புதன், 14 நவம்பர், 2012

மஞ்சள் சுரிதார் -சிறு சிறுகதை

                                 

                     


சுமதிக்கு தோழி சந்திரா மீது பயங்கரக் கோபம். காரணம் சின்னதுதான்.

திடீரென்று கொட்டித் தீர்த்த பேய்மழையால்   தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாற , வீடுகளை இழந்து மாற்றுத் துணி கூட இல்லாமல் தவித்த ஜனங்களுக்காக தன்னார்வத் தொண்டர்கள்  நாடு முழுவதும் நன்கொடைகள் சேகரித்தார்கள்.

சுமதியின் கல்லூரி விடுதிக்கும் அப்படி ஒரு குழு வந்து துணிகளை சேகரித்த போது சந்திரா தன்னுடைய சில உடைகளைக் கொடுத்தாள். சுமதி அப்போது அறையில் இல்லாததால் சுமதியின் சார்பாக அவளுடைய பழைய சுரிதார் ஒன்றையும் கொடுத்து விட்டாள் .அதுதான் தப்பாகி விட்டது.

 மஞ்சள் கலரில் சிவப்புப் பூக்கள் போட்ட அந்த சுரிதார் சுமதியின் பேவரிட் ஆடையாம். அதை எப்படிக் கொடுக்கலாம் என்று சந்திராவோடு சண்டைக்கு வந்துவிட்டாள்  சுமதி. நாள் முழுவதும் நடந்த சண்டை ஒரு வழியாக சாயந்திரமாகத்தான் முடிவுக்கு வந்தது.

அன்று இரவு பத்து மணிக்கு டீவீயில் புயல் அபாயம் பற்றிய செய்தி ஒன்று ஒளிபரப்பானது. காலையில் அந்தப் புயல் சென்னையை நோக்கி நகருவதாக அறிவிக்கப்பட்டது. மத்தியானம் ஒரு மணிக்கு வரப்போகும் ' தானே ' புயல் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று விடுக்கப்பட்ட  எச்சரிக்கை பெரும்  பீதியைக் கிளப்பியது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.சுமதியின் கல்லூரி நிர்வாகம் விடுதியை மூட முடிவெடுத்து மாணவிகளை உடனடியாக சொந்த ஊர்களுக்குப் போய்விட உத்தரவிட்டது.

கோயம்பேட்டில் பஸ் ஏறியபோதே லேசாக மழை தூறத் தொடங்கியது. பலத்த மழைக்கிடையில்தான் சுமதி கிராமத்தில்  இறங்கி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள் .அப்போதே காற்றும் ஆரம்பித்து விட்டது. ஓலைக் குடிசைக்கு வெளியே மழையின் இரைச்சலும் காற்றின் ஓலமும் கேட்க மின்சாரம் இல்லாத இரவு நெஞ்சில் பயத்தை ஏற்படுத்தியது.

விடிகாலையில் துவங்கியது அந்த பயங்கரம். கடலூருக்கு அருகே கரையேறத் தொடங்கிய தானே புயல் கோரத் தாண்டவமாடி சுற்று வட்டாரப் பகுதிகளைப் புரட்டிப் போட்டது. மரங்கள் பிடுங்கி எறியப்பட்டன. வீடுகள் பிய்த்தெறியப் பட்டன.


புயல் கரை கடந்த பல மணி நேரங்களுக்குப் பிறகு ஒரு தொண்டுக் குழு படகுகளில் வந்து இறங்கியது. வீடுகளை ..உடைமைகளை இழந்து வெட்டவெளியான மேட்டுப் பகுதிகளில் பசியோடும் குளிரோடும் போராடிக்கொண்டிருந்த மக்களுக்கு தொண்டர்கள் சாப்பாட்டுப் பொட்டலங்களையும்  போர்வைகளையும் மாற்று உடைகளையும் வழங்கினார்கள்.

கூட்டத்தோடு கூட்டமாக குந்தி அமர்ந்திருந்த சுமதியும் கைநீட்டினாள் .அவள் கைகளில் ஒரு மாற்றுடை வைக்கப்பட்டது. அது மஞ்சள் கலரில் சிவப்புப் பூக்கள் போட்ட சுரிதார்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக