வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

தென்னாடாகிறதா சென்னை ..?

       




இந்தப் பதிவு முக்கியமாகச் சென்னைவாசிகளுக்கானது.ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருமே தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்தான். இந்தப் பதிவு கொஞ்சம் தாமதமானதுதான்.என்றாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை.Evergreen subject என்பதுபோல எப்போதுமே பேசப்பட வேண்டிய விஷயம்தான் இது.

இப்போது இல்லா விட்டாலும் அடுத்த ஆண்டு எப்படியும் நாம் இதைப் பற்றிப் பேசத்தான் போகிறோம்.அதனால் தாமதமாகிவிட்டாலும் பரவாயில்லை. இப்போதே பேசி விடுவோம்.

பூடகம் பெரிதாயிருப்பதைக் கண்டு ஒன்றும் யோசிக்காதீர்கள்.விஷயம் சின்னதுதான்.என்றாலும் முக்கியமானது.சரி போதும். விஷயத்துக்கு வருவோம்.

சமீபத்தில் வந்து சென்ற தைப்பொங்கல் தமிழர் திருநாளுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வந்தது இல்லையா? அந்த நாட்களில் சென்னையைப் பார்த்தீர்களா..? நகரம் வெறிச்சோடிப்போய்க் கிடந்ததைக் கவனித்தீர்களா..?

 திரையரங்கங்கள் காலியாகக் கிடந்தன....

பேருந்து நிறுத்தங்கள் ஆளரவமின்றி நின்றன...

டாஸ்மாக் கடைகளில் அமைதி தவழ்ந்தது.

கோயம்பேடு பேருந்து நிறுத்தம் காற்று வாங்கியது.

ஜி.எஸ்.டி சாலையில் வாகனப் போக்குவரத்து வெகு சீராக இருந்தது.

நகரமே இப்படிக் காலியாகப் போனதற்குக் காரணமென்ன ..?

விடுமுறை முடிந்த மறுநாள் காலை ஜன நெரிசல் முண்டியடித்த வெளியூர்  பஸ்  நிறுத்தங்களைப்  பார்க்க வாய்ப்புக் கிடைத்தவர்களுக்கு காரணம் நன்றாகப் புரிந்திருக்கும்.பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்த தென்மாவட்ட மக்கள் அனைவரும் அன்று காலையில்தானே வந்து இறங்கினார்கள்.

PAUSE மோடில் இருந்த வீடியோப்படம் PLAY ஆக ஆரம்பித்தது போல மறுபடி சென்னை பரபரப்பானது.

மளிகைக் கடைக்காரர்கள்,ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள், முனியாண்டி விலாஸ் மற்றும் செட்டிநாடு ஓட்டல் முதலாளிகள், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள். கார் ஓட்டுனர்கள், முடி திருத்தக் கலைஞர்கள், சலவைத் தொழிலாளிகள். ஐ.டி ஊழியர்கள்.தனியார் நிறுவனப் பணியாளர்கள், ரங்கநாதன் தெரு கடை  ஊழியர்கள், மெரினா பீச் சுண்டல் சிறுவர்கள், சாலையோர கையேந்தி பவன் கடைக்காரர்கள் , திரைப்படக் கலைஞர்கள் என்று இப்போது சென்னை முழுவதும்  நிறைந்திருப்பவர்கள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான்.



அரசுப் போக்குவரத்து விரைவுப் பேருந்துகளும் தனியார் ஆம்னி பஸ்களும் நெடுந்தூர விரைவு ரயில்களும் தினமும் இந்த மக்களை பிதுங்கப் பிதுங்க ஏற்றிச் சென்று திரும்ப வந்து இறக்கிக் கொண்டு  இருக்கின்றன.

ஒரு காலத்தில் 'இஸ்துன்னு வா ', 'வலிச்சினு வா ', கஸ்மாலம், பேமானி' என்பது போன்ற சென்னைக்கே உரித்தான  மணிப்பிரவாளத்தை இப்போது கேட்க முடிகிறதா..? முடியாது. ஏனென்றால் சென்னைத் தமிழ் இப்போது குறிப்பிட்ட சில ஏரியாக்களுக்குள் முடங்கிக்கொண்டு விட்டது.அது மெல்லச் செத்துப்போய்க் கொண்டிருக்கிறது..அதன் இடத்தை தென்னாட்டுத் தமிழ் பிடித்துக் கொண்டுவிட்டது.

' நாதாரிப் பயலுக  எங்க போய்ட்டாய்ங்க ' என்று இப்போது சென்னை மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.'மொக்கை ' இளைஞர்களின் செல்லக் குறியீடாகி விட்டது. தென் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் மெல்லப் பரவிப் பெருகிவிட்டன.

திண்டுக்கல் N.பாண்டியனின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு இங்கே சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

பூமி வெப்பமயமாதலின் விளைவாக பருவ காலங்கள்  தவறிப் போனதும் விளைநிலங்கள் தரிசாகிப் போனதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டுக் கம்பள அழைப்பு விடுத்ததால் உள்ளூர்த் தொழில்கள் முடங்கிப் போனதும் அரசாங்கங்கள் எத்தனை நலத்திட்டங்களை அமல் படுத்தினாலும் அதன் பயன் சாமான்யர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடாமல் அரசியல்வாதிகளும் அதிகாரி களும் பங்கு போட்டுக் கொள்வதுமான காரணங்கள்தான் தென்னாட்டு மக்களைச் சென்னையை நோக்கித் துரத்தியிருக்கின்றன.

ஆனால் அதற்காக இவர்களைக் குறை எதுவும் சொல்ல முடியாது. அவர்கள் பாட்டுக்குத் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். முன்னேறுகிறார்கள். அவர்களின் உழைப்பும் திறமையும் அவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. 

இங்கே உழைத்துச் சம்பாதிக்கின்ற பணத்தில் அங்கே ஊர்த் திருவிழாக்களில் 'சென்னைவாழ் இளைஞர்கள்' சார்பில் சினிமாவில் தலையை  மட்டும் காட்டிக் கொண்டிருக்கிற 'திரைப்படக் கலைஞர்கள்' கலந்துகொள்கிற 'கடையம் ராஜு 'வின் கலை நிகழ்ச்சிகளை  நடத்திக் களிக்கிறார் கள்.

இவர்களைச் சென்னை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற அதே நேரத்தில் இவர்களால் சென்னையும் வளர்ந்துகொண்டுதான் வருகிறது. பரப்பளவில் மட்டுமல்லாமல் பணப்புழக்கத்திலும் கூடத்தான்.

இது ஏதோ இப்போதுதான் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் விளைவு ஒன்றுமில்லை.

1900 ஆவது ஆண்டுகளில் ராமநாதபுரத்திலிருந்து வந்த பாண்டித்துரைத் தேவர்தான் சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த சிங்காரவேலு முதலியார் எழுதிய 'அபிதான  சிந்தாமணி' என்ற முதல் தமிழ் மொழிக் கலைக் களஞ்சிய நூலைப் பதிப்பித்தார்.

1920 களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த நாகலிங்கம் என்ற ராஜா சாண்டோ தான் மவுனத் திரைப்படங்களின்  கதாநாயகனாக இருந்தார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த புதுமைப்பித்தன்தான் தமிழ்ச் சிறுகதைக் களத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார்..' தினத்தந்தி'ஆதித்தனார்தான் வெகு சாமான்ய மக்களையும்   நாளிதழ் படிக்கப் பழக்கிய ஆசிரியரானார்.

நாகர்கோவிலில் பிறந்த கலைவாணரும் தூத்துக்குடியில் வளர்ந்த சந்திர பாபுவும்தான் தமிழ்த் திரையில் நகைச்சுவைக்கு புதிய பரிமாணம் கொடுத்தார்கள்.

காரைக்குடியைச் சேர்ந்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்தான் சென்னை யின் பெரிய படப்பிடிப்புத் தளத்தை நிறுவினார். கண்ணதாசனையும் தமிழ் வாணனையும் அதே காரைக்குடிதான் தந்தது.

திருச்சியில் பிறந்த தியாகராஜா பாகவதர்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ஆனார்.

விருதுநகரில் தோன்றிய காமராசர்தான் இந்திய அரசியலின் சூத்ரதாரி யான   முதல் தமிழராக இருந்தார்.

ராமநாதபுரத்திலிருந்து வந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் என்கிற அறிஞர் தான் அணு அறிவியலில் நமது நாட்டை உலக அரங்கில் முன்னிறுத் தினார். 

அதேயிடத்திலிருந்து வந்த மகேந்திரனும் கமல ஹாசனும்தான் தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்தார்கள்.

 சொல்லிக்கொண்டே போகலாம். பிரமுகர்கள், கலைஞர்கள், எழுத்தாளர் கள், கவிஞர்கள் என்று எல்லோரையும் எழுத இங்கே இடம் போதாது.

ஆக தமிழ் மாநிலம், தமிழ் மொழி,சென்னை நகரம்ஆகிய  எல்லாவற்றின் வளர்ச்சியிலும் தென்  மாவட்ட மக்களின் பங்களிப்பு மிகக் கணிசமானது என்பது நிதர்சனம்.

எனவே சென்னை மெதுவாக தென்னாடாக மாறிக்கொண்டு வருவது நல்ல விஷயம்தான்.திருச்சியைத் தமிழ்நாட்டின் தலைநகரமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை அப்படியே அமுங்கிப்போனதுகூட இந்த மாற்றத்தினால் விளைந்த ஒரு மாற்றம்தான்.

இன்னும் நிறைய சிந்தனையாளர்களும் படைப்பாளிகளும் சீர்திருத்த வாதிகளும் அறிஞர்களும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கட்டும்.தமிழ் நாடு வளரட்டும்.

இங்கே ஒரு விஷயம்.நானும் தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்தவன்தான்.இங்கே வந்தோர்  எல்லோரையும் போல என்னையும் இந்தச் சென்னை தான் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.நன்றி.



சரி,நல்லது.கடைசியாக இதைக் கேளுங்கள்.


பொங்கல் விடுமுறை முடிந்து எல்லோரும் சென்னைக்குத் திரும்பி விட்ட சில நாட்களுக்குப்பின் ஒருநாள் வெளியூர் போவதற்காக ரயிலில் இடம் கிடைக் காததால் பஸ் பிடிப்பதற்காக இரவு 8 மணி போல கோயம்பேடு போனேன்.100 அடி ரோட்டில் ஒரு சாலையோரச் சாப்பாட்டுக் கடையில் எதோ தகராறு. போதையில் இருந்த ஒரு இளைஞர் இன்னொருவரை சட்டையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளிவிட்டுக் கத்திக்கொண்டிருந்தார்,

" எந்தூரான் எந்தூரானப் பத்திப் பேசுறது ,ஏண்டா .."

இரண்டு பெரும் தென்மாவட்டத்துக்காரர்கள்தான்.பக்கத்துப் பக்கத்து ஊர்க் காரர்களாம். அப்புறம் என்ன சண்டை..?

அதாங்க நாங்க.தென்னாட்டு மக்களின் கலாசாரத்தை உங்களால் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாது.விடுங்க.

அடுத்த ஆண்டும் தைப் பொங்கல் வரும்.அதற்கு மூன்று நாட்கள் விடுமுறை யும் வரும்.அந்த விடுமுறை நாட்களில் சென்னையைக்  கொஞ்சம் கவனித்துப் பாருங்களேன்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக