ஞாயிறு, 13 ஜனவரி, 2013

எப்படி வந்தது இஸ்லாம் இங்கே..?







மிழ்நாட்டின் தென்கோடிக் குமரிமுனை தனது பூகோள அமைப்பால் தொன்று தொட்டே  உலகத் தின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்திருக் கிறது. ஆதிகாலம் முதலாக கிரேக்க, ரோமானிய, அரேபிய மற்றும் சீனக் கப்பல்கள் குமரிமுனை வழியாகவே உலகைச் சுற்றி வந்திருக்கின்றன.

2 ஆம் நூற்றாண்டுக் கிரேக்க பன்முக அறிஞரான தாலமி குமரி முனைக்கு அருகே அமைந்திருக் கின்ற மன்னார் வளைகுடா மிகப்பெரிய முத்துக் குளித் துறையாகவும் கொற்கைத் துறைமுகம் முத்து வணிக மையமாகவும் திகழ்ந்ததாக எழுதியிருக்கிறார்.

றத்தாழ 1100 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது பொது யுகம் [C.E ] 875 காலகட்டத்தில் எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவின் அருகில் இருந்த
 ' Qirafatul Kubra ' என்ற சிறு நகரத்திலிருந்து இஸ்லாமின் முதல் கலீபாவான அபூபக்கர் சித்திக் கின் வம்சத்தைச் சேர்ந்த Bakri பழங்குடிகளான ஆண் களும் பெண்களும் குழந்தைகளுமாக 224 பேர் முகமது கல்ஜி என்பவரது தலைமை யின் கீழ் எகிப்து நாட்டின் கடற்கரையிலிருந்து சில மரக்கல ங்களில் ஏறிப் புறப்பட்டனர்.

மரக்கலம் இந்தியாவின் தென்கோடியில் இருக் கின்ற  ' கொற்கை ' என்று அப்போது வழங்கப்பட்ட இன்றைய காயல்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.  அந்தக் காலத்தில் கொற்கை பாண்டிய மன்னன் அபிராம ராஜா ஆதி ராஜ ராஜா ஜெயவீர ராஜுகர் என்பவரால் ஆளப்பட்டு வந்தது. வந்து சேர்ந்த அந்நியர்களுக்கு மன்னன் குடியிருக்க இடமும் வர்த்தகம் செய்ய வாய்ப்பும் வழங்கினான்.

அடுத்து 1284 ல் எகிப்தில் ஆதிக்கவாதிகளின் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காகப் புகலிடம் தேடிப புறப்பட்டவர்களில் முகமது நபியின் 21 வது வாரிசாகக் கருதப்பட்ட சையத் ஜமாலுதீன் என்ப வரது தலைமையிலான ஒரு குழு அதே கொற்கை யில் வந்து இறங்கியது.அப்போதைய மன்னன் சுந்தர பாண்டியன் அவர்களை வரவேற்று புகலிடம் அளித்தான்.

இந்த இரு நிகழ்வுகளும் பாரத கண்டத்தில் ஒரு புதிய சமுதாயம் உருவாகக் காரணமாக  அமைந்தன.

வந்து சேர்ந்த அரபு மக்கள் வர்த்தகத்தில் சாதுர்யம் மிக்கவர்களாக இருந்தனர். அதனால் வளமான வாழ்க்கை அமைந்தது.நாளடைவில் இவர்கள் உள்நாட்டுத் தமிழ்ப் பெண்களை மணந்து கொண்டார்கள்.விளைவாகத் தமிழ் மொழி பேசு கின்ற இஸ்லாமிய சமுதாயம் ஒன்று உருவானது.

பிற்காலத்தில் சையத் ஜமாலுதீன் பாண்டிய மன்னனால் முகலாயச் சக்ரவர்த்தி குப்லாய் கானின் அரசவைக்கு தூதுவராக அனுப்பி வைக்கப் பட்டார்.பாண்டியனிடம் செல்வாக்குப் பெற்றிருந்த ஜமாலுதீன் மன்னனுக்கு அரபுக் குதிரைகளை விற்பனை செய்து வந்தார்.நாளடைவில் மன்னனின் படைத் தளபதியுமானார்

.மரக்கலம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மரத்தால் செய்யப்பட்ட கப்பல் என்பது பொருள்.மரக்கலத்தில் இந்த மக்கள் வந்ததாலும் மரக்கலம் ஏறி பல நாடு களுக்குச் சென்று வணிகம் செய்ததாலும் இவர்களுக்கு ' மரக்காயர் 'என்ற பெயர் வழங்கலாயிற்று.





Markab என்னும் அரபி வார்த்தைக்கு கப்பல் என்பதே பொருள்.இந்த Markab என்ற சொல்லிலிருந்தே மரக்காயர் என்ற பெயர் வந்தது என்கின்ற கருத்தும் நிலவி வருகிறது.

இலங்கையில் சிங்கள மொழியில் கூட இவர்கள் ' மரக்கலயோ ' Marakkalayo என்றுதான் அழைக்கப் படுகிறார்கள்.இலங்கை முஸ்லிம்கள் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்  ' மரியா அஜீஸ் 'இப்படிச் சொல்கிறார்.

" இந்தியப் பெருங்கடலில் முதல் முஸ்லிம் கடற்பயணம் 636 ல் கலீபா ஓமர் காலத்தில் நிகழ்ந்தது. அது முதலாக முஸ்லிம் வணிகர்கள் இந்தியாவின் மலபார் மற்றும் மேற்குக் கடற்கரை ஓரங்களில் குடியேறத் துவங்கினார்கள் .ஆனால் அதற்கும் முன்பாக இஸ்லாமிய காலத்துக்கும் முற்பட்ட அரேபியர்கள் அங்கே ஏற்கனவே குடியேறியிருந்தார்கள்.".

 1180 ல் தாளா [ Dahla ] மரைக்காயர் என்ற பெருங் கோடீஸ்வரர் காயலிலிருந்து அதிராம் பட்டினத்துக்குக் குடிபெயர்ந்தார். மரைக்கார் பள்ளி என்று தற்போது அழைக்கப்படுகின்ற  அதிராம் பட்டினத்தில் உள்ள Al Masji dul Aqsa என்னும் தொன்மையான பள்ளிவாசல் இவரால்தான் கட்டப்பட்டது.

இவரைத் தொடர்ந்து மரைக்காயர் சமுதாய மக்கள் காலப்போக்கில் கீழக்கரை, தொண்டி, முத்துப் பேட்டை, நாகூர், நாகப்பட்டினம், காரைக்கால் இன்னும் பல கிழக்குக் கரை இடங்களுக்குக் குடி பெயர்ந்தார்கள். புதிய இஸ்லாமிய சமுதாயம் தமிழகக் கடற்கரை நகரங்களில் பரவ ஆரம்பித்தது.

இலங்கையில் Batticolla, Galle ஆகியன  இந்த மக்கள் சென்று குடியேறிய மற்ற இடங்கள்.

" குடியேற்றமும் வணிகமும் மேலும் மேலும் அதிகரித்தது.அதன் விளைவாக இவர்கள் இங்கிருந்து இலங்கையின் கடலோரங்களுக்குச் சென்று குடியேறி தங்களின் வியாபாரத்தைத் தொடர்ந்தார்கள்.'' என்று இங்கிலாந்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான ' James Emerson Tennant'  எழுதியிருக்கிறார்.

இலங்கையில் கொழும்பு நகரின் அருகேயுள்ள ' பெருவெலா ' என்ற சிறு நகரம் இன்றும் இந்த மக்களின் செல்வாக்கின் ஒரு அடையாளமாகத் திகழ்கிறது.கிபி 1024 ல் காயலிலிருந்து இங்கு வந்து குடியேறிய மரைக்காயர்கள் இங்கே நெசவுக் கலையை அறிமுகப் படுத்தினார்கள்.

கிழக்குக் கரையைச் சென்றடைந்தவர்கள் ' பட்டிகோலா ' வின் அருகேயுள்ள காத்தான் குடியில் குடியமர்ந்தார்கள்.இன்று காத்தான்குடி முற்றிலுமான ஒரு முஸ்லிம் நகரம் மட்டுமல்ல. சதுர கிலோமீட்டர் கணக்கில் உலகிலேயே அதிக மசூதிகளைக் கொண்டுள்ள நகரமும் ஆகும்.

தங்க ஆபரணங்கள், வைரம், முத்துக்கள்,விலை மதிப்புள்ள கற்கள், துணிமணி கள், மரம் ஆகியவை மரைக்காயர்களின் முக்கிய வணிகப் பொருட்களாக இருந்தன. மன்னார் வளைகுடாவில் விளைந்த முத்துக்கள் அரேபிய குதிரைகளுக்கு பண்டமாற்று செய்யப்பட்டன.

அவர்களின் வணிகத் தொடர்பு இலங்கை மற்றும் மலேயாத் தீவுகளையும் கடந்து அரேபியா,சீனா , ஐரோப்பா என்று உலகம் முழுவதும் பரந்து வியாபித்திருந்தது. உலகமயமாக்கலின் விளைவாக தற்காலத்தில் சிறப்புற்று விளங்குகின்ற ஏற்றுமதி , இறக்குமதி வணிகத்தின் முன்னோடி களாக  மரக் காயர்களையும் குறிப்பிடலாம்.

மரக்காயர் மக்கள் கட்டுக்கோப்பானவர்கள். தங்களின் தனித்தன்மையைக் கட்டிக் காப்பதற்காக வெளிச் சமுதாயத்தைத் தவிர்த்து தங்களுக் குள்ளேயே திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.அரபு மற்றும் தமிழ்ப் பண்பாடு இணைந்து கலந்த கலாச்சாரம் அவர்களுடையது.

அவர்களின் வழக்குப் பேச்சில் கூட அரபியும் தமிழும் கலந்த ஒரு மணிப் பிரவாள நடையை இன்றும் காணலாம்.

" இங்கே கொஞ்சம் ரஹாத்தா இருக்கும் " - ரஹாத் -அரபி.-வசதி-தமிழ்.

" காயர் அல்லா போதுமானவன் ."   - காயர் -அரபி -எப்படியானாலும் -தமிழ்.

இந்தச் சொற்றொடர்கள் மறக்காயர்களின் பேச்சு வழக்குக்கு சில உதாரணங்கள்.

இராமநாதபுரத்துக்கு அருகில் மரக்காயர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற ஒரு சிற்றூரின் பெயர் ' மரக்காயர் பட்டிணம்'.தொலைதூர நாடு களுக்கு மரக்கலம் ஒட்டிய அனுபவம் கொண்ட முதியவர்கள் சிலரை இன்றும் கூட நாம் இங்கே சந்திக்கலாம்.மரக்காயர் சமுதாயத்தின் இன்றைய தலைமுறை இளைஞர்கள் உலக மாறுதல்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளிலும் கால் பதித்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

பெரும் வணிகரும் வள்ளலுமான கீழக்கரையைச் சேர்ந்த சீதக்காதி என்று அழைக்கப்படுகின்ற ' ஷேக் அப்துல் காதர் ' மரக்காயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.

' குஞ்சலி மரக்காயர் ' என்று அழைக்கப்பட்ட ஒரு குடும்பத்தினர் பல தலைமுறைகளாக மலபார் பகுதி இந்து நாயர் மன்னர்களிடம் கடற்படைத் தளபதிகளாக சிறப்பாகப் பணி செய்தார்கள்.

கீழக்கரையில் வாழும் மரக்காயர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கல்விக் கூடங்களைத் துவங்கி பெரும் சேவை செய்து வருகிறார்கள்.

சிறந்த விஞ்ஞானியாகவும் இந்தியப் பெருநாட்டின் குடியரசுத் தலைவராகவும் திகழ்ந்த இன்றைய இளைஞர்களின் ஆதர்ஷண மனிதர் ஏ .பி .ஜெ . அப்துல் கலாம் மரக்காயர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது இந்த மக்களுக்கு இன்னும் ஒரு பெருமையாகிறது.

துருக்கி நாட்டில் ஓட்டோமான் சாம்ராஜ்யம் செழிப்புற்று விளங்கிய காலம் அது.சோழர்கள் செல்ஜுக் [ Seljuk ] துருக்கியரோடு வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தார்கள். பிரதிபலனாக தங்கள் நாட்டில் வணிகம் செய்ய வருமாறு துருக்கியர் களுக்கு சோழர்கள் அழைப்பு விடுத்தார்கள்.1212 ல் இஸ்லாமிய ஹனாபி [ Hanafi School ] பிரிவைச் சேர்ந்த துருக்கிய வியாபாரிகளும் சமய போதகர்களும் ஒரு பெரும் கப்பல் அணியோடு சோழ நாட்டின் கிழக்குக் கடற்கரையில் வந்து இறங்கினார்கள்.

தரங்கம்பாடி , நாகப்பட்டினம் , முத்துப்பேட்டை ,காரைக்கால் , பொதக்குடி , கூத்தாநல்லூர் ஆகிய இடங்களில் அவர்கள் குடியேறினார்கள். இவர்களைப் பற்றிய துருக்கிய மொழியிலான
 [ Turkish Anatolian, Turkish Safavit ] வரலாற்றுக் குறிப்புகள் தஞ்சாவூர் முதல் திருவாரூர் வரை யிலான பகுதிகளில் முக்கியமாக கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல், சின்னப்பள்ளி ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.





1850 ஆம் ஆண்டில் கூத்தாநல்லூர் பெரிய பள்ளி வாசலில் இருந்த சில துருக்கிய மொழிக் குறிப்புகள் திரு போயின.அதன்பின் இந்தக் குறிப்புகள் சென்னை அருங் காட்சியகத்தால் கையகப் படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தமிழகக் கடற்கரையில்  மூன்றாவது இஸ்லாமிய அலையேற்றம் நிகழ்ந்தது.


காலப்போக்கில் துருக்கிய இஸ்லாமியர்களும் இஸ்லாத்தைத் தழுவிய இந்தியர்களுமாக முஸ்லிம் சமுதாயம் வளர்ச்சி பெற்றது.


டுத்ததாக 13 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய ராஜ குடும்பத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டது.மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் தனக்குப் பிறகு தனது இரண்டாவது மகனான ஜடாவர்மன் வீரபாண்டியனுக்கு முடி சூட்ட விரும்பினான்.அரச குல வழக்கத்துக்கு மாறான இந்த முடிவால் பொங்கியெழுந்த மூத்த மகன் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தந்தையைக் கொன்றுவிட்டு தானே மன்னனாக முடி சூட்டிக் கொண்டான்.சில பாளையக்காரர்கள் இளையவனுக் குத் துணையாக நின்றார்கள். விளைவாகப் போர் மூண்டது.


சுந்தர பாண்டியன் தோற்கடிக்கப்பட்டு விரட்டப் பட்டான்.அப்போது த்வார  சமுத்ரத்தில் முகாமிட்டிருந்த வடக்கு இந்தியாவை ஆண்டு வந்த அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதியான மாலிக் காபூரிடம் உதவி கோரினான் சுந்தர பாண்டியன். ஏதோ ஒன்றைத் தனக்குள் திட்டமிட்டபடி மதுரை நோக்கிக் கிளம்பினான் மாலிக் கபூர்.


1311 ஆம் ஆண்டில் முதல் முதலாக முஸ்லிம் படையொன்று தமிழ் நாட்டுக்குள் புகுந்தது. படையினர் வந்த பாதைகளிலும் தங்கிய இடங்களிலும் இஸ்லாம் விதைக்கப்பட்டது.  வெகுவேகமாக அது வளர்ந்து ,பரவிச் செழித்தது. பாண்டிய அரச குலத்தில் ஏற்பட்ட ஒரு குடும்பப் பிரச்னையே இதற்குக் காரணமாக அமைந்தது.


உதவிக்கு வந்த மாலிக் கபூர் பின்னாட்களில் சுந்தர பாண்டியனுக்கு எதிரியாகவே மாறினான்.ஏனெனில் மாலிக் காபூர் மதுரைக்கு வந்தது சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்யவோ அல்லது மதுரையை டெல்லி சுல்தானின் ஆளுகைக்குள் கொண்டு வரவோ அல்ல.


இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறிய மகிழ்வோடு மாலிக் காபூரின் படை வடக்கு நோக்கித் திரும்பியது  என்றால் அவர் அறிமுகம் செய்து வைத்த இஸ்லாம் வளர்ச்சியை நோக்கித் திரும்பியது.




' ரவுத் ' என்ற அரபி மொழிச் சொல்லுக்கு குதிரை என்பது பொருள்.குதிரை 
ஓட்டியவர்கள்  ' ரவுத்தர் ' என்றழைக்கப்பட்டார்கள். குதிரை வீரர்களாக வந்த சுல்தானின்  படை வீரர்கள் ராவுத்தர்கள் ஆனார்கள். அவர்களுடைய சந்ததி களுக்கும் அதே பெயர் நிலைத்துப் போனது.

வடக்கு தமிழ்நாட்டில் மாலிக் காபூர் வழிவந்தவர் களும் சோழ நாட்டில் துருக்கிய வம்சத்தவர் களுமாக வளர்ந்த முஸ்லிம் சமுதாய மக்கள் பொதுவாக ' ராவுத்தர்கள் ' என்று அழைக்கப் பட்டார்கள். துருக்கி யிலிருந்து வந்தவர்கள் என்று பொருள் படும் வகையில் சமீப காலம் வரை இந்த மக்கள் 'துருக்கர்' அல்லது 'துலுக்கர்' என்றும் அழைக்கப் பட்டனர். தற்போது இந்த வார்த்தைப் பிரயோகம் வழக்கொழிந்து போய் விட்டது.


கிப்து நாட்டிலிருந்து வந்து காயல்பட்டினம் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் குடியேறிய அரபு வணிக சமுதாய மக்களில் சிலர் கற்றறிந்தவர் களாகவும் ஸுபி [ Sufi ] துறவிகளாக வும் இருந்தார்கள்.அவர்கள் மற்ற இஸ்லாமியர் களுக்கு மதச் சடங்குகளை நிறைவேற்றித் தருபவர் களாகவும் இமாம்களாகவும் மறைப்பணி புரிந்தார்கள்.

இதன் காரணமாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும் வகையில் 'நான் இங்கே இருக்கிறேன் ' என்று பொருள் தருகின்ற 'Lebbay 'என்ற  அரபு மொழிச் சொல்லால் அவர்கள் அழைக்கப் பட்டார்கள்.காலப்போக்கில் இவர்களின் சந்ததிகளும் இவர்களின் வழித்தோன்றல்களான இந்திய முஸ்லிம்களும் கூட லெப்பை என்ற பெயராலேயே அடையாளம் காணப்பெற்றார்கள்.


' லெப்பை ' என்கிற மத அடிப்படையிலான அடையாளம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கணக்கெடுப்பின் விளைவாக இனக்குறியீடாக மாறியது. இன்றைய காலத்தில் தமிழ்நாட்டின் காயல்பட்டிணம், அதிராம் பட்டிணம் ஆகிய தென்பகுதிகளில் வாழுகின்ற லெப்பை சமுதாய மக்கள் தமிழ்மொழி பேசுபவர்களாகவும் வாணியம்பாடி,வேலூர் ஆகிய வட பகுதிகளில் வாழ்பவர்கள் உருது மொழி பேசுபவர்களாகவும் உள்ளனர்.


லெப்பைகள் சிறந்த வணிகர்கள்.13 ஆம் நூற்றாண்டு காலத்தில் இவர்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனா வரையிலும் தோல், புகையிலை, வாசனைத் திரவியங்கள் வணிகம் செய்தார்கள். 


சித்தி லெப்பை என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மலேசிய நாட்டின் பெராக் மாநிலத்தின் ஒட்டுமொத்த தகர வியாபாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார். தற்காலத்திலும்  வேலூர் பகுதியில் வாழுகின்ற லெப்பைகள் தோல் வணிகத்திலும் கொடிக்கால் என்று சொல்லப்படுகின்ற வெற்றிலை விவசாயத் திலும் சிறந்து விளங்குகிறார்கள் .பெண்கள் பாய் முடைவதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார் கள்.


மதுரைப் பகுதி லெப்பை முஸ்லிம்கள் சற்று வித்தியாசமாக திறமையான கொல்லர்களாக இருக்கிறார்கள்.மிகப் பெரிய அளவிலான வெண்கலக் கொள்கலன்களை உருவாக்குவதில் இவர்கள் உலகப்புகழ் பெற்றிருக்கிறார் கள்.


லெப்பைகள் இப்பொழுது சிறந்த கல்வியாளர் களாகவும் மாறியிருக்கிறார்கள். சென்னையில் புதுக் கல்லூரி, ஜஸ்டிஸ் பஷீர் அஹமது செய்யது பெண்கள் கல்லூரி, திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, வாணியம்பாடியில் இஸ்லாமியா கல்லூரி ஆகியவை லெப்பைகளால் நடத்தப் படுகின்ற சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும்.


தமிழக முஸ்லிம் மக்கள் இப்படி மூன்று பெரும் பிரிவுகளாக பிரிந்திருந்தாலும்  ஒற்றுமையாக இணைந்து ஒரே சமுதாயமாக வாழ்கிறார்கள்.


இஸ்லாமிய மக்கள் தங்களின் உற்றார் உறவினரின் மீது மிகுந்த நேசம் கொண்டவர்கள். அதே நேசத்தை அவர்கள் தங்களின் தாய்மொழி மீதும் தாய் நாட்டின் மீதும் கொண்டிருக்கிறார்கள்.





















1 கருத்து:

  1. ----------------------------------------------------

    வாதீடு: 087
    "கப்பல் ஓட்டிய மரக்காயர் யாவரோ?"

    பொருல்:
    "தம்புல்ல என்ப, தம்முடய்ய பில்லய்யே."
    "வாப்பா என்ப, வாருங்கோ அப்பாவே."
    "உம்மா என்ப, உயிர் கொடுத்த அம்மாவே."

    கப்பல் மனி:
    னியூசிலாந்து தேசத்தின் தலய்மய்யிடமான வெலிங்டன் அருங்காட்சியகத்தில், கப்பலுக்குரிய, தமிலு எலுத்துடன் கூடிய, ஒடய்ந்த வென்கல மனி ஒன்ரு பேனிக் காக்கப்பட்டு வருது. அந்த ஒடய்ந்த வென்கல மனியின் விலிம்பில், "முகய்யதீன் வக்குசுடய்ய கப்பல் உடய்ய மனி" என்ரு எலுதப்பட்டு உல்லதாகச் சொல்லப்படுது. அந்த ஒடய்ந்த வென்கல மனியய், 1836ஆம் ஆன்டில் வில்லியம் கோல்ன்சோ (William Colenso) என்னும் இங்கிலாந்து தேசத்தின் மதப் போதகர், னியூசிலாந்து தேசத்தின் வெங்கேரி (Whangarei) என்னும் இடத்தின் அருகில் வசித்த ஆதிமக்கலிடம் இருந்து, கன்டெடுத்ததாகச் சொல்லப்படுது. இதன்மூலம் பல னூட்ரான்டுக்கு முன்பே, இலம்பிரய்போட்ரியார் ஒருவர், கடல் வனிகத்தில் ஈடுபட்டு இருந்ததும், அவர் னியூசிலாந்து தேசத்துக்கே சென்ரு சேர்ந்த விபரமும் தெரியவருது.

    ----------------------------------------------------

    பதிலளிநீக்கு