வெள்ளி, 6 ஜூலை, 2012

மண்பானைச் சமையல்,,மாவிலைத் தோரணம்



இயற்கையோடு இணைந்த தமிழர் வாழ்க்கை 


பண்டைக்காலம் முதலாகவே தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை மேற்கொண்டிருந்தார்கள்..தங்களின் அன்றாட வாழ்க்கையில்  ஏராளமான இயற்கை மருத்துவ முறைகளைக்  கடைப்பிடித்து வந்தார்கள்..இந்தக்காலத்திலும் கூட கிராமங்களில் முதியவர்கள் வேப்பங் குச்சியில் பல் துலக்குவதைப் பார்க்கலாம்.. 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி''என்று ஆத்திச்சூடி பாடினார் அவ்வையார்.. இந்தப் பழக்கம் பற்கள் ,ஈறுகள்  மட்டுமல்லாமல் உடலுக்கும் ஆரோக்கியம்  தருவதாகும்..


தமிழர்கள் கட்டாயமாகக் கடைப்பிடித்து வந்த நல்லெண்ணெய்க் குளியல் உடல் சூடாவதிலிருந்து பாதுகாப்பு அளித்தது..பெண்கள் தங்களின் உடல் தோலை மிருதுவாக வைத்திருக்க மஞ்சள் பூசிக் குளித்தார்கள்..கிருமி நாசினியான மஞ்சள் தோல் நோய்களிலிருந்தும் உடலைக் காத்தது. பருக்களை அகற்ற வெந்தயப் பசையைப் பூசினார்கள்..

குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பைச் சீராக்க மோரில் வெந்தயம் கலந்து குடிக்கும்படி மூத்த பெண்கள் அறிவுரை கூறினார்கள்.. தலைவலிக்கு வெங்காயத்தை அரைத்துப் பூசினார்கள். .துளசி, ,மிளகு, திப்பிலி,,பனங்கற்கண்டு ஆகியன கலந்த கஷாயம் சளிக்கும்  காய்ச்சலுக்கும்  மருந்தாக விளங்கியது.. நீரிழிவு வியாதியைக் கட்டுப் படுத்த பாகற்காயையும் நெல்லிக்காயையும் சாப்பிட்டார்கள்.பனை நுங்கு அம்மை நோய்க்கு அருமருந்தானது..பனங்கிழங்கு பலம் நிறைந்த உணவானது..பதநீரும் கள்ளும் பானமானது..ஊன் சோறு உண்டால் அது செரிப்பதற்காக வெற்றிலையை மென்றார்கள்..

தமிழர்களின் தினசரியான உணவுகள் கூட மருத்துவக் குணங்களுடன் அமைந்திருந்தன..ஆவியில் வேகவைக்கப்பட்ட அரிசி மாவிலான இட்லி, இடியாப்பம்,,நெருப்புச் சூட்டில் வேகவைக்கப்பட்ட உளுந்து கலந்த அரிசி மாவிலான தோசை,,மூங்கில் குழலில் வேகவைக்கப் பட்ட புட்டு இவை எல்லாமே மிக எளிதில் செரிக்கக்கூடிய அதே சமயம் உடலுக்குச் சக்தி அளிக்கக்கூடிய எளிமையான ஆரோக்கிய உணவுகளாகும்..

பாலும்,நெய்யும்,பாலைப் புளிக்க வைத்துக் கிடைக்கின்ற தயிரும் மோரும் உடலுக்கு மிகுந்த நலன் தரும் உணவுகளாகும்.. மோரைக் கொண்டு மோர்க் குழம்பும் செய்யப்பட்டது.. இரவில் சோற்றில் ஊற்றி வைக்கப்பட்ட நீர் காலையில் நீர் ஆகாரமாக மாறி உடலுக்குச் சக்தியளித்தது..கேழ்வரகுக் கூழில் புளித்த மோர் கலந்த அமிர்தம் போன்ற உணவு அவர்களுக்கு ஆனந்தம் அளித்தது..காய்கறிகளையும் புளியையும் நீரையும்  வைத்து புளிக்குழம்பு சமைக்கப்பட்டது..

அரிசியும் நெய்யும் சர்க்கரையும் சேர்த்து வேகவைத்தது சர்க்கரைப் பொங்கல். அரிசி மாவும் பாலும் தேங்காயும் கலந்து பிடித்து வேகவைத்தது கொழுக் கட்டை..மண்பாண்டச் சமையல் தமிழர் வாழ்வின் இன்னொரு மிகச் சிறந்த அம்சமாகும்..மண்பானையில் காற்றோட்டமுள்ள நுண்துளைகள் இருப்பதால் அதில் சமைக்கப் படும்போது பானைக்குள் இயற்கைச் சாறுகள் உருவாகி சமைக்கப்படுகின்ற உணவு சுவை மற்றும் சத்துள்ளதாகவும் கெட்டுப்  போகாமலும் உள்ளது..மண்பானையில் சமைப்பது உணவு அதிகமாக வெந்து போவதையும் கருகிப்போவதையும் தடுக்கிறது..

மண்பானைச் சமையலின் சுவையும் சுகாதாரமும் இப்போது உலக அளவில் தெரிய வந்துள்ளதால் நட்சத்திர ஓட்டல்களும் நகர மாந்தர்களும் அதைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்..வாழை இலையில் உணவு அருந்துவதும் மங்கள காரியங்களுக்கு வாசலில் வாழை மரம் கட்டுவதும் மாவிலைத் தோரணம் அமைப்பதும் தேங்காய் உடைப்பதும் அந்த இயற்கை வளங்களின் மருத்துவக் குணங்களை அவர்கள் அறிந்து கொண்டதால்தான்..

வடபுலத்தில் நிறைந்திருக்கும் காந்த மண்டலம் தம் மூளையைப் பாதிக்காதிருக்க வடதிசையில் தலை வைத்துப் படுப்பதைத் தவிர்த்தார்கள்..

வயல் உழுது,, வண்டியிழுத்து தம்மை வாழ வைத்த காளைகளுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தைப்பொங்கலன்று அவற்றை அலங்கரித்து அன்னம் ஊட்டி ஆராதித்தார்கள்..சேவலின் கூவலை அன்றாடப் பணி துவக்கும் அடையாளமாக ஏற்றார்கள்..சுவர்ப் பல்லியின் சத்தத்தை சுபச் சகுனமாகக் கொண்டார்கள்..

என்றோ தம்மோடு வாழ்ந்து எதற்காகவோ தமக்காக உயிர்த்தியாகம் செய்த அய்யனாரையும் , கருப்பசாமியையும் ,சுடலை மாடனையும்  காவல் தெய்வங்களாக வணங்கினார்கள்..மழை என்னும் மாரியைத் தெய்வமாக்கிக் கோவில் கட்டிக் கும்பிட்டார்கள்.மனதில் பக்தியோடு புது விதையிட்டு மண்தொட்டியில் தாம் வளர்த்த முளைப்பாரியை மாரி அம்மனுக்குப் படைத்தார்கள்..இந்தப் பூமியை தம்மைப் பெற்றெடுத்த தாயாகக் கருதி பூமித்தாய் என்றழைத்தார்கள்..

வீட்டு வாசல்களில் பசுஞ்சாணம் தெளித்தும் வேப்பிலை கட்டியும்  நோய்க் கிருமிகளை தவிர்த்தார்கள்..முற்றத்தில் துளசி வளர்த்து சுற்றுச் சூழல் காத்தார்கள்..அரிசிமாவுக் கோலமிட்டு எறும்புகளுக்கு அன்னம்  படைத் தார்கள்.. 

கன்று ஈன்ற தம் கால்நடைகளின் தொப்புள் கொடியை பால்வளம் நிறைந்த ஆலமரத்தின் கிளையில் கட்டி கன்றீன்ட தாய்க்கு பால்வளம் தரக்கோரி வேண்டுதல் செய்தார்கள்..

வேம்பின் மகத்துவம் தெரிந்துதான் அவர்கள் வீட்டுக்கொரு வேப்ப மரம் வளர்த்தார்கள்..வெகு அரிதாக, இணைந்து முளைத்து வளர்ந்த தெய்வீகக் குணங்களைக் கொண்ட வேப்பமரத்துக்கும் அரச மரத்துக்கும் ஊர்கூடித் திருமணம் செய்வித்து உவகை கொண்டார்கள்..

சிட்டுக்குருவி  இணைகளுக்கு  தங்கள் வீடுகளின் முன்னறையில் மண்பானைக் கூடு அமைத்துத் தந்து அவை குடும்பமாகிக் குதூகலிப்பதைக் கண்டு மகிழ்ந்தார்கள்..

திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற 'கூத்தங்குளம்' கிராமம் பண்டைய காலம் தொட்ட தமிழரின் குணத்துக்கு இன்றும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது..அந்த ஊரில் இனப் பெருக்கத்துக்காக வந்து தங்கியிருக்கும்  பன்னாட்டுப் பறவைகளைத் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக ஊர்க்காரர்கள் பட்டாசு வெடிக்கும் தீபாவளிப் பண்டிகையை பல ஆண்டுகளாகக் கொண்டாடுவதேயில்லை..

இந்த உலகம் தமக்காக மட்டும் படைக்கப்பட்டதல்ல..இந்த உலகத்தில் வாழ்கின்ற எல்லா உயிரினங்களுக்கும் இந்த உலகத்தின் மீது எல்லா உரிமையும் உள்ளது என்று தமிழர்கள் கருதினார்கள்..தமிழரின் இந்தக் குணத்தைக் கண்டுதான் பாரதி பாடினார் ' காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்று..










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக