புதன், 21 நவம்பர், 2012

அதிபுத்திசாலி அரசுப் பேருந்து அதிகாரிகள்








தென்னக ரயில்வேயின் வலைத்தளத்தில் நிகழ்ந்த நெரிசலால் தட்கல் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் போனது. அன்றே கிளம்பியாக வேண்டியிருந்ததால் அரசு விரைவுப் பேருந்தில் இட நிலவரம் பற்றி விசாரித்தேன். மாலை வந்து பேருந்திலேயே பயணச் சீட்டு வாங்கிக் கொள்ளும்படி சொன்னார்கள். அதன்படி இரவு 7.30 மணிக்கு பேருந்து நிலையத்துக்குப் போனேன்.

புறப்படத் தயாராயிருந்த பெருநதில்  40 ஆம் இருக்கையில் அமரும்படி சொன்னார் நடத்துனர்.கடைசி வரிசையில் கடைசி இருக்கை .நிலமை அவசரம் . வேறு பேருந்து பார்க்க நேரமும் கடந்து விட்டதாகையால் பேருந்துக்குள் ஏறினேன். உள்ளே 40 ஆம் என் இருக்கையே இல்லை. கீழே இறங்கி நடத்துனரிடம் சென்றேன்.

' 40 ஆவது சீட்டுல உக்காரச் சொன்னீங்க, 40 ஆவது நம்பர் சீட்டே இல்லையே. 'என்று கேட்டேன். அவர் சொன்னார்.

' இருக்கு பாருங்க சார். '

' பாத்துட்டுத்தானே வந்து சொல்றேன்...'

'உங்களுக்கு சீட்டுதானே வேணும்.பின்னாடி கடைசி சீட்டுல உக்காருங்க. '

' அது 36 வது சீட். நீங்க சொன்ன மாதிரி 40 இல்ல.

பேருந்து நடத்துனர் இப்போது மிகவும் சலிப்படைந்து போனவராகத் தோன்றினார்.

' சார் ..வேணுன்னா  எல்லா சீட்டையும் எண்ணிப் பாருங்க எண்ணிப் பார்த்துட்டு 40 ல உக்காருங்க.'-  இது நடத்துனர் சொன்னது.

நான் சொன்னேன்- ' 36 வரைக்கும் தாங்க நம்பர் போட்டிருக்கு.அப்புறம் எப்படி 40 வரும்..? '

சிறிது தயங்கிய நடத்துனர் வேறு வழியில்லாமல் இப்போதுதான் உண்மையைப் போட்டு உடைத்தார்.

' அய்யா.ஆறு மாசத்துக்கு முன்னால பஸ்சுக்குள்ள இருந்த சீட்டெல்லாம் புடிங்கி எடுத்துட்டு நாலு எக்ஸ்ட்ரா சீட்டு சேத்து மாட்டியிருக்காங்க மொதல்ல இருந்தது 36. இப்ப இருக்கறது 40. ' என்று வெறுப்பாகச் சொல்லி விட்டு விடுவிடுவென்று போய்விட்டார்.




இந்தப் புதிய ஏற்பாடு விரைவுப் பேருந்துகள் மட்டுமல்லாமல் மாநகரப் பேருந்துகளிலும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.. இவ்வளவு திறமையாக ஏமாற்றுபவர்கள் அந்தப் பழைய எண்களை அழித்து விட மறந்து விட்டார்கள்.

என்ன ஒரு அதி புத்திசாலித் தனமான யோசனை பாருங்கள். பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ளக் கூடாது. அதே நேரம் வசூலை அதிகரிக்க வேண்டும். அதற்காக அதிக இருக்கைகளைப் பொருத்தி பயணிகளை காலைக் கூட நீட்ட விடாமல் இம்சை செய்தாவது  பணம் பிடுங்கும் இந்த யோசனையை சொன்னது யாராக இருக்கும்...?

வேறு யார்..வாங்கும் புது டயர்களை வெளியில் விற்றுவிட்டு மாட்டி விட்டதாகக் கணக்கெழுதுகின்ற.....லாபகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற அரசுப் பேருந்துத் தடத்தைக் குறிவைத்து  அதில் பினாமி பெயரில்  பஸ் ஓட்டி அரசுப் பேருந்தை முடங்க வைக்கின்ற.. ..இன்னும்  எத்தனையோ வழிகளில் மக்களின் பணத்தைச் சுரண்டி வாழ்கின்ற அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவராகத்தான் இருக்கும்.

அவரும் அவர் குடும்பமும் வாழ்க... வளர்க..ஆமென்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக