வெள்ளி, 16 நவம்பர், 2012



 பயணங்கள் ' சிறுகதை 


வ்வொரு பெட்டியாக தடதடத்தபடி கிராசிங்கைக் கடந்து கொண்டிருந்தது ரயில். பஸ்சுக்குள் இருப்புக் கொள்ளாமல் கீழே இறங்கி ரயிலை வேடிக்கை பார்த்தான் வெங்கட்.

ஜன்னலோரமாகத் தெரிந்தன விதம் விதமான முகங்கள். இவர்களுக்காக

இரக்கப்படலாமா  என்று ஒரு கணம் யோசித்த மனம் மறுகணமே அதை மாற்றிக் கொண்டது. டாட்டா காட்டிய ஒரு குழந்தையின் உருவம் மறுபடியும் மனதில் சிறு நெருடலை ஏற்ப்படுத்தியது.

ஆனால் இந்த நேரத்தில் அவன் பார்த்தாக வேண்டும் என்று விரும்பிய அந்த முகங்கள் முதல் வகுப்பு குளிர் அறைக்குள் மூடப்பட்டுக் கிடந்தன.


' போங்கடா,,,போங்க..'


கடைசி சில பெட்டிகள் கடந்து கொண்டிருந்தன. ஒரு இனம் புரியாத நிறைவோடு  பஸ்சுக்குள் ஏற எத்தனித்தபோது கண்ணில் பட்ட ஒரு காட்சி அனிச்சையாக வெங்கட்டை இழுத்து நிறுத்தியது. கண்கள் சுருங்கி காட்சியை போகஸ் செய்தன.


கடந்து கொண்டிருந்த ரயிலின் ஜன்னலோரமாக வெங்கட்டின் அம்மாவும் அப்பாவும் உட்கார்ந்திருந்தார்கள்.வெங்கட்டின் உடல் ஒருமுறை அதிர்ந்து நின்றது.


' இவர்கள் எப்படி இந்த ரயிலில்...? '


ரயில் தொலைவில் சென்றதும் ரெயில்வே கிராசிங் கதவுகள் திறந்தன. காத்திருந்த வண்டிகள் நகர ஆரம்பித்தன. பஸ்சுக்குள்ளிருந்து யாரோ கூப்பிட்டது வெங்கட்டின் காதுகளில் விழவேயில்லை.அவனுடைய உள்மனம்

வேக வேகமாக சூழ்நிலையை அனலைஸ் செய்தது..

' இவர்கள் எப்படி இந்த ரயிலில் ..? '


காசி யாத்திரை போய்வரவேண்டும் என்று அவர்கள்  ரொம்ப நாளாகவே சொல்லிக்கொண்டுதான் இருந்தார்கள்.ஆனால் திடுதிப்பென்று அவர்கள் கிளம்பி விடுவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.


இது அவர்களுடைய தப்பில்லை.மகன் உயிரோடு இருக்கிறானா என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள வழியில்லாத நிலையில் விடப்பட்டிருக்கும் அவர்களிடமிருந்து அவன் எதை எதிர்பார்க்க முடியும்..?


' ஆனால் அவர்கள் ஒருபோதும் காசிக்குப் போகப் போவதில்லையே....சாவை நோக்கியல்லவா அவர்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள்..'


பெற்ற மகனே திட்டமிட்டுத தீட்டிய சதியில் சிக்கிச சிதையப்போகும் ரயிலில் அவர்கள் சந்தோஷமாகப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.


சட்டென்று நினைவுகளிலிருந்து விடுபட்ட நக்சலைட் வெங்கட ரெட்டி கடைசியாக ஒரு பையன் தன்னுடைய பல்சரைக் கிளப்பிக் கொண்டிருப் பதைப் பார்த்தான்.அவனை அப்படியே சீட்டிலிருந்து பிடுங்கிப் போட்டுவிட்டு வண்டியில் ஏறிய வெங்கட ரெட்டி திரும்பி சாலையிலிருந்து விலகி மரங்களுக்கிடையே இருந்த ஒத்தையடிப் பாதை வழியாக குறுக்கு வழியில் ரயிலைத் துரத்தத் தொடங்கினான்.


ண்டவாளத்துக்கு அருகே புதர்களில் மறைந்திருந்த தோழர்கள் மூவரும் தொலைவில் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு அடுத்த நடவடிக்கைக்குத் தயாரானார்கள்.அப்போது பின்புறத்திலிருந்து கேட்ட வாகனச் சத்தத்தில் உஷாரான தோழர்களின் கைகள் துப்பாக்கிகளை உயர்த்தின.உயர்த்திய வேகத்திலேயே துப்பாக்கிகள்  கீழே தாழ்ந்தன.


வெங்கட ரெட்டியின் வேண்டுகோள்கள் ,மன்றாடல்கள் எதுவும் தோழர்களிடம் பலிக்கவில்லை.


' எல்லாவற்றையும் துறந்துவிட்டுத்தான் இயக்கத்துக்கு வந்திருக்கிறோம். இங்கே ஆசாபாசங்களுக்கு இடமில்லை.ஆபரேசன் ஏற்கனவே துவங்கிவிட்டது.எந்தக் காரணத்துக்காகவும் அதை நிறுத்த முடியாது.' 


அவர்கள் உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது. வெங்கட்டுக்கு எந்த வழியும் தெரியவில்லை.பிடித்து இழுத்த தோழர்களை உதறிவிட்டு தண்டவாள த்தில் ஏறி ரயிலை நோக்கி ஓடினான்.


யிலின் ஓட்டுனர் திடீரென்று எதிரே சிவப்பு நிறத்தைப் பார்த்தார்.அது என்னவென்று அவர் புரிந்துகொள்வதற்குள் கையில் சிவப்பு நிறக் காட்டுப் 

பூக்களோடு  தண்டவாளத்தின் மீது ஓடி வந்துகொண்டிருந்த அந்த இளைஞனை ரயில் நெருங்கிவிட்டிருந்தது.அதே நேரத்தில் அந்த இளைஞன் தடுமாறி தண்டவாள த்தின் மீது குப்புற விழுவதையும் ரயிலின் ஓட்டுனர் பார்த்தார்.அவசரமாக பிரேக்கை இழுத்தார்.

போலீஸ் மோப்பநாய் தண்டவாளத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை கண்டுபிடித்து விட்டது.வெடிகுண்டு அப்புறப் படுத்தப்பட்டு பல கிலோமீட்டர்களுக்கு தண்டவாளம் முழுமையாகச் சோதிக்கப்பட்டபின் ரயில் கிளம்பத் தயாரானது.முதுகில் தோழர்களின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து ரயில் மோதியதில் முகம் சிதைந்து கிடந்த வெங்கட ரெட்டியின் உடல் அப்புறப் படுத்தப்பட்டபோது அதைப் பார்த்து வெங்கட ரெட்டியின் தாய் சொன்னார் .


' .யார் பெத்த பிள்ளையோ ..பாவம்..'











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக