்குள்ளயே முடங்கிட்டாங்களாம்.

தாலி கூடக் கட்டிக்காம கடைசி வரையில தன கூட  வாழ்ந்த மீனாம்பாள் ஆத்தாவுக்கு தாத்தா ஒரு புள்ளையைக் கூடக் கொடுக்கலை. தாத்தா செத்ததுக்கப்புறம் மீனாம்பாள் ஆத்தாவோட அக்கா மகன் திருப்பதி ஆத்தாவைக் கூட்டிக்கிட்டுப் போயி தன வீட்டுல வச்சுக்கிட்டாரு .இப்ப வரைக்கும் அவருதான் ஆத்தாவைப் பாத்துக்கிட்டாரு.திருப்பதியோட மகன்தான் போன்ல எனக்கு ஆத்தா செத்துப்போன தகவல் சொன்ன முகேஷு.

ஆனா எங்க அம்மாவும் நானும் என்னோட தம்பி தங்கச்சிகளும் ஆத்தா எங்க மேல அள்ளிக்கொட்டுன  பாசத்தை மறக்கலை.எந்த விஷேசமானாலும் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து வச்சித்தான் அனுப்புவோம்.அப்பப்ப போயி பார்த்துக் கிட்டுருந்தோம்.செலவுக்கு எதோ கொஞ்சம் பணம் கொடுத்துக் கிட்டிருந்தோம்.

அந்த ஆத்தாதான் இப்ப செத்துப்போச்சசு. நான் போகலை. ஒருவேளை செத்துப்போனது சொந்த ஆத்தாவா இருந்திருந்தா  போயிருப்பேனோ... உண்மை மனசுக்குள் நெருப்பாய்ச் சுட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக