திங்கள், 3 டிசம்பர், 2012

இயற்கையோடு இணைந்த இந்திய வாழ்க்கை முறை




                                                                           ]

மனித இனம் இயற்கை அன்னையின் மடியிலேயே தோன்றியது. அதைப் புரிந்துகொண்டதால்தான் இந்திய சாஸ்திரங்கள் அனைத்தும் இயற்கையைப் போற்றுகின்றன.ஆறுகள் , மலைகள் , ஏரிகள் , பசுங்காடுகள் , நட்சத்திரங்கள் , கிரகங்கள் , விலங்குகள் என்று அனைத்திலும் அவை தெய்வாம்சத்தை உணர்த்தின. உலகில் உள்ள அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது என்று சொல்லி எல்லா உயிர்களுக்கும் சரிநிகர் சமானமான நிலையை அளிக்கின்றன.


இயற்கையின் மீது மனிதனுக்கு அவை எந்த ஒரு விஷேசமான ஆளுமையையும் அளிக்கவில்லை.மாறாக இயற்கையைப் போற்றவும் அதனோடு இயைந்து வாழவும் போதிக்கின்றன.
இறைவன் எங்கும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான். அதேபோல எல்லாமும் இறைவனுக்குள் நிறைந்திருக்கிறது என்பது இந்தியக் கலாசாரத்தின் அடிப்படைக் கோட்பாடு.

ஐந்து பெரும் இயற்கைச் சக்திகளான நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவை பஞ்ச பூதங்களாக உருவகப் படுத்தப்பட்டு ஆராதிக்கப்பட்டு வருகின்றன.

அதர்வ வேதத்தின் ஒரு சுலோகம் "மாதா பூமி புத்ரோகம் ப்ரித்விய்ய " என்று சொல்கிறது.'இந்த பூமி எனது தாய்,நான் அவளின் மகன் 'என்பது அதன் பொருள்.

யானை விநாயகரின் அம்சமாகவும் மயில் முருகக் கடவுளின் வாகனமாகவும் வணங்கப்படுகிறது.கொடிய சிங்கம் கூட காளிதேவியின் வாகனமாகவும் சின்னஞ்சிறு சுண்டெலி கூட விநாயகரின் வாகனமாகவும்  அமைக்கப்பட்டது.

அனுமன் என்ற வானரம் ராமபிரானின் அடியவனாகத் திகழ்ந்து அநேக மக்களின் இஷ்ட தெய்வமாக இருக்கிறது.ஜடாயு என்ற பறவையும் ஜாம்பவான் என்ற கரடியும் கூட ராமருக்கு உற்ற துணையாக இருந்திருக்கின்றன.


தூய்மையின் சின்னமான மானசரோவர் ஏரியைப் புனிதக் கடலாக வணங்குகிறோம்.ஆழ்ந்த அமைதி குடிகொண்டுள்ள கைலாஷ் மலையை ஆண்டவனின் இருப்பிடமாகத் துதிக்கிறோம்.





மலைகளை எலும்புகளாகவும் பூமியை உடலாகவும் கடலை ரத்தமாகவும் ஆகாயத்தை வயிறாகவும் காற்றை சுவாச மாகவும் நெருப்பை சக்தியாகவும் கொண்டு விளங்குகிறான் இந்த அண்டத்தைக் காக்கும் பரம்பொருளான இறைவன் என்று மகாபாரதம் உரைக்கின்றது.


இயற்கையான ஆகர்ஷனத் தன்மை கொண்ட மலையை சிவனின் உடலாகக் கருதி திரு அண்ணாமலை என்று அழைத்து அதிர்வலைகள் அதிக அளவில் வெளிப்படுகின்ற பவுர்ணமி காலங்களில் அதை வலம் வந்து உடல்நலம் பெறுவது ஒரு மிகச் சிறந்த இயற்கை வழிபாடு. 


நமது மூதாதையர்கள் இயற்கையை இறைவனின் இன்னொரு அம்சமாகவே கருதியிருக்கின்றனர் .அன்னை பூமி என்று பூமியைத் தம் தாயாகவே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கண்ணோட்டம் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.தங்களின் வாழ்க்கைக்கு எல்லா வகையிலும் ஆதாரமாக இருக்கின்ற இயற்கைக்கு அவர்கள் தெரிவிக்கும் நன்றிதான் அது.



சம்ஸ்கிருத மொழியில் ஆயுர்வேதா என்று சொல்லப்படுகின்ற உயிர் அறிவியலானது முழுவதுமாக இயற்கை சார்ந்த ஒரு ஆரோக்கிய மருத்துவ முறைதான்.தற்போது உலகம் முழுவதும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற யோகா இந்தியாவின் ஒரு இணையற்ற இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறையாகும். நமது உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் இருத்தி அதன் மூலமாக மூளையையும் நரம்புகளையும் தூண்டிவிட்டு உடலின் இயக்கத்தையும் சிந்தனையையும் செம்மைப்படுத்துவதே யோகப்பயிற்சியின் அடிப்படை..


வேத காலத்தில் மரங்களும் செடிகளும் அவைகளின் தன்மை களுக்கேற்ப பல தெய்வங்களின் அம்சமாக வகைப்படுத்தப் பட்டன.இந்த நடைமுறை இன்று வரையிலும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


மரங்கள் மற்றும் செடிகளுக்கிருக்கும் விஷேச மருத்துவ குணங்களைக் கண்டு கொண்ட மனிதன் அதைப் புனிதப் படைப்பாகப் போற்றி தனது வழிபாட்டு முறைகளோடு இணைத்துக் கொண்டான்.மரங்களைத் தெய்வமாகப் போற்றி வணங்கும் வழக்கம் சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்து துவங்கியதாகத் தெரிகிறது..


குறிப்பிட்ட சில வகையான மரங்கள் அதிகம் இருந்த இடத்தில் கோவில்கள் கட்டப்பட்டதால் அந்த மரங்கள் குறிப்பிட்ட தெய்வங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டன. நாளடைவில் அந்த மரங்கள் அந்தந்த கோவில்களின் ஸ்தல விருட்ஷமாக்கப்பட்டன.


இந்தியக் கிராமங்களில் கால்நடைகள் கன்று ஈன்றதும் தொப்புள் கொடியை வெட்டி எடுத்துச் சென்று ஆலமரக் கிளைகளில் கட்டித் தொங்கவிடுவது ஒரு தொன்றுதொட்ட பழக்கம்.


ஆலமரம் செழிப்பு மற்றும் வளத்தின் அடையாளமாகக் காணப்படுகிறது.ஆலமரம் ஒரு பால்மரம்.தனக்குள் பால் நிறைந்திருப்பது போல கன்று ஈன்ற தங்களின் கால்நடையின் மடியிலும் பாலை நிறையச் செய்ய வேண்டும் என்று மக்கள் ஆலமரத்திடம் வைக்கும் விண்ணப்பம் அது. ஒரு மரத்தின்  மீது மக்கள் வைக்கும் நம்பிக்கைதான் அது.


இதுபோல இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னொரு மரத்துக்கும் ஒரு புனிதமான இடத்தைக் கொடுத்துள்ளார்கள். அது அரசமரம்.குழந்தைப் பாக்கியம் வேண்டி அரச மரத்தைச் சுற்றிவருவது இந்தியப் பெண்களின் ஒருவிதமான வழிபாடு. இயற்கை வழிபாடு.


முற்காலத்தில் முனிவர்களும் துறவிகளும் அரசமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்திருக்கிறார்கள்.அதன் பலனாக ஞானம் பெற்றிருக்கிறார்கள் .மகாபுத்தர் போதி என்ற அரச மரத்தின் கீழேதான் முக்தி பெற்றார். விரிந்து படர்ந்த  அரசமரம் தனது பகுதிக்குள் செலுத்துகின்ற ஒருவகையானஆளுமைதான் இந்த விளைவுகளுக்கெல்லாம்  காரணமாக இருக்கிறது.


வேப்ப மரத்தின் மருத்துவ குணத்திற்காக கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களில் கூட வீடுகளின் முன்புறத்தில் அவை வளர்க்கப்படுகின்றன. கிராம வைத்தியர்கள் வேப்ப இலைகளை தேள் கடிக்கும் வண்டுக்கடிக்கும் விஷம் இறக்கியாகப் பயன்படுத்துகின்றார்கள்.அம்மை நோய் பாதித்த வீடுகளில் அவை கிருமி நாசினியாக வீடுகளின் வாசல்களில் கட்டிவைக்கப் படுகின்றன.


அருகருகே வளர்ந்த வேப்பமரத்தையும் அரச மரத்தையும் காதலர்கலாகக் கருதி அவற்றுக்கு கோலாகலமாகத் திருமணம் செய்து வைத்துப் பாதுகாக்கும் வினோத நிகழ்ச்சிகள்  இன்றும் தென்னிந்தியக் கிராமங்களில் நடந்து வருகின்றன.இவையெல்லாம் மூடப் பழக்கங்கள் இல்லை. எல்லாச் செயலுக்கும் அர்த்தம் இருக்கிறது.அது அறிவியல் சார்ந்ததாக இருக்கும் அல்லது வாழ்வியல் சார்ந்ததாக இருக்கும்.


துளசிச் செடி இந்தியக் கலாசாரத்தில் ஒரு புனிதப் பொருளாகக்  கருதப்படுகிறது.வீடுகளின் முற்றத்தில் அழகான மாடம் அமைக்கப்பட்டு அதில் துளசிச் செடி வளர்க்கப் படுகிறது.ஒவ்வொரு நாளும் குடும்பத்தலைவி குளித்து தூய ஆடை உடுத்தி துளசி மாடத்தை வலம் வந்து துளசிச் செடியை வணங்குகிறாள்.


விஷேச காலங்களில் துளசி மாடத்தின் முன்னால் கோலம் வரையப்படுகிறது.அகல் விளக்கு ஏற்றப்படுகிறது வாழ் விடத்தில் துளசிக்குக் கொடுக்கப்படும் இந்த முக்கியத் துவத்துக்குக் காரணம் என்ன ?


துளசி காற்றைத் தூய்மைப்படுத்தும் குணம் கொண்டது. பூச்சிகளைத் தூர ஓட்டும் தன்மை கொண்டது.அது ஒரு கிருமி நாசினி.துளசிச் சாறு உடலுக்கு சக்தி கொடுக்கும்.இதயத்துக்கு பலம் வழங்கும்.ரத்தத்தைச் சுத்தமாக்கும்.தலைவலி, ஜலதோஷம், காய்ச்சல். வயிற்று உபாதை ஆகிய பிரச்னை களுக்கு துளசி ஒரு அருமருந்து.அது அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. 

இந்த அதிநவீன நாகரிக உலகில் எல்லோராலும் கடைப் பிடிக்கப் படுகின்ற வாஸ்து சாஸ்திரம் கூட இயற்கை சார்ந்த ஒரு அறிவியல் நடைமுறைதான்.பூமியில்இயற்கையிலேயே   அமைந்துள்ள புவி ஈர்ப்பு மையம் , காந்தப் புலம் , காற்றுத் திசை,  கதிர் வீச்சு மையம் ஆகியவற்றால் ஏற்படுகின்ற சாதக பாதகங்களுக்கு ஏற்ப நம் இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதுதான் வாஸ்து சாஸ்திரம்.


இந்தியக் கிராமங்களில் வடக்குத்திசையில் தலை வைத்துப் படுப்பதைத் தவிர்ப்பது இன்றும் கூட நடைமுறையில் இருந்து வருகிறது.வடக்குத் திசையில் இருக்கின்ற காந்தப்புலம் மூளையைப் பாதிப்பதைத் தவிர்ப்பதே இந்தச் செயலின் நோக்கம்.


பிரபஞ்சத்தில் ஒரு சிறு புள்ளியாக இருக்கின்ற இந்த பூமிக்கும் விண்ணில் உலா வருகின்ற மற்ற கிரகங்களுக்கும் இருக்கின்ற தொடர்பைக்கூட துல்லியமாக உணர்ந்து அதன் அடிப்படையில் ஜோதிடக் கலையையும் வான  சாஸ்திரத்தையும் உருவாக்கி மனித இனத்தின் அன்றாட வாழ்க்கையில் இடம் பெறச் செய்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள்.


அமாவாசையின் போது பூமியின் மீது நிலவின் ஆகர்ஷன சக்தி அதிகமாகிறது என்பதால் அந்த நேரத்தில் மனித உடலின் செரிமானச் செயல்பாடு தடைபடுகிறது என்பதை உணர்ந்து கொண்ட மனிதன் இயற்கையோடு இயைந்துகொண்டு அமாவாசை தினத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள ஆரம்பித்தான்.

இந்தியக் கலாசாரத்தின் இயற்கை சார்ந்த இன்னொரு சிறப்பான பரிமாணம் காய்கறி உணவுமுறை.உலகின் வேறு எந்த மனித நாகரிகத்திலும் தோன்றாத இந்த நடைமுறை இந்தியக் கலாசாரத்தின் சிறப்பான இயற்கை சார்ந்த கண்ணோட்டத்தையே விளக்குகிறது.


" இயற்கையை மாற்ற முயலாதே, இயற்கையை சீரமைக்க முயலாதே, இயற்கையோடு போராட முயலாதே "என்று பகவத் கீதை மனிதனுக்கு அறிவுறுத்துகிறது.


அஹிம்சைக் கோட்பாடு இந்தியாவில்தான் தோன்றியது.இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மனிதனுக்காக மட்டும் படைக்கப்பட்டது அல்ல.உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இந்த உலகம் உரித்தானது என்ற உண்மையை அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் தங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருக் கிறார்கள் இந்திய மக்கள்.


தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் மாரியம்மன் என்ற ஒரு கிராம தேவதைக் கோவில் அவசியம் இருக்கும். 


ஒவ்வொரு ஆண்டும் ஆனி எனும் தமிழ் மாதத்தில் அந்தக் கோவிலில் முளைப்பாரி திருவிழாவும் நடக்கும்.மாரி  என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மழை என்பது பொருள்.தங்களை வாழவைக்கும் மழைக்குக் கோவில் கட்டி அதை அம்மனாக வழிபடுகின்றனர் இந்த மக்கள்.


தென்னிந்திய வீடுகளின் வாசலில் தினமும் அதிகாலையில் மாட்டுச் சாணம் தெளித்து அழகழகான கோலங்கள் போடப்படுகின்றன.இதுவும் ஒரு மிகுந்த வியப்புக்குரிய இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைதான்.மாட்டுச் சாணம் ஒரு இயற்கையான கிருமி நாசினி.வீட்டு வாசலில் அதைத் தெளிப்பதால் கிருமிகள் வீட்டுக்குள் புகுவது தடுக்கப்படுகிறது.


அந்தக் கோலங்கள் சுத்தமான அரிசி மாவினால் போடப்படுகின்றன.அரிசி மாவு ஏறும்புகளுக்குப் பிடித்தமான உணவு.எறும்புகள் கோலங்களைத் தேடிவந்து சாப்பிட்டுப் போகின்றன.மழைக்காலச் சேமிப்புக்காக புற்றுகளுக்கு எடுத்தும் செல்கின்றன.


காக்கையை இறந்துபோன தங்களின் முன்னோராகவே உருவகப்படுத்தி விஷேச நாட்களில் அதற்கு உணவு படைத்து அது உண்ட பிறகே தாங்கள் உண்பது....கோவில் 
கும்பாபிஷேகங்களின்போது மேலே வானத்தில் கருடன் பறப்பதை நல்ல சகுனமாக ஏற்று கும்பத்திற்கு அபிஷேகம் செய்வது ..இது எல்லாம் கூட இயற்கை ஆராதனைதான்.



 சுபகாரியங்களை தேங்காய் உடைத்துத் துவக்கி வைப்பதும் வாசலில் வாழைமரம் கட்டுவதும் மாவிலைத் தோரண அலங்காரம் செய்வதும் இலைபோட்டு விருந்துண்ணுவதும் இயற்கைக்கு இம்மக்கள் அளிக்கும் மனமார்ந்த அங்கீகாரம்தான்.


.பசுவையும் பாம்பையும் கருடனையும் போற்றி வணங்கும் இந்த மக்கள் பள்ளியின் குரலுக்குக் கூட சகுனம் என்ற அங்கீகாரம் அளித்து மரியாதை தருகிறார்கள்.பலிகடாவிடம் கடைசி நிமிடத்தில் தலையில் நீரை ஊற்றி சம்மதம் வாங்கிக் கொண்டு தலையை வெட்டுகின்ற அளவுக்கு விலங்குகளின் மீது அபிமானம் கொண்டிருக்கிறது இந்தக் கலாசாரம்.


அறுவடை முடிந்ததும் தைத் திங்களின் முதல் நாளில் கால்நடைகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து தாங்களும் குளித்து புத்தாடை அணிந்து அதிகாலை சூரிய உதய நேரத்தில் புத்தரிசியில் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைத்து காளைகளுக்கும் கொடுத்து தாங்களும் உண்டுமகிழும் பொங்கல் திருநாள் ஒரு முழுமையான இயற்கை வழிபாடன்றி வேறென்ன..?



கூந்தன்குளம் .தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர்.நாடே பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடும்போது இந்த ஊர்மக்கள் மட்டும் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.காரணம் பறவைகள். உலகின் பல பகுதிகளிலிருந்து இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் பறவைகளைப் பயப்படுத்தவேண்டாம் என்று பறவை களின் மேல் பாசம் கொண்ட இந்தக் கிராமத்து மக்கள் முடிவு செய்து நெடுங்காலமாக அதைக் கடைப்பிடித்தும் வருகிறார்கள். இதைப்போல தமிழ்நாட்டில் பல கிராமங்கள் இருக்கின்றன.இதை விடவும் ஒரு இயற்கை வழிபாடு வேறென்னவாக இருக்க முடியும்..?


 இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வறண்டு கிடக்கின்ற கொடுமையான தார் பாலைவனத்துக்கிடையே வாழ்கின்ற பிஷ்னோய் இன மக்கள் மரங்கள் வாழ்வதற்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.தாங்கள் பட்டினி கிடந்து கால்நடைகளுக்கு உணவு அளிக்கிறார்கள்.தாயை இழந்த மான் குட்டிகளுக்கு பிஷ்னோய் தாய்மார்கள் தங்களின் மார்பகங்களில் பாலூட்டுகிறார்கள்.




தண்ணீர் இல்லாத அந்தப் பாலைவனத்தில் இவர்கள் தங்களின் வயல்களில் குளங்கள் வெட்டி இந்த விலங்குகளுக்காக அதில் நீர் 
சேமித்து வைக்கிறார்கள்.

அவர்களைப் பொருத்தவரையில் விலங்குகள்  தெய்வாம்சம் கொண்டவை.


பெரும்பாலான பிஷ்னோய் மக்கள் தச்சர்கள்.ஆனால் அவர்கள் மரத்தை வெட்டுவதில்லை.மாறாக மரங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்து அவைகள் தானாக இறக்கும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்.மரங்களின் தேவையைக் குறைப்பதற்காக அவர்கள் இறந்தவர்களை எரிப்பதைத் தவிர்த்து புதைக்கிறார்கள்.




200 ஆண்டுகளுக்கு முன்னால் மரங்களை வெட்ட வந்த மன்னரின் படையை எதிர்த்த அமிர்தா தேவியும் இன்னும் 366 பிஷ்னோய் பெண்களும் மரங்களோடு சேர்த்து வெட்டப்பட்டு உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.கேஜார்லி தியாகம் என்று அது இன்றும் பிஷ்னோய் மக்களால் நினைவு கூறப்படுகிறது.


இந்தியர்கள் மறுபிறவி நம்பிக்கை உள்ளவர்கள்.இறப்புக்குப் பின்னும் தாங்கள் மறுபடியும் பிறப்பதாக உறுதியாக நம்புகிறார் கள். அப்படிப் பிறக்கும்போது மனிதனாக மட்டுமல்ல, விலங்காகவோ ..பறவையாகவோ ..அல்லது எந்த ஒரு உயிராகவோ தாங்கள் பிறக்கலாம் என்றதான் அவர்கள் நம்புகிறார்கள்.


படைக்கப்பட்டவை அனைத்தும் சமம் என்பது அவர்களின் கொள்கை.


தங்களை எப்போதும் அவர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்ததாக எண்ணிக்கொள்ளவில்லை.எந்த நிலையிலும் அவர்கள் இயற்கையை விட்டு விலகிப் போகவும் தயாராயில்லை.








' சென்னை அரசு அருங்காட்சியகம் ' படிக்க இங்கே சொடுக்கவும் 











3 கருத்துகள்:

  1. Would like to know you better. There is a flame and tranquil in what you write, and what one writes reflects what one is, I am sure. If you like La.Sa.Ra. , jayakanthan, TJR .. do get in touch. We may go on field trips, you as guide and mentor, I am 57.
    R.K.Kumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்து இடுகைக்கு நன்றி.லா.ச.ரா,ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்.எழுத்துப் பிதாமகன்களைப் போற்றுகிறேன்,வணங்குகிறேன். எனது மின்னஞ்சல் முகவரி தருகிறேன்.அஞ்சல் செய்யுங்கள்.விரைவில் சந்திப்போம். mathivanan_mathu@yahoo.co.in

      நீக்கு
  2. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகேயுள்ள மேல்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த சன்னாசி என்ற கறவைத் தொழில் செய்பவர் தான் வளர்க்கின்ற பசுவுக்கு ' செல்லப்பொண்ணு ' என்று பெயர் வைத்திருக்கிறார்.சென்ற 13.12.20013 அதாவது போகிப்பண்டிகை அன்று 500 அழைப்பிதழ்கள் அடித்து ஊரையெல்லாம் அழைத்து ஊராட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் செல்லப்பொண்ணுக்கு வெகு விமரிசையாக ' வளைகாப்பு ' நடத்தியிருக்கிறார். மனிதன்.

    பதிலளிநீக்கு