புதன், 9 ஜனவரி, 2013

நாட்டுக்கோழி முட்டை- ஒரு அனுபவம்




நேரம்  கிடைக்கும்போதெல்லாம் நான் எங்களது கிராமத்துக்குப் போவதுண்டு.கிராமத்தில் இருக்கின்ற எங்களின் பழைய பூர்வீக வீட்டில் சற்றே ஒதுங்கி இரண்டாவது நிலைப்படியோடு அமைந்துள்ளது என்னுடைய அறை . நான் ஊரில் இருக்கும்போது மட்டும்தான் அந்த அறை திறக்கப்படும்.


நம்முடைய ரசனை கொஞ்சம் வித்தியாசமானது என்பதால் இசையோ படமோ மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் கேட்க பெரும்பாலும் காதொலிக்கருவி [ ear phone ] யைப் பயன்படுத்துவதால் விசாலமான அந்த அறையில் எப்போதுமே அமைதி நிலவும்.


சில தினங்களுக்கு முன் அந்த அறைக்கு இரண்டு புதிய விருந்தாளிகள் வந்தார்கள்.நான் அப்போது மரக் கட்டிலில் படுத்துக்கொண்டு ஆனந்த விகடன் வாசித்துக் கொண்டிருந் தேன்.அறையின் வாசலுக்கு வெளியே முதலில் ஒரு வாட்ட சாட்டமான சேவல் ஒன்று வந்து நின்றது.சிறிது நேரம் அது அங்கே நின்று அறைக்குள்ளே எதையோ அவதானித்தது.பிறகு அதனிடமிருந்து 'கெக் ' என்று ஒரு சத்தம் வந்தது.


இப்போது நல்ல திடகாத்திரமான கோழியொன்று சேவலின் பின்னே வந்து நின்றதைப் பார்த்தேன்.சேவல் படியேறி மிக மெதுவாக அறைக்குள் நுழைந்தது.அதையும் விட மெதுவாக கோழி சேவலைத் தொடர்ந்து உள்ளே வந்தது.மறுபடியும் நின்று சிறிது அவதானித்து விட்டு சேவல் அறையின் கோடிக்குச் செல்ல கோழி பின்தொடர்ந்தது.சில வினாடிகளில் 'படபட'வெனச் சத்தம் கேட்க மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். 


சுவரோடு அமைக்கப்பட்டிருந்த அலமாரியில் பழைய துணிகள் கிடந்த கீழ்த் தட்டில் கோழி ஏறிப் படுத்துக் கொள்ள சேவல் விறுவிறுவென்று நடந்து வெளியேறியது.


அரைமணி நேரத்துக்குப் பிறகு ஒரு கொக்கரிப்போடு கோழி கீழே இறங்கி வெளியே ஓடியபோது ஏதோ தோன்ற எழுந்து சென்று அலமாரியைப்  பார்த்தேன்.துணிகளுக்கிடையே பழுப்பு நிறத்தில் அழகான ஒரு முட்டை இருந்தது





அடுத்த நாளிலிருந்து கோழி மட்டும் தனியாக வந்தது. நான் கிராமத்தில் இருந்த வரை நாள்தோறும் இந்த நிகழ்வு தொடர்ந்தது. எனக்கு மொத்தம் ஐந்து கோழி முட்டைகள் கிடைத்தன..நேற்று ஊரிலிருந்து சென்னைக்குக் கிளம்பி வந்துவிட்டேன்.வரும்போது அந்த ஐந்து முட்டைகளையும் ஒரு டப்பாவில் போட்டு பத்திரமாகக் கொண்டுவந்து விட்டேன் பிள்ளைகளிடம் காட்டுவதற்காக. அவர்கள்  நாட்டுக் கோழிமுட்டையை இதுவரையில் பார்த்ததில்லை  சாப்பிட்டதுமில்லை.


ரயிலில் வரும்போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
' நாம்தான் ஊரில் இல்லையே.அறை மூடப்பட்டிருக்குமே..? அப்படியானால் அந்தக் கோழி எங்கே போய் முட்டையிடும்..? "
அது அந்தச் சேவலின் பாடு. பாவம் அது. புதிதாக ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க மறுபடி அலைய வேண்டியிருக்கும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக