சனி, 6 அக்டோபர், 2012

' மீனவர் பிரச்னை-ஒரு கசப்பான உண்மை '




' தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு '

' தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் '

இவைகள் அனேகமாக நாம் தினமும் படிக்கின்ற செய்திகளாக ஆகிவிட்டன. செய்திகளைப் படித்தும் பார்த்தும் விட்டு நம் மக்கள் உணர்ச்சிவசப் படுகிறார்கள். டாஸ்மாக் மேஜை முதல் பேஸ்புக் வரை இந்த விஷயங்கள் அலசப்படுகின்றன. .

இந்த அநியாயங்களைத் தடுத்து நிறுத்தும்படி மீனவ  மக்கள் தினமும் கூக்குரலிடுகிறார்கள் அரசியல்வாதிகளும் ஆனமட்டும் முழங்கிப் பார்த்து விட்டார்கள்.ஆட்சியாளர்களோ ஆக்க பூர்வமாக எதையும் செய்வதாக இல்லை.மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்குக் கடிதம் போகிறது.மத்திய அரசிடமிருந்து இலங்கை அரசுக்குக் கடிதம் போகிறது.உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

சொன்ன மறுநாளே இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்கள் மீது ........இல்லை,..இங்கே கொஞ்சம் யோசித்துதான் எழுத வேண்டும்...தமிழ் மீனவர்கள் என்றுதான் சொல்லவேண்டும் என்ற பெரும்பான்மைக் கருத்து ஒன்று இங்கே உள்ளது.அதனால் அப்படியே சொல்லிவிடுவோம்.ஆனால் இலங்கைத் தமிழ் மீனவர்கள் கூட இந்திய மீனவர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.


சரி..விஷயத்துக்கு வருவோம். ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன மறுநாளே தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்கப் படுகிறார்கள்.இலங்கை மீனவர்கள் என்று இங்கே நாம் சொல்வது சிங்களவர் களையல்ல. தமிழர்களை .

இப்போது அடுக்கடுக்காக பல கேள்விகள் நம் முன்னே எழுந்து நிற்கின்றன.

இலங்கை கடற்படையினர் எதற்காக தமிழக மீனவர்களைத் தாக்குகின்றார்கள்...?

இலங்கை மீனவர்கள் அதாவது தமிழ் மீனவர்களும் எதற்காக தமிழக மீனவர்களைத் தாக்குகின்றார்கள்..?

தமிழ் நாடு அரசு ஏன் கண்டனம் தெரிவிப்பதோடும் கடிதம் எழுதுவதோடும் தனது செயல்பாட்டினை நிறுத்திக் கொள்கிறது..?

ஊரே கூக்குரலிட்டும் இந்திய ஆட்சியாளர்கள் ஏன் இந்த உணர்வுபூர்வமான விஷயத்தில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள்...?

இலங்கையில் ஆட்சியிலும் அதிகாரத்திலும்  இருப்பவர்கள் இந்த விஷயத்தில்  தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை சர்வ அலட்சியம் செய்வது எதனால்...?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தால் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு முடிவு கண்டுவிடலாம்.ஆனால் இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்கே இருக்கின்றன..? குறிப்பாக யாரிடம் இருக்கின்றன..?

அதுதான் பெரிய மர்மமாக இருக்கிறது..

உண்மையில் இந்தப் பிரச்னையில் சம்பநதப்பட்ட அனைவரிடமுமே இந்த விடைகள் இருக்கின்றன .ஆனால் அவர்கள் யாரும் அவைகளை யாரிடமும் சொல்வதில்லை . ஏன் ..? இந்த மர்ம முடிச்சைப் பற்றித்தான் இங்கே நாம் பேச  வருகிறோம்.

மீன் பிடிப் படகுகளில் Trawler boats என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற இழுவைப் படகுகள் என்று ஒரு வகை உள்ளது.அதே போல மீன்பிடிக்கப் பயன்படுத்துகின்ற வலைகளில் மடிவலை என்று ஒரு வகை உள்ளது.இந்த இழுவைப் படகுகளிலிருந்து மடிவலையை வீசி இழுக்கும்போது அந்த வலை கடலின் தரைப் பகுதி வரையில் சென்று படிந்து இறால் போன்ற ஆழத்தில் வாழ்கின்ற மீன் வகைகளை இழுத்துக் கொண்டுவருகிறது.

இதில் இருக்கின்ற எதிர் மறை அம்சம் என்னவென்றால் மடிவலை வளர்ந்த மீன்களை மட்டும் இழுத்து வருவதில்லை.குஞ்சுகளையும் குளுவான் களையும் ஏன் முட்டைகளையும் கூட இழுத்துக்கொண்டு வருகின்றது. வலையில் சிக்கியிருக்கின்ற இறால்கள் நல்ல விலையைப் பெற்றுத் தருகின்றன.மற்றவை எல்லாம் கழிவுகளாகிப் போகின்றன.குஞ்சுகளும் முட்டைகளும் கழிவுகளாகிப் போனால் அடுத்த மீன்வளம் எங்கிருந்து வரும்..?


இப்படி இந்த மடிவலைகள் கடல் வளத்தை அழித்துப் பாழாக்குவதால் உலகம் முழுவதும் எதிர்கால நலன் கருதி மீனவர்கள் அவைகளைப் பயன் படுத்துவதைத் தடை செய்வது அவசியமாகிறது.இந்தத் தடை இலங்கையில் அமல்படுத்தப் பட்டிருக்கிறது.இலங்கை மீனவர்கள் இழுவைப் படகுகளையும் மடிவலை களையும் பயன்படுத்துவதில்லை.

இந்தியாவில் ..?

எந்தத் தடையும் இல்லை.இழுவைப் படகுகளும் மடிவலைகளும் தாராளமாகப் பயன்படுத்தப் படுகின்றன.மன்னார் வளைகுடாவின் கடல் வளத்தினை இவை நாள்தோறும் பெரிய அளவில் அழித்து வருகின்றன.பெருமளவு மீன்வளம் ஏற்கனவே அழிந்து விட்டது.எஞ்சியிருப்பதும் வெகுவேகமாக அழிந்து வருகிறது.ஆனால் இந்த அழிவைத் தடுக்க ஆண்டுக்கு ஒரு முறை 45 நாட்கள் மீன் பிடிக்கத் தடை விதிப்பதைத் தவிர இந்தியா வேறு எதுவும் செய்ய வில்லை.

இந்த நிலையில் தங்கள் பகுதியில் அதிக வருமானம் தருகின்ற இறால்மீன் வளம் குறைந்து விட்டதால் வேறு வழியின்றி அவை அதிகமாக உள்ள இலங்கையின் கடல் பகுதி வரை சென்று தமிழக மீனவர்கள் மடிவலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதுகின்ற இலங்கை மீனவர்கள் அங்கே வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

இந்திய அரசு இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் மீண்டும் எச்சரித்தும் இந்திய மீனவர்கள் பொருட்படுத்தாததால் எரிச்சலடையும் இலங்கை கடற்படையினர் ஆத்திரத்தில் ஆயுத பலத்தைப் பிரயோகிக்கின்றனர்.

இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே கூட  இந்த விஷயத்தில் இந்திய அரசின் அலட்சியம் குறித்து ஐ .நா சபையில் முறையிடப் போவதாக எச்சரிக்கிறார்.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படுகின்ற இந்தத் தாக்குதலைக் கண்டிக்கின்ற அரசியல்வாதிகளும் செய்தி வெளியிடுகின்ற ஊடகங்களும் இந்த மடிவலை இழுவைப் படகுகள் பற்றி எதுவுமே சொல்வதில்லை...ஏன்..?

இழுவைப் படகுளாலும் மடிவலைகளாலும் வளம் பெறுவது ஏழை மீனவர்கள் அல்ல.அவைகளின் உரிமையாளர்களாக இருக்கின்ற பெருமுதலைகள்தான் அதன் பயனாளிகள். மீனவர்கள் அந்தப் படகுகளில் கூலிக்குத்தான் வேலை செய்கிறார்கள்.கூலிக்கு வேலை செய்யப்போயத்தான் குண்டடிபட்டுச் சாகிறார்கள்.

அந்நியச் செலாவணிக்காக இந்தியாவின் உள்நாட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைப் பற்றிக் கவலைப்படுகின்ற நாம் உலகத்தின் மிகச் சிறந்த உயிர்க் கோளப்பகுதியான மன்னார் வளைகுடாவின் கடல் வளம் சுரண்டப் படுவதைப் பற்றியும் கவலைப்படவேண்டும்.

இந்திய அரசு மடிவலையையும் இழுவைப் படகுகளையும் தடை செய்து அதன் மூலமாகப் பெரு முதலைகளின் சுரண்டலைத் தடுத்து  மீனவர்கள் தங்களிடையே ஏற்றத் தாழ்வின்றி தங்களின் பாரம்பரியமான முறையிலேயே மீன்பிடித் தொழில் செய்து தாங்களும் வளமாக வாழ்ந்து தங்களுடைய வருங்காலச் சந்ததிகளும் நலமாய் வாழ் வழி செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களின் உயிருக்கு எமனாக இருக்கின்ற இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க வேண்டும்.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக