புதன், 24 அக்டோபர், 2012

ரயிலில் ஒரு பாடம்







சென்ற வாரம் ரயிலில் ஊருக்குப் போனேன்.தட்கலில் பயணச்சீட்டு வாங்கியிருந்தேன்.எக்மோரிலிருந்து 9.40க்கு ரயில் புறப்பட்டபோதுதான் நான் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் ஏறினேன்.இரண்டாம் வகுப்பு படுக்கைதான்.அந்த அளவுக்குத்தான் நமக்கு வசதி.

என்னுடைய கீழ்ப் படுக்கையில் தோள் பையை வைத்துவிட்டு உட்கார்ந்ததுதான் தாமதம்.ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லிம் பெரியவர் ' தம்பி ' என்று அழைத்தார்.பக்கத்திலேயே அவரது மனைவியும் இருந்தார்.

' இந்த அம்மாவுக்கு நடுப்படுக்கை கெடைச்சிருக்கு.இவுங்களால ஏறி இறங்க முடியாது.நீங்க அங்க படுத்துக்கிறீங்களா ..? ' என்றார்.நான் உடனேயே எழுந்து தோள்பையை எடுத்து நடுப்படுக்கையில் வைத்துவிட்டு அந்த அம்மாவைப் பார்த்து ' படுத்துக்குங்க ' என்றேன்.

அந்த அம்மா கீழ்ப்படுக்கையில் உட்கார்ந்ததும் கேட்டார்..' தம்பி..அவருக்கு அந்த மேல்படுக்கை .அவருக்கு முடியலை.நீங்க அதுல படுத்துக்கிறீங்களா..? '
அடுத்து பெரியவர் சொன்னார். ' வயசை விபரமா எழுதிக்கொடுத்தும் மேல்படுக்கை கொடுக்கிறாங்களே.என்ன அநியாயம் இது..? '

 நான் பையை எடுத்து எதிரே இருந்த மேல்படுக்கையில் வைத்துவிட்டு ஏற முயன்றபோது பெரியவர் கேட்டார். ' தம்பி, உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லையே..? '

இப்படி அவர் கேட்டபோது உண்மையாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் அவர் இப்படிக்கேட்டதுதான் வருத்தமாக இருந்தது. என்னுடைய கணினியில் இருந்து IRCTC க்கு ஆன்லைன் தொடர்பு வைத்திருப்பதால் வீட்டிலிருந்தபடியே பயணச்சீட்டு பதிவு செய்துகொள்வது எனது வழக்கம்.அதன்படி முந்தைய நாள் 10 மணிக்கே முதல் ஆளாக ஆன்லைனில் நுழைந்து கீழ்ப்படுக்கை வாங்கிவிட்டேன்.

.பாவம் பெரியவரின் மகனோ மருமகனோ கவுண்டரில் வரிசையில் நின்று சீட்டு வாங்கி யிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை.அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிய படுக்கை கிடைக்காமல் பறித்துக்கொண்டது நான்தானே.உரியவர்களுக்கு உரிய இடம் கிடைக்கவேண்டும் அல்லவா.? அந்தப் பெரியவர் கேட்டதுபோல இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது..?சரிதானே..?




' நல்லா கேட்டாருயா கேள்வி..' படிக்க சொடுக்கவும்
http://thenpothikai.blogspot.in/2012_08_01_archive.html


' கே.பி சுந்தராம்பாளின் அபூர்வ புகைப்படங்கள் ' பார்க்க சொடுக்கவும் 
http://thenpothikai.blogspot.in/2012/08/blog-post_6744.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக