திங்கள், 24 டிசம்பர், 2012

கும்கி VS கொம்பன்




தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைந்து விட்டாலே கோவில் யானைகளுக்காக ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் ஒன்று நடைபெறுவது வழக்கமாகி விட்டது. அப்படி ஒரு முகாமை நேரிடையாக நெருக்கமாக மிக விசாலமாக காணும் ஒரு வாய்ப்பு இந்த ஆண்டு கிடைத்தது.

முகாமினை ஆவணப் படமாகத தயாரிப்பதற்காக நாங்கள் அங்கே  சென்றிருந்தோம். அது ஏனென்று தெரியவில்லை வழக்கமாக முதுமலை
தெப்பக்காட்டில் நடக்கின்ற முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

மேட்டுப்பாளையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தேக்கம்பட்டி கிராமத்தின் அருகில் காட்டுக்குள் பவானி ஆற்றின் கரையில் அமைந்திருந்தது முகாம்.அதுதான் சில பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்து விட்டது.பிரச்னை என்னவென்று கடைசியில் சொல்கிறேன். முதலில் யானைகளைப் பற்றிப் பேசிவிடுவோம்.

குளியல், நல்ல சாப்பாடு, நடைப்பயிற்சி, மருத்துவப் பரிசோதனைகள் என்று யானைகள் படு உற்சாகமாக இருந்தன.மனிதர்களைப் போலவே யானைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவையாக இருக்கின்றன. சாந்தம் , கோபம் , கொடூரம் , போக்கிரி , காமெடி ..இப்படி.

பல யானைகள் பொதுவாக ஒரு வினோதமான சேட்டையைச் செய்கின்றன. வேற்று மனிதர்கள் தன அருகே வந்தால் அவர்கள் மீது துதிக்கையால் எச்சிலை ஊதி அடிக்கின்றன.அல்லது சிறு கற்களை எடுத்து வீசுகின்றன. இந்தக் கல்லால் அடிக்கும் விஷயத்தில் முகாமிலுள்ள பாகன்களால் சிறப்பான பயிற்சி [ ? ] அளிக்கப்பட்டு படவேடு லட்சுமி யானை எக்ஸ்பர்ட்டாக இருக்கிறது.

ஆனால் யானைகளை விட யானைப் பாகன்களே இங்கே எழுதப் பட வேண்டிய விஷயமாக இருந்தார்கள். தும்பிக்கைகளை நீட்டி யானைகளை யாசகம் வாங்க வைத்த பாகர்களையே பார்த்திருந்த நாம் இங்கே அவர்களின் இன்னொரு பரிமாணத்தைப் பார்த்தோம்.அந்தப் பரிமாணம் பிரமாண்டமான அந்த விலங்குக்கும் அவர்களுக்கும் இடையில் நிலவிய அமானுஷ்யமான  பாசப் பிணைப்பு,

திருவானைக்கோவில் யானை அகிலாவின் பாகன் அர்ஜுன்.

ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளின் பாகன் சிவ ஸ்ரீதரன்.

படவேடு லட்சுமி யானையின் பாகன் ரங்கன் .

இவர்கள் மூவரும் எங்களை அதிகம் கவனிக்க வைத்தார்கள்.அர்ஜுன் காபி குடித்தபோது அகிலா அதைக் கேட்டு வாங்கிக் குடித்தது. பாகன் ரங்கன் எங்கள் முன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அது பிடிக்காத லட்சுமி யானை பின்னாலிருந்து துதிக்கையை நீட்டி பிளிறியபடி தன்னிடம் வந்துவிடும்படி ரங்கனை இழுக்க முயற்சித்தது.

அர்ஜுன் ஒரு விஷயம் சொன்னார்.....' இந்த அரை டம்ளர் காபியைக் குடித்து இந்த அகிலாவின் வயிறு நிறைந்து விடப் போறதில்லை. அதுக்காக
வொன்னும் நான் இந்தக் காபியைக் கொடுக்கவில்லை.ஆனால் நான் குடிக்கிற காபியில பங்கு போட்டு அதுவும் குடிக்கும்போது எங்களுக்குள்ள இருக்கற அன்னியோன்னியம் இன்னும் அதிகமாவுது.அதான்.'

ஆஜானுபாகுவாக இருந்த ஆண்டாளோ தன உருவத்துக்குச் சற்றும் பொருந்தாமல் படு சாந்தமாக இருந்தது. ஆண்டாளுக்கும்  அதன் பாகன் சிவ ஸ்ரீதரனுக்கும் இடையே ஸ்ரீதரனே சொன்னது போல ஒரு தகப்பனுக்கும் மகளுக்குமான உறவு நிலவுவதை நாங்களே பார்த்தோம்.அதனால்தானோ என்னவோ ஸ்ரீதரனின் கையில் பெரும்பாலும் அங்குசம் இருக்கவில்லை.

மிகப் புத்திசாலியான ஆண்டாளைப் பற்றி சிவ  ஸ்ரீதரன் சொன்ன விஷயங்கள் மலைக்க வைத்தன.அவையெல்லாம் பிறகொரு தனிக் கட்டுரையாக எழுதப்பட வேண்டிய விஷயங்கள்

இப்போது முகாம் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

ஒரு தொலைதூர ராணுவ முகாமின் நடவடிக்கைகளைப் பார்க்கின்ற வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் கேள்விப்பட்டிருக்கிறோம்.அப்படிக் கேள்விப்பட்ட அனைத்தையும் இந்த ' யானைகள் சிறப்பு நலவாழ்வு  முகாமி'ல் நாங்கள் கண்டோம்.

முகாம் எந்நேரமும் சுத்தம் செய்யப் பட்டுக் கொண்டே இருந்தது.திறந்த வெளி இருப்பிடங்களில் இருந்த யானைகள் சுத்தமான பிராண வாயுவை நுகர்ந்தன. யானைகளுக்கான உணவுகள்  புத்தம் புதியதாக தனிக் கூடாரத்துக்கு வந்து இறங்கிக் கொண்டேயிருந்தன. மரங்களில் பொருத்தப் பட்டிருந்த 12 க்கும் மேற்பட்ட  கேமராக்கள் யானைகளை எந்நேரமும் கண்காணித்தபடி இருந்தன.இரவுகளில் பிரகாசமான விளக்குகள் ஒளிர்ந்தன.

ஆற்றின் இக்கரையிலும் அக்கரையிலும் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கோபுரங்களைப் பற்றி விசாரித்தோம்.அது காட்டு யானைகளைக் கண்காணிப்பதற்காக என்று சொன்னார்கள்.அப்போது அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்துவதற்கான நேரம் ஒன்று பிறகு வந்தது. அதை கடைசியில் சொல்கிறேன்.

யானைப்பாகர்களுக்கு டிஷ் ஆண்டெனா டிவி இணைப்போடு கூடிய நல்ல கூடாரங்கள் இருந்தன.லேட்டஸ்ட் சின்டெக்ஸ் மொபைல் டாய்லட் இருந்தது.டென்னிஸ் கோர்ட் இருந்தது.யானைகளுக்கு மட்டும் இல்லாமல் பாகர்களுக்கும் மருத்துவ முகாம்கள் இருந்தன.பெரிய ஜெனரேட்டரும் கட்டுப்பாட்டு அமைப்புகளும் 24 மணி நேர மின்சாரத்தை வழங்கின.

பெரிய உணவுக்கூடம் இருந்தது.சாப்பாட்டு மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.குளிர்ந்த அல்லது சூடாக எப்படி வேண்டுமானாலும் குடிநீர் எடுத்துக்கொள்ளும் வகையில் தானியங்கி எந்திரம் இருந்தது.புதிய , நவீன சமையலறைச் சாதனங்கள் இருந்தன.சமையல் பணியாளர்கள் சுத்தமாக சுகாதாரமான முறையில் உடை அணிந்திருந்தார்கள்.குறிப்பிட்ட சரியான நேரங்களில் மூன்று வேளை உணவும்  தேநீரும்  வழங்கப்பட்டது.

முதலமைச்சருக்கு யானைகள் நல்வாழ்வு முகாம் நடத்துவதில் இருக்கின்ற ஆர்வத்தை அனுசரித்துத்தான் அதிகாரிகளும் அலுவலர்களும் இவ்வளவு கவனத்துடன் செயல்படுகிறார்கள் என்பது நாம் அறிந்ததுதான்.அதே நேரத்தில் தானே புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடு நேரங்களிலும் மற்ற மக்கள் நலம் சார்ந்த  அரசுச் செயல்பாடுகளிலும் இந்த அக்கறையும் கவனமும் ஏன் இருக்கக் கூடாது.அப்படி இருந்தால் எப்படி இருக்கும்..? மிக மிக நன்றாக இருக்கும் தானே .நாங்கள்தான் நேரிலேயே பார்த்தோமே..பார்த்துச் செய்யுங்கள் அரசு அலுவலர்களே..

பிரச்னை ஒன்றைப்பற்றிச் சொல்லி அதைக் கடைசியில் சொல்வதாகச் சொல்லியிருந்தேன் .நினைவிருக்கிறதா..? இப்போது கடைசிக்கு வந்துவிட்டோம் அதனால் சொல்லிவிடுகிறேன்.

இரண்டாம் நாள் காலையில் நாங்கள் முகாமைப் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே  காட்டு யானைகள் வந்துவிட்டன.வனத்துறை அலுவலர்கள் பரபரப்படைந்து பட்டாசு வெடித்து அந்த நாலு யானைகளையும் காட்டுக்குள் துரத்தினார்கள். முகாமுக்குள் அமைதி நிலவியபோது வெளியே ஒரே களேபரமாயிருந்தது.சாயந்திரத்தில் மறுபடியும்  யானைகள் திரும்பி வந்துவிட்டன.

ஏன் வராது..? காட்டு யானைகள் வழக்கமாக ஆற்றுக்கு வரும் வழியின் குறுக்காகத்தானே  புதிய முகாம் அமைக்கப்பட்டிருகிறது. அங்கே  வைக்கப்பட்டிருக்கிற முகாமின் வரைபடத்திலும் இது யானைகளின் பாதை என்றே  குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யானைகளின் பாதை என்பது தெரிந்தும் எப்படி அந்தப் பாதையை மறைத்து முகாம் அமைத்தார்கள்..? யாருடைய முடிவு இது..? வனத்துறையா..? அல்லது அறநிலையத்துறையா..? அல்லது இரண்டுமே சேர்ந்ததா..? இப்படியான
நாதாரித்தனத்தினால்தான் நல்ல காரியங்களும் நாளைடைவில் நலிவடைந்து போகின்றன.


முகாம் நடைபெறுகின்ற 48 நாட்களும் அந்த மண்ணின் மைந்தர்கள் தண்ணீருக்காக அலையத்தான் போகிறார்கள்.நாட்டு யானைகள் வெளியே போனால்தான் அந்தக் காட்டு யானைகளுக்கு நிம்மதி கிடைக்கும்.

படப்பிடிப்பை முடித்துவிட்டு நாங்கள் எச்சரிக்கையாக நாலாபக்கமும் மரங்களுக்கிடையே உற்றுப் பார்த்தபடி முகாமை விட்டு வெளியேறி மேட்டுப்பாளையம் வந்துவிட்டோம்.

முகாமிலிருந்து நாங்கள் வெளியே வந்த போது யானைகளுக்கு சாயந்திர நடைப்பயிற்சி நேரம்.எதிரில் வந்த குட்டியானை அகிலாவைப் பார்த்ததும் கையை நீட்டினோம்.அகிலா  துதிக்கையை நீட்டி எங்களின் கையைத் தொட்டு விட்டு நடையைத் தொடர்ந்தது.

சரி ...அடுத்த வருடம் முகாம் எங்கே நடைபெறப்போகிறது..? மேட்டுப்பாளையமா....முதுமலையா..?









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக