திங்கள், 28 ஜனவரி, 2013

100 ஆண்டு தமிழ் சினிமா.-பாகம்-1


அபூர்வப் புகைப் படங்களையும் காட்சிகளையும் கொண்டு ஆவணப் படமாக உருவாகிக் கொண் டிருக்கின்ற 100 ஆண்டு தமிழ்த் திரையின் வரலாறு இங்கே எழுத்துருவாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.


100 ஆண்டு தமிழ் சினிமா 

                                                                                                           
தினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் 1897 ஆம் ஆண்டில் சென்னையில் குடியிருந்த ஆங்கிலேயர்களுக்காக கதையம்சம் எதுவுமில்லாத சாதாரண நிகழ்வுகளைக் கொண்ட சத்தமில்லாத துண்டுப் படங்கள் விக்டோரியா ஹாலில் திரையிடப்பட்டன. அண்ணா சாலையில் தற்போது அமைந்துள்ள அஞ்சல் அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு கட்டிடத்தில் ' எலெக்ட்ரிக் தியேட்டர்' என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அங்கேயும் இம்மாதிரிப் படங்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன.

மவுனப் படங்கள் 

திருச்சியில் வசித்த ' சாமிக்கண்ணு வின்சென்ட்' என்பவர் ' [Du Pont ]  டூபாண்ட் 'என்ற பிரஞ்சுக்காரரிடம் இருந்து திரையீட்டுக் கருவி யையும் துண்டுப் படங்களையும் விலைக்கு வாங்கி ஊர் ஊராகச் சென்று கொட்டகை அமைத்து படங்களைத் திரையிட்டார்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் 1909 ஆம் ஆண்டில் சென்னைக்கு வருகை தந்தபோது இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட படத்தோடு ஓசையையும் தரக்கூடிய ' குரோன் மெகபோன் ' என்ற கருவியை ரகுபதி வெங்கையா என்பவர் விலைக்கு வாங்கி ஒரு தற்காலிக சினிமாக் கொட்டகையைத் தொடங்கினார்.1912 ஆம் ஆண்டில் அது ;கெயிட்டி' என்ற பெயரில் சென்னையின் முதல் நிரந்தர திரை அரங்கமாக மாற்றப்பட்டது.

1916 ஆம் ஆண்டில் நடராஜ முதலியார் என்ற மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பவருக்கு ஏற்பட்ட திரைப்பட ஆர்வத்தால் லண்டனுக்குச் சென்று ' ஸ்டீவர்ட் ஸ்மித் ' என்ற ஒளிப் பதிவாளரிடம் பயிற்சி பெற்று வந்து புரசைவாக்கம் மில்லர் சாலையில் இந்தியா பிலிம் கம்பனி லிமிடட் ' என்ற நிறுவனத்தைத் தொடங்கி ' கீசக வதம்' என்ற மவுனப் படத்தை இயக்கித் தயாரித்தார்.1917 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்பட மாகும்.

1918 ஆம் ஆண்டில் இந்தியாவில் திரைப்படத் தணிக்கை முறை அமலாகப்பட்டதை அடுத்து சென்னையில் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது.

ரகுபதி வெங்கையாவின் மகனான ரகுபதி பிரகாஷ் ஹாலிவுட் மற்றும் ஜெர்மனியில் திரைப்படப் பயிற்சி பெற்று வந்து ' மீனாட்சி கல்யாணம்' என்ற திரைப்படத்தை தன தந்தையுடன் இணைந்து தயாரித்தார்.இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் திரையில் தலையில்லாமல் தோன்றியது இந்தப்படத்தின் ஒரு விரும்பத்தகாத சிறப்பு.ரகுபதி பயன் படுத்திய 35 m.m Williamson  வில்லியம்சன் கேமராவின் லென்ஸ் தொழில்நுட்பத்தில் இருந்த கோளாறுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்பது பின்னால் தெரியவந்தது.

பின்னாட்களில் வெற்றிகரமான இயக்குனராகத் திகழ்ந்த ரகுபதி பிரகாஷ் இங்கேயே கிடைத்த பொருட்களைக் கொண்டு தனது வீட்டில் ஒரு தொழிற்க்கூடத்தை அமைத்து கையாலேயே படச் சுருள்களைப் பதப்படுத்தினார்.

அந்தக் காலக்கட்டத்தில் கதாநாயகனாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இன்னொருவர் கி.நாராயணன்.' கருட கர்வ பாகம்[1920],'பீஷ்ம பிரதிக்னா '[1922],'கஜேந்திர மோட்சம்']1930]ஆகிய படங்கள் மவுனப் படவுலகில் முக்கியமானவையாகும்.

.ஒய் .வி.ராவ் என்ற இயக்குனர் 1930 ஆம் ஆண்டில் ' பாண்டவ நிர்வாணா', சாரங்கதாரா' ஆகிய படங்களை வெளியிட்டார்.1931 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'லைலா' என்ற படம் ஏராளமான அரை நிர்வாணக் காட்சிகளையும் உதட்டோடு உதடு இணைந்த நேரடியான முத்தக் காட்சிகளையும் கொண்டிருந்தது என்றால் நம்ப முடிகிறதா ? அந்தக் காலக் கட்டத்தில் பாலுணர்வுக் காட்சிகளை விட அரசியல் சார்ந்த காட்சிகளே தணிக்கையாளர்களால் பிரச்னைக்குரியதாகக் கருதப்பட்டன.

கதாநாயகனாகவும் இயக்குனராகவும் திகழ்ந்த 'ராஜா சாண்டோ' என்று அழைக்கப்பட்ட புதுக்கோட்டை P.K.நாகலிங்கம் மற்றும் அஸ்ஸோஸியேட் பிலிம் கம்பெனியை உருவாக்கிய தயாரிப்பாளர் பத்மநாபன் ஆகியோர் மவுனப் படக் காலத்துப் பிரபலங்கள் ஆவார்கள்.


டி .பி.ராஜலட்சுமி  

இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ' ராஜேஸ்வரி' என்ற மவுனப்படத்தின் கதாநாயகியான டி .பி. ராஜலட்சுமி பிற்காலத் தில் பேசும்படக் கதாநாயகியாகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் 1950ஆம் ஆண்டுவரை தமிழ்த திரையில் கோலோச்சி வந்தார்.இந்தியாவின் முதல் பெண் இயக்குனராக மட்டுமல்லாமல் அனேகமாக உலகின் முதல் பெண் இயக்கு னராகவும் திகழ்ந்தவர் இவர்

ஸ்டண்ட் ராஜூ மற்றும் பாட்லிங் மணி ஆகியோர் மவுனப் படக் காலத்துப் பிரபல கதாநாயகர்கள் ஆவார்கள்.

கதைக் களத்தோடு வெளியான மவுனப் படங்களுக்கு உயிரோட்டம் கொடுக்கும் விதமாக படம் ஓடிக்கொண்டிருக்கும் போது ஆர்மோனியம் மற்றும் தபேலா ஆகிய இசைக் கருவி களைக் கொண்டு நேரடியாக பின்னணி இசை கொடுக்கப் பட்டது.திரை ஓரமாக ஒருவர் நின்றுகொண்டு கதை ஓட்டத் தையும் கதாபாத்திரங்கள் பேசுகின்ற வசனங்களையும் உணர்ச்சி பூர்வமாக விவரித்து பார்வையாளர்களை படத்தோடு ஒன்றச் செய்தார்.

சிறிய நகரப் பகுதிகளில் மேள  தாள இசையோடு மாட்டு வண்டிகளில் ஊர்வலம் வந்து படங்களுக்காக விளம்பரம் செய்யப்பட்டது.1940 ஆம் ஆண்டுக் காலம் வரையிலும் இந்த விளம்பர முறை நடைமுறையில் இருந்தது.

 பேசும் படங்கள் 


1931ஆம் ஆண்டில் பேசும் படங்கள் வெளிவரத் துவங்கி மக்களிடையே பெரும் தாக்கத்தை உண்டாக்கின. திரையில் பேசி ஆடிப் பாடும் மனிதர்களைக் கண்டு மாயாஜாலமோ என மக்கள் மயங்கினார்கள்.

தமிழின் முதல் பேசும்படமாக பாம்பேயில் உருவான ' காளிதாஸ் ' என்ற படத்தில் கதாபாத்திரங்கள் தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும் பேசினார்கள்.1932 ஆம் ஆண்டில் வெளிவந்த ' காளவாரிஷி ' என்ற படம்தான் முழுவதுமாகத் தமிழில் உருவான படமாகும்.இந்தப் படத்தின் மூலமாக ஜி.ராமநாதன் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றார்.

1933 ஆம் ஆண்டில் ' சீதா கல்யாணம் ' என்ற படம் வெளியானது. அதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் பிற்காலத்தில் கதாநாயகனாக, இயக்குனராக, இசைக்கலைஞனாக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக பன்முகத் திறன் பெற்று விளங்கினான்.அவர் வீணை மேதை எஸ்.பாலச்சந்தர்.

அதே படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் பிற் காலத்தில் ஏராளமான புகழ் பெற்ற பாடல்களைத் தந்தார். பாரம்பரிய இசைக்கலைஞ்னாகப் பரிணமித்தார். அவர் இசை மேதை பாபநாசம் சிவன்.

அதே ஆண்டில் வெளிவந்த ' வள்ளிதிருமணம் 'வசூல் சாதனை படைத்த முதல் தமிழ்த திரைப்படம் என்றால் அடுத்த ஆண்டு 1934 ல் வெளியான ' பாமா விஜயம் 'அதையும் விஞ்சி வசூல் சாதனை படைத்தது.

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஆர்.பிரகாஷ் 'திரவ்பதி வஸ்திராபகரணம் ' என்ற படத்தில் ஒரே ப்ரேமில் ஐந்து கிருஷ்ணர்களைப் பதிவு செய்து தொழில்நுட்பம் குறைந்த அந்தக் காலத்தில் பெரும் புரட்சியை உண்டாக்கினார்.

தமிழ்நாட்டில் பேசும் படத்தினை உருவாக்குவதற்கான எந்த வசதியும் அப்போது இல்லாதிருந்ததை உணர்ந்து தயாரிப்பாளர் கி. நாராயணன் 1934 ஆம் ஆண்டில் 'ஸ்ரீனிவாசா சினிடோன் 'என்ற படப்பிடிப்புத் தளத்தையும் ; சவுண்ட் சிட்டி ' என்ற ஒலிப்பதிவுக் கூடத்தையும் உருவாக்கினார்.

நாராயணின் மனைவியான மீனாட்சி கணவரின் ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி தென்னிந்தியத் திரைப்படத் துறையின் முதல் பெண் தொழில்நுட்ப வல்லுனராகப்  பெயர் பெற்றார்.

 சூப்பர் ஸ்டார் 

1934ஆண்டு கிருஷ்ணசாமி சுப்ரமணியம் என்ற  சட்ட வல்லுநர் இயக்கிய ' பவளக்கொடி ' என்ற படம் வெளியானது.பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்று தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆன எம்.கே.தியாகராஜா பாகவதர் அதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.தயாரிப்பாளர் கிருஷ்ணசாமியின் ' கிருஷ்ணசாமி அஸோஸியேட்' நிறுவனம் இன்றும் ஆவணப் படத் தயாரிப்பில் முன்னணியில் நிற்கிறது. 

தனது கம்பீரக் குரல்வளத்தால் மேடை நாடகங்களில் புகழ் பெற்றிருந்த கே.பி.சுந்தராம்பாள் 1935 ஆம் ஆண்டில் வெளியான ' நந்தனார் ' படத்தில் ஆண் வேடத்தில் நடித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.அதை விடவும் சிறப்பான இன்னொரு தாக்கமும் அந்தப் படத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டது.நந்தனார் படத் துக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று கே.பி.சுந்தராம்பாள் பெரிய சாதனை படைத்தார். 

1935 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த மற்றுமொரு வெற்றிப் படமான ' மேனகா 'மேடை நாடகமாக நடத்தப்பட்ட போது அதில் நடித்திருந்த டி .கே.சண்முகம் மற்றும் டி .கே. முத்துசாமி சகோதரர்கள் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகி பின்னாட்களில் பெரும் புகழ் பெற்றார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன் 

தமிழ்த் திரைப்பட ரசிகர்களை தனது நடிப்பாலும் சீர்திருத்தக் கருத்துக்களாலும் சிறைப்படுத்திய ' கலைவாணர் ' என்று புகழப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணனும் இந்தப் படத்தில்தான் அறிமுகப் படுத்தப் பட்டார். தொடர்ந்து வந்த பல படங்களில் இணைந்து நடித்த என்.எஸ். கிருஷ்ணனும் டி .ஏ .மதுர மும் வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் தனது காட்சிகளைத் தானே எழுதி இயக்கிப் படமாக்கிக் கொடுத்ததும் நிகழ்ந்தது.

1936 ஆம் ஆண்டில் வெளியான குடிப்பழக்கத்தின் கேடுகளை விவரிக்கும் ' சதி லீலாவதி ' திரைப்படம் தமிழ்த் திரை உலகத்துக்கு மிகப்பெரும் மேதைகள் பலரை அறிமுகம் செய்தது.கதாசிரியரான எஸ்.எஸ்.வாசன்,கதாநாயகரான எம்.கே ராதா,டி .எஸ். பாலையா,எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் இந்தப் படத்தில் அறிமுகமாகி பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் சிகரம் தொட்டார்கள்.

அமெரிக்க நாட்டிலிருந்து வந்த எல்லிஸ்.ஆர்.டங்கன் இந்தப் படத்தை இயக்கி அதன்பின் அடுத்தடுத்து பல தரமான வெற்றிப் படங்களைத் தந்தார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற ' சிந்தாமணி '1937 ஆம் ஆண்டில் வெளியாகி ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது.இந்தப் படத்தின் வருவாயைக் கொண்டு படத்தின் தயாரிப்பாளர்கள் மதுரை நகரில் சிந்தாமணி திரையரங்கத்தைக் கட்டினார்கள்.

ஆரம்ப காலச் சிறந்த தமிழ்ப் பத்திரிகைகளில் ஒன்றான ' மணிக்கொடி தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய நிறைகுறைகளை எழுதி வந்தது.நாளடைவில் அதில் பணி  புரிந்த இளங்கோவன்,பி.எஸ்.ராமையா போன்றவர்கள் திரைத் துறையில் இணைந்து சிறந்த கதை ,வசன எழுத்தாளர்களாகத் திகழ்ந்தார்கள்.1937 ல் வந்த தியாகராஜ பாகவதர் நடித்த 'அம்பிகாவதி ' திரைப்படத்துக்கு இளங்கோவன் எழுதிய இலக்கிய நயத்தோடு கூடிய வசனங்கள் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டன. 

பாகவதர் நடித்த இன்னொரு படமான ' ஹரிதாஸ் ' சென்னை பிராட்வே அரங்கத்தில் மூன்று தீபாவளிப் பண்டிகைகளைக் கண்டு நூற்றுப்பத்து வாரங்கள் தொடர்ந்து ஓடிச் சாதனை படைத்தது.

இதயத்தை வருடுகின்ற இனிய குரலால் உலகப் புகழ் பெற்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி தமிழ்த் திரைக்கு அறிமுகமானது 1938 ஆம் ஆண்டு. கே.சுப்ரமணியம் தயாரித்து இயக்கிய ' சேவாசதனம் 'படத்தில் அறிமுகமான அவர் பின்னாளில் பாரம்பரிய இசையில்[Classical ] மிகப்பெரிய பரிமாணத்தோடு விளங்கினார்.

;ஸ்ரீவள்ளி ' படத்தில் பாடி நடித்துப் பெயர் பெற்றார் டி .ஆர். மகாலிங்கம் .'செந்தமிழ் தேன்மொழியாள் 'என்ற அவர் பாடிய பாடல் இன்றளவும் இளமையோடு இசைக்கக் கேட்கலாம்.' 

மேலைநாட்டுக் கல்வியும் நாகரிகமும் கற்றிருந்த திருச்செங் கோட்டைச் சேர்ந்த டி .ஆர். சுந்தரம் 1937 ஆம் ஆண்டில் சேலம் நகரில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி வெளி நாட்டுத் தொழிநுட்பக் கலைஞர்களை வரவழைத்து புதுமையான தொழில்நுட்பங்களுடன் கூடிய சொந்த படப்பிடிப்புக் கூடத்தில் பல படங்களைத் தயாரித்தார்.ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 150 படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

 முதல் இரு வேடத் தமிழ்ப் படம் 

1940 ஆம் ஆண்டில் முதன்முதலாக வேற்று மொழி நாவல் ஒன்று தமிழ்த் திரைப்படமாக் கப்பட்டது.புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸின் 'The man In the Iron mask' என்ற நாவல் உத்தமபுத்திரன் என்ற தலைப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தால் படமாக்கப்பட்டு வெளியானது.இந்தப்படம் ஒரு நாயகன் இரட்டை வேடத்தில் நடித்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாகும்.இந்தப் படம் பி.யு .சின்னப்பா என்ற மற்றுமொரு மாபெரும் கலைஞனை அடையாளம் காட்டியது.'ஆரியமாலா', 'கண்ணகி', 'மனோன்மணி', 'ஜெகதலபிரதாபன்' போன்ற படங்கள் மூலமாக ரசிகர்கள் பி.யு.சின்னப்பாவை தியாகராஜ பாகவதருக்கு அடுத்த நிலையில் வைத்து அழகு பார்த்தார்கள்.

1940 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.வாசன் சென்னையில் ஜெமினி ஸ்டுடியோவைத் துவங்கினார்.அதே ஆண்டில் காரைக்குடியைச் சேர்ந்த ஏ .வி.மெய்யப்பச் செட்டியார் தேவகோட்டை அருகே தற்காலிகமாக ஒரு படப்பிடிப்புக் கூடத்தை நிறுவினார்.பின்னால் அது சென்னையில் ஏ .வி.எம்.ஸ்டுடியோவாக உருவானது.'நாம் இருவர்' என்கின்ற சிறப்பு வாய்ந்த தமிழ்ப்படம் ஏ .வி.எம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளியானது.தமிழ்த் திரையுலகின் மிகப் பழமை வாய்ந்த நிறுவனமான அது இன்றும் அதன் உரிமையாளர்களைப் போல மாறாத இளமையோடு துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஜெமினி ஸ்டுடியோவின் பிரமாண்டத் தயாரிப்பாக 1948 ஆம் ஆண்டில் வெளியான ' சந்திரலேகா ' பல மொழிகளில் உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்று இந்தியத் திரைப்படங்களின் ஒரு அடையாளமாக விளங்குகிறது.இந்தப் படத்தில் நடித்த எம்.கே.ராதா, ரஞ்சன் ,
 டி .ஆர். ராஜகுமாரி ஆகியோர் பின்னாட்களில் பெரும் புகழ் பெற்றார்கள்.

'நீல மலைத் திருடன் ' படத்தில் 'சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா' என்ற பாடலோடு ரஞ்சன் குதிரையில் வரும் காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்காது பதிந்து விட்ட ஒன்று.

நாடக நடிகையான கோபிசாந்தா ' மாலையிட்ட மங்கை' படத்தில் மனோரமாவாக அறிமுகம் ஆனார்.ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட அவர் அன்போடு 'ஆச்சி' என்று அழைக்கப் பட்டார்.1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனையைப் பதிவு செய்துள்ள அவர் பாடிய ' வா வாத்யாரே வூட்டாண்ட' என்ற பாடலைக் கேட்டதுமே நம் முகத்தில் புன்னகை பூக்கும்.

இந்தக் காலக் கட்டத்தில் எம்.கே.ராதா தமிழ்த் திரையுலகில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தார்.

இயக்குனர் சுந்தர்லால் நட்கர்னியின் சிபாரிசின் பேரில் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு 1946 ஆம் ஆண்டில் டி .எம்.சவுந்தரராஜனுக்கு பாடகராக வாய்ப்பளித்தார் .1950 ல் வெளியான 'கிருஷ்ண விஜயம் ' திரைப்படத்தில் சவுந்திரராஜன் பாடிய 'ராதே என்னை விட்டுப் போகாதேடி' என்ற தியாகராஜா பாகவதர் பாணியிலான பாடல் மிகப்பெரும் ஹிட் ஆக அதன்பின் சவுந்தரராஜனின் கலைப்பயணம் நிறுத்தமேயில் லாது தொடர்ந்தது.அவரது வெண்கலக் குரல் உச்ச நடிகர்களான எம்.ஜி.ஆர்.மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோரது இமாலய வெற்றிக்கு மிகப்பெரும் பக்க பலமாக இருந்தது என்று சொல்லலாம்.

அதே நேரத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ .எம்.ராஜா ஆகியோரும் மெல்லிசைப் பாடல்களின் மூலமாக ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்தனர்.

அரசியல் ஆதிக்கம் 

1940 களின் இறுதி வருடங்கள் தமிழ்த் திரையுலகின் மறு மலர்ச்சிக் காலம் என்று சொல்லலாம்.ஏனெனில் வருங்காலத் தில் தமிழ்நாட்டின் அரசியலில் செலுத்தப் பட விருக்கின்ற தமிழ்த் திரையுலகின் அபரி மிதமான ஆதிக்கத்திற்கு இந்தக் காலத்தில் தான் வித்திடப்பட்டது.

பிற்காலத்தில்  ' அண்ணா' என்று அழைக்கப்பட்ட சி.என்.அண்ணா துரை 1949 ஆம் ஆண்டு வெளியான 'வேலைக்காரி' படத்துக்கு கதை,வசனம் எழுதினார் .அடுத்து அண்ணாவின் சீடரான எம்.கருணாநிதி 'ராஜகுமாரி', 'பராசக்தி' மலைக்கள்ளன்', 'புதுமைப் பித்தன்'உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு எழுத்துப்பணி புரிந்தார்.  

'சதி லீலாவதி'யில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் 1947 ல் வெளியான 'ராஜகுமாரி'யில் கதா நாயகனாக நடித்தார்.அடுத்து 1954ல் வெளியான 'மலைக்கள்ளன்' படத்தின் மூலமாக நட்சத்திர அங்கீகாரம் பெற்ற எம்.ஜி.ஆர் தனக்கென்று தனிப்பட்ட பாணியையும் கொள்கைகளையும் கடைப்பிடித்து தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து அதன் மூலமாக மக்களிடம் செல்வாக்குப் பெற்று 1977ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சரானார்.ஒரு அதிசய மனிதராக இன்றளவும் தமிழ் மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பெற்று வாழ்கிறார்.

'கலங்காதிரு மனமே','கண்ணனின் காதலி' ஆகிய படங்களின் மூலமாக 1949ஆம் ஆண்டில் பாடலாசிரியராக அறிமுகமான முத்தையா என்ற கண்ணதாசன் பல்லாயிரக்கணக்கான பாடல் களைப் படைத்து 'கவியரசு'வாகி அனைத்துத் தரப்பினரின் அன்பைப் பெற்று அடுத்து வந்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்த் திரை யுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். 

'பராசக்தி'யில் [1952] ஞானசேகரனாக அறிமுகம் பெற்ற மேடைக் கலைஞர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது சீர்மிகு நடிப்பாலும் திருத்தமான தமிழ் உச்சரிப்பாலும் சிறப்புப் பெற்று 1950 முதல் 60 வரையிலான காலத்தில் எஸ்.எஸ்.ஆர் என்ற சிறப்புப் பெயருடன் தமிழ்த் திரையின் மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.


சிவாஜி கணேசன் 

அதே பராசக்தியில் கதாநாயகன் குணசேகரனாக வாழ்ந்த வி.சி.கணேசன் சிவாஜி கணேசனாகப் பட்டம் சூட்டப் பெற்று ஒரே படத்தில் ஒன்பது வேடங்களை ஏற்று நடித்து நடிப்புக்கு இலக்கணம் வகுத்து உலகத்தின் கவனத்தையே தன்பால் திருப்பி நடிகர் திலகமாகி அடுத்து வந்த அனைத்து நடிகர்களிடமும் தனது தாக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

'மிஸ் மாலினி' படத்தின் மூலமாக திரையுலகில் நுழைந்த இன்னுமொரு கணேசன் ஜெமினி கணேசனாகி தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்ததால் காதல் மன்னன் என்ற பட்டத் தோடு புகழ் பெற்றுத் திகழ்ந்தார்.

1950 ஆம் ஆண்டில் 'அவன் அமரன்' படத்தின் இசையமைப்பாள ராக அறிமுகமானார் கே.வி.மகாதேவன்.ஏறத்தாழ 600 படங் களுக்கு இசையமைத்துள்ள அவருடைய பாடல்களில் ' நலந்தானா','மன்னவன் வந்தானடி' போன்றவை என்றும் நம் நினைவில் நிற்பவை.

1952 ஆம் ஆண்டில் வெளியான 'பெற்றதாய்' படத்தில் ஏ .எம். ராஜாவோடு 'ஏதுக்கு அழைத்தாய்' என்ற டூயட் பாடலைப் பாடி அறிமுகமான பி.சுசீலா கேட்போரின் இதயங்களை வருடும் எண்ணற்ற பாடல்களைப் பாடி இசைக்குயில் என்ற பட்டத்தோடு ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்று தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார். 

சிவாஜியின் இரண்டாவது படமான 'பணம்' திரைப்படத்தின் இசையமைப்பாளர்களாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரு இளைஞர்கள் அறிமுகமாகி காலப்போக்கில் பலநூறு நெஞ்சில் நிறைந்த திரைப்பாடல்களைத் தந்தார்கள்.அதன்பின் விஸ்வ நாதன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனாக தனித்து இசைப்பணியைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான நினைத்தாலே இனிக்கும் பாடல்களைத் தந்தார்.

1954 ஆம் ஆண்டில் வெளியான கெட்ட சகவாசத்தால் சீரழிந்து போகின்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையை விவரிக்கின்ற ' ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்று தமிழ்த்திரையின் மிக சுவாரஸ்யமான குணச்சித்திர நடிகராக விளங்கினார்.

ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிகொஸ் என்ற இயற்பெயர் கொண்ட சந்திரபாபு இந்தக் கட்டத்தில் அறிமுகமாகி பின்னாட்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் பாடகராகவும் இயக்குனராகவும் தமிழ்த் திரையுலகில் ஒரு தனியிடத்தைப் பிடித்தார்.அவரது பாடல்கள் இன்றும் கேட்போரை மயங்கச் செய்கின்றன.

1955 ல் ;மகேஸ்வரி' என்ற படம் வெளியாகி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற மக்கள் கவிஞனை தமிழ்த் திரை யுலகுக்கு கொடையாகக் கொடுத்தது.

கோயம்புத்தூரில் அமைந்திருந்த பட்சிராஜா ஸ்டுடியோ 1950 முதல் 1960 வரையில் மிகப் பரபரப்பான படப்பிடிப்புக் கூடமாக இருந்தது.நாளைடைவில் சென்னையிலேயே ஸ்டுடியோக்கள் அமைந்து விட்டதால் பட்சிராஜா ஸ்டுடியோவின் தேவை குறைந்து போனது. 

1956 ஆம் ஆண்டில் சினிமா ஜாம்பவான் எல்.வி.பிரசாத் அவர்களால் துவங்கப்பட்ட பிரசாத் ஸ்டுடியோ இன்றளவும் ஒரு முழுமையான திரைப்படத் தயாரிப்புக் கூடமாகத் திகழ்ந்து வருகிறது.


முதல் வண்ணப் படம் 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1956ல் வெளியான 'அலிபாபா வும் நாற்பது திருடர்களும் 'படம்தான் தமிழ்த் திரை யுலகின் முதல் வண்ணத் திரைப் படமாகும்.

கூட்டிசை பாடி வந்த லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற எல்.ஆர். ஈஸ்வரி 1958 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவனால் 'பெரிய இடத்துச் சம்பந்தம்' என்ற படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டுப் புகழ் பெற்றார்.'வாராயோ தோழி வாராயோ'என்ற அவரது பாடல் தமிழ்நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளில் இன்றும் ஒலிக்கத் தவறுவதில்லை.

ஜெயசங்கர்,முத்துராமன்,ரவிச்சந்திரன்,சிவகுமார்,பி.எஸ்.வீரப்பா,எம்.என்.நம்பியார்,அசோகன், மேஜர் சுந்தரராஜன், ஆர்.எஸ். மனோகர், எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்காராவ், வி.கே. ராம சாமி,கே.ஏ .தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பின்னாளில் பத்திரிகையாளரான சோ ஆகிய நடிகர்களும் கண்ணாம்பாள், சாவித்திரி, பி.பானுமதி, அஞ்சலி தேவி, ஈ.வி. சரோஜா,சரோஜாதேவி,பத்மினி,சவுகார் ஜானகி, விஜயகுமாரி, கே.ஆர்.விஜயா,காஞ்சனா, ஜமுனா,சாரதா, வாணிஸ்ரீ,புஷ்பலதா,டி .பி.முத்துலட்சுமி,சச்சு ஆகிய நடிகை களும் 1960ஆம் ஆண்டு களின் இறுதி வரையிலும் தமிழ்த் திரையுலகில் பெரும் புகழோடு திகழ்ந்தார்கள். 

1961ஆம் ஆண்டில் தமிழ்த்  திரையுலகம் வாலி என்ற மகா கவிஞனை வரமாய்ப் பெற்றது.ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி தலைமுறை வித்தியாசங்களைத் தவிடு பொடியாக்கி தன எழுத்தில் இன்றும் இளமையோடு வாழ்கிறார்.அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் புனைந்த சாதனைச் சரித்திரமும் இவர் வசமே உள்ளது.

1962 ஆம் ஆண்டில் வெளியான மறக்க முடியாத திரைக்காவிய மான ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தின் மூலமாக அறியப்பட்ட நாகேஷ் 'சர்வர் சுந்தரம்; மூலம் கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்து தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்டார். .'காதலிக்க நேரமில்லை' செல்லப்பாவையும் ,'திருவிளையாடல் தருமியையும்,'எதிர்நீச்சல்' மாதுவையும் ,'தில்லானா மோகனாம் பாள்' வைத்தியையும் தமிழ் உலகம் எந்நாளும் மறக்காது.

ஏ .சி.திருலோகச்சந்தர்,ஏ .பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ் ணன்,சி.வி.ராஜேந்திரன்,ஸ்ரீதர், பி.மாதவன், பி.நீலகண்டன், ஏ .பீம் சிங் ,கிருஷ்ணன் பஞ்சு ஆகியவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் திரையின் மிகச் சிறந்த இயக்குனர்களாக விளங்கினார் கள்.

ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை'யில் [1965] அறிமுகமான ஜெய லலிதா தொடர்ந்து வெற்றிப்படக் கதாநாயகியாகத் திகழ்ந்து பின்னாளில் எம்.ஜி.ஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்குப்பின் கட்சித் தலைமையேற்று தமிழ்நாட்டின் முதல்வரானார்.

1969 ல் வெளியான 'சிவந்தமண் 'திரைப்படம் முதன்முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பெருமையைப் பெற்றது.

இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் உருவான 'சிங்கார வேலனே தேவா'என்ற பாடல் எஸ்.ஜானகியை தமிழ் மக்கள் மனதில் அரியணை போட்டு அமர்த்தி வைத்தது.

'குங்குமப் பூவே,கொஞ்சு புறாவே' என்ற பாடல் சந்திபாபுவை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சேர்த்தது.

'சாந்தி நிலையம்' படத்தில் இயற்கை என்னும் இளைய கன்னி' என்று பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் அடுத்து எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்'ணில் பாடிய 'ஆயிரம் நிலவே வா'
பாடலின் வாயிலாகப் பிரசித்தி பெற்று தன இளமை துள்ளும் குரலால் இன்றும் ரசிக்க வைக்கிறார். 

புதுமைப்பித்தன்,நாடோடி மன்னன்,ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண்,ரிக்க்ஷாக்காரன்,உலகம் சுற்றும் வாலிபன், வீர பாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன்,வசந்த மாளிகை,தங்கப்பதக்கம்,கல்யாணப்பரிசு,கொஞ்சும் சலங்கை, களத்தூர் கண்ணம்மா ஆகிய படங்கள் 60 ஆம் ஆண்டுகளின் குறிப்பிடத்தக்க தமிழ்ப்படங்களாகும்.

சிவாஜி கணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' கெய்ரோ திரைப்பட விழாவில் பரிசு பெற்று தமிழ்த் திரையுலகத்துக்கு அடையாளம் பெற்றுத் தந்தது.


முதல் 70 m.m படம் 


ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் உருவான ' ராஜ ராஜ சோழன்' தமிழ்த் திரையுலகின் முதல் 70 m.m  அகல சினிமாஸ்கோப் படமாகும்.

60 களின் பிற்பகுதியில் சாண்டோ சின்னப்பாத் தேவரின் 'தேவர் பிலிம்ஸ்'நிறுவனம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் பல பெரிய வெற்றிப் படங்களைத் தயாரித்து வழங்கியது.

பஞ்சு அருணாசலம்,மருதகாசி போன்றவர்கள் சிறந்த வசன கர்த்தாக்களாக வலம் வந்தார்கள்.

அறுபதுகளின் பிற்பகுதியில் மிகுந்த முற்போக்கு எண்ணம் கொண்ட ஒரு இயக்குனர் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தமிழ்ப்படங்களின் போக்கையே மாற்றினார்.அவர் கே.பாலச்சந்தர்.பிரச்னைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக மக்களின் முன் படைத்த அவரை தமிழ்த் திரையுலகம் பெரும் சாதனையாளராகக் கொண்டாடி வருகிறது.

தற்காலத்தில் தமிழ்த் திரையின் வைரங்களாகச் ஜொலித்து வருகின்ற ரஜனிகாந்த், கமலஹாசன்,பிரகாஷ்ராஜ்,விவேக் போன்றவர்கள் இந்தக் கலைஞனால் கண்டெடுக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்டவர்கள்தான்.

ரஜனி,கமல் 

பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜனிகாந்த், கமலஹாசன்,ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பில் வெளியான ;மூன்று முடிச்சு' தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய அலையைத் தோற்றுவித்தது.

ரஜனி தனித்துவமான ஸ்டைல் நடிப்பால் மக்களைக் கவர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனார்.

கமல் பரீட்சார்த்தமான மற்றும்  வித்தியாசமான தோற்றங்களி லும் கதாபாத்திரங்களிலும் நடித்து சாதனை மேல் சாதனை படைத்து உலக நாயகனானார்.

ஸ்ரீதேவியை  ஹிந்தித் திரையுலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.அங்கேயும்  வெற்றி பெற்று அவர் அகில இந்திய நட்சத்திரமானார்.



                                                                    [   ......... பாகம் -2 ல் தொடர்கிறது. ]







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக