சனி, 24 ஆகஸ்ட், 2013

செல்லநாய் வைத்திருக்கிறீர்களா ..? ஒரு நிமிடம்.










செல்ல நாய் வளர்ப்போருக்கும் நாய்களின் மீது மட்டுமல்லாமல் விலங்குகளின் மீதும்  ஈடுபாடு கொண்டவர்களுக்கும் இந்தப் பதிவு சுவாரஷ்யமாக இருக்கும் என்று நம்பி இதைப் பதிகிறேன்.

நாய் புல் தின்னுமா..?

என்னுடைய அனுபவத்தில் நாய் புல் தின்னும் என்பதை கண்டிருக்கிறேன்.

நம்மால் அறிந்து கொள்ள முடியாத இயற்கையின் விந்தைச் செயல்களில் இதையும் ஒன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

என்னுடைய செல்ல நாய் டேனியை நடைப் பயிற்சிக்குக் கூட்டிச் செல்லும்போது சில நாட்களுக்கு ஒருமுறை அது புல்தரையைத் தேடிப்  போகிறது.அங்கே முகர்ந்தும் தேடியும் பார்த்து ஒரு வகைப் புல்லைக் கண்டுபிடித்துக் கடித்துத் தின்கிறது.

ஆரம்பத்தில் இது எனக்கு விநோதமாக இருந்தாலும் அனுபவத்தில் போகப்போக உண்மையைப் புரிந்துகொண்டேன்.

டேனிக்கு வயிற்றில் பிரச்னை ஏற்படும்போதெல்லாம் அது என்னிடம் எதுவும் சொல்லாமல் [ ? ] தானே புல்தரையைத் தேடிப்போனது.அது புல்லைச் சாப்பிட்டபிறகு வயிற்றுப் பிரச்னை சரியானது.

 புல்  சாப்பிடும் டேனியின் இந்தப் பழக்கம் எனக்கு மருத்துவர் செலவைக் கணிசமாகக் குறைத்தது.

தன்னுடைய நோயைத் தானே தீர்த்துக் கொள்ளும்படிக்கு  இந்த வாயில்லாத உயிர்களுக்கு இயற்கை இன்னும் என்னவெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறதோ....? ஆச்சரியம்தான்.

அதனால் செல்லநாய் வைத்திருப்பவர்கள் அதை புல்தரைப் பக்கமாகக் கூட்டிப் போக வேண்டுமென்பது எனது தாழ்மையான கோரிக்கை.ஆனால் புல் சுத்தமாக இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

இன்னுமொரு வேடிக்கையான விஷயத்தையும் இங்கே கொசுராகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இயக்குனர் மற்றும் 'நாம் தமிழர் ' கட்சியின் நிறுவனர் சீமான் அவர்களின் செல்ல வளர்ப்புகளான ' கார்க்கி', மற்றும் 'கயல் ' ஆகிய இருவரின் பிள்ளைகளில் ஒன்றை கண் விழித்து சில நாட்களே ஆன நிலையில் நான் எடுத்து வந்தபோது அது ஆணா பெண்ணா என்று புரிந்து கொள்ள முடியாமல் அப்போது புகழின் உச்சத்தில் இருந்த சானியா மிர்சாவின் மீது நாங்கள் கொண்டிருந்த அபிமானத்தால் அதற்கு 'சானியா' என்று பெயர் வைத்தோம்.

அப்புறம்தான் தெரிந்தது அது ஆண் என்பது. இதற்குள் செல்லக்குட்டி நாய் சானியா என்ற பெயருக்குப் பழகிக் கொண்டுவிட்டது.

 இப்போது என்ன செய்வது..?

 சானியா என்ற ஓசைக்கு ஒத்துப்போவதுபோல ரஷ்யப் பெயர் ஒன்றைக் கொண்டு ' டான்யா' என்று பெயரை மாற்றினோம்.அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கி 'டானி' என்று அழைத்தோம்.இறுதியில் அது 'டேனி 'யானது.

இது எங்களின் செல்லக்குட்டி  டேனி பெயர் பெற்ற கதை. வேடிக்கைதான்.இல்லை..?




1 கருத்து: